வெள்ளி, 1 ஏப்ரல், 2016

அதிமுக வேட்பாளர் நேர்காணலை திடீரென்று ரத்து செய்து அதிர்ச்சி வைத்தியம்...போயஸ் கார்டனில்...

சத்தமே இல்லாமல்  அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை கார்டனில் வைத்து நடத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, ஏப்ரல் 1 ல் ( இன்று)  நடத்தவிருந்த நேர்காணலை ரத்து செய்து கட்சியினருக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் இந்த அதிர்ச்சி வைத்தியம் புதிதல்ல. கடந்த வாரத்தில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் ஐக்கியமான அன்றும் இப்படித்தான் நேர்காணலை ரத்து செய்து ஷாக் கொடுத்தார். ஆனால், அதை கட்சியினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
"அம்மா, மிகுந்த மன உளைச்சல் காரணமாக இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்... இரண்டொரு நாளில் அம்மா பழைய மூடுக்கு வந்து விடுவார். எல்லாம் சரியாகி விடும்" என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு கார்டன் ஏரியாவில் வலம் வந்ததைப் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் இன்று ஜெயலலிதா ரத்து செய்திருப்பது சென்னைக்கான நேர்காணலை என்பதுதான் கூடுதல் அதிர்ச்சிக்கான காரணம். சென்னையைப் பொறுத்த வரையில்,  கட்சிப் பொறுப்பில் இருக்கிற அத்தனை நிர்வாகிகளின் ஜாதகமும் ஜெயலலிதாவுக்கு அத்துப்படி.  சென்னை மாவட்ட  நிர்வாகிகளின் பதவிக்கான ஆயுள் என்பது பலகீனமாக இருக்கும் காரணமும் இதனால்தான்.

ஏப்ரல் 1 அன்று சென்னையின் மூன்று மாவட்ட  நேர்காணல் மட்டுமல்ல, இனி நேர்காணல் என்பதே இருக்குமா ? என்ற சந்தேகமும்  கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம் ?   த.மா.கா. உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணிக்குள் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதால் ஏற்பட்ட சஞ்சலமா அல்லது வேறேதும் பின்னனி உண்டா  என்பது குறித்து விசாரித்தேன்...
நம்மிடம் பேசியவர்கள், "  எம்.எல்.ஏ. சீட் கேட்டு அம்மாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை, எந்த கட்சியிலும் இல்லாத அளவு என்பது  அனைவருக்கும் தெரியும். அதே அளவுக்கு தவறான தகவல்களை வேட்பு மனுவில் காட்டியிருப்பதும் அதிமுகவில்தான் என்று தெரிய வரும் போது அதிர்ச்சி இல்லாமல் இருக்குமா ?

கட்சி மாவட்டத்தில் இருப்பது  50 மாவட்டச் செயலாளர்கள்  என்றால் அதே எண்ணிக்கையில் பிற அணி மாவட்டச் செயலாளர்களும் அதிமுகவில்தான் இருக்கிறார்கள். ஒரு தொகுதிக்கு பத்து பேர் என்ற அளவில் சீட் கேட்டிருந்தாலும்  தலைமையில் இருந்து தொகுதிக்கு ஐந்து பேர் என்ற கணக்கில்தான் நேர்காணலுக்கே அழைத்தார்கள்.
அப்போதே ஓரளவு அவர்கள் பில்டர் செய்துதான் பத்தில் ஐந்து என்ற கணக்கில் ஆட்களை  நேர்காணலுக்கு வரவழைத்தார்கள். அந்த ஐந்தே சரில்லை என்கிற கடைசிக் கட்ட தகவலால்தான் இப்போது நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

சொல்லப் போனால்,  'எல்லாக் கோட்டையும் அழி, நான் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன்'  என்ற கணக்கில்தான்  அம்மா மீண்டும் முதலில் இருந்து கோட்டைப் போட ஆரம்பித்திருக்கிறார் " என்றனர்.

தவறான தகவல்களை கொடுத்து என்றால், எது மாதிரியான தகவல் ? அதையும் கேட்டேன்.
''மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. கணிதா சம்பத். இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார். ஒரு வேளை தனக்கு சீட் கிடைக்காமல் போய் விட்டால் என்னாவது என்ற நினைப்பில் அவருடைய கணவரையும் இதே தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்ய வைத்திருக்கிறார். கணிதா சம்பத்தின் கணவரான சம்பத்குமார் , மதுராந்தகம் அல்லது செய்யூர் தொகுதியை கேட்டு மனுதாக்கல் செய்திருக்கிறார்.
அடுத்தடுத்து செங்கல்பட்டு பகுதியில் நடந்து வரும் ரியல் எஸ்டேட் கொலைகள் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டு வரும் நிலையில், அப்படியொரு கொலை கடந்த ஆண்டு, (28.1.2014) செங்கல்பட்டு கூட்டுறவு அர்பன் வங்கி அருகே நடந்தது. வி.ராஜகோபால் என்பவர்  படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கொலையுண்டா ராஜகோபாலின் மகன் செந்தில்குமார் கொடுத்த  புகாரில்,  கணிதா சம்பத்தின் கணவர் சம்பத்குமார் பெயர் இந்த கொலை வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக செங்கல்பட்டு (எஃப்.ஐ. ஆர். எண் :144/14) போலீஸ் நிலையத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

எம்.எல்.ஏ. சீட் கேட்டு வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பலர்,  இதுபோல் எஃப்.ஐ.ஆரில் சிக்கியவர்கள் என்ற தகவல் அம்மாவின் பார்வைக்குப் போயுள்ளது. சென்னையிலும் இந்த மாதிரியான லிஸ்ட்கள் அதிகமாக இருக்கிறது என்று அம்மாவின் நம்பகமான உளவு டீம் தகவல்களை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால், இது லேட்டாக அம்மா கைக்கு கிடைத்திருக்கிறது. அம்மா கைக்கு லேட்டாக இந்தத் தகவல்கள் போய்ச் சேர்ந்ததுக்கும் ஒரு பின்னணி இருக்கிறது. அது தொடர்பாக தனி விசாரணை போய்க் கொண்டிருக்கிறது ... '' என்கின்றனர்.
கார்டனின் அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் பல இருக்க, கார்டனே அதிர்ச்சியாகிக் கிடக்கும் தகவலும் இப்போது  கசிய ஆரம்பித்திருக்கிறது. " எப்படியும் நமக்கு சீட் கிடைக்கப் போறதில்லை. ஒண்ணு நமக்கு வேண்டியவங்களுக்கு எம்.எல்.ஏ. சீட்டை வாங்கிக் கொடுத்துடணும். இல்லைனா நம்ம  அரசியல் எதிரிக்கு சீட் கிடைக்காம பார்த்துக் கொள்ள வேண்டும்  " என்ற ட்ராக் போட்டு,  ஜரூராக வேலை பார்க்கும் கும்பலின் மாஸ்டர் பிளானை எப்படி காலி செய்வது என்பதே கார்டனின் லேட்டஸ்ட் கவலை.

கார்டனையே யோசிக்க வெச்சுட்டீங்களே...!
 
- ந.பா.சேதுராமன்   விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக