வெள்ளி, 8 ஏப்ரல், 2016

‘தி இந்து’: ஒரு சிறுபான்மை விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து வந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக....


சமஸ் : அவர் வரலாற்றில் இருக்கிறார்!  மனிதர்களை மதிப்பிடும்போது அவரவர் சாதியின் பின்னணியைக் கொண்டுவந்து பொருத்திப் பேசும் அசிங்கம் இங்கு பொதுவானதாகவே இருக்கிறது. ‘‘பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனியம் வந்தது. எனவேதான், பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்” என்று சொன்னவர் பெரியார். எனினும், வேறுபாடு இருக்கிறது. ஆதிக்கச் சாதியை நோக்கிய வசை என்பது வலியில் உருவாகும் கோபத்தின் வெளிப்பாடு. ஒடுக்கப்பட்ட சாதிகளை நோக்கிய வசை என்பது இழிவான எண்ணத்தின் வெளிப்பாடு.  நிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் ‘‘இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்து பிழைக்கலாம்’’ என்று கூறினாலே அது எந்த வேலையைக் குறிக்கும் என்பது எல்லோருக்கும் புரியும். திமுக தலைவர் கருணாநிதி மீதான விமர்சனத்தின்போது, நீட்டி முழங்கி, வலிய கருணாநிதியின் சாதியை இந்த வசவின் பின்னணியில் கொண்டுவந்து இணைத்தார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. “நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை. அவருக்கு நாகஸ்வரம் வாசிக்கக் கூடியத் தொழில் தெரியும். அதனால் சொன்னேன்” என்றபோது வைகோவிடமிருந்து வெளிப்பட்ட உடல்மொழி, அவரது வார்த்தைகளைக் காட்டிலும் ஆபாசமானது. திமுக மீதான பலரின் காழ்ப்புணர்வுக்குப் பின்னணியிலும்கூட என்னைப் (கலைஞர்) போன்ற ஒரு எளியவன் தலைமையில் அது இயங்குவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆற்றாமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எவ்வளவு உயரம் போனாலும் இங்கு சாதியம் பின்னின்று தாக்குதல் நடத்தும்.
;வைகோ இப்போது மன்னிப்புக் கேட்டிருக்கிறார். வைகோவிடமிருந்து இந்த வார்த்தைகள் வெளிப்பட்டது இன்றைக்குப் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும், மனிதர்களை மதிப்பிடும்போது அவரவர் சாதியின் பின்னணியைக் கொண்டுவந்து பொருத்திப் பேசும் அசிங்கம் இங்கு பொதுவானதாகவே இருக்கிறது. பொதுமேடைகளில் இதை அரசியல் கலாச்சாரமாக வார்த்தெடுத்ததில் திராவிட இயக்கத்துக்கும் முக்கியமான பங்கு உண்டு. சாதியத்தையும் சாதியையும் சாடுவது வேறு; எல்லா மனிதர்களையும் அவர் பிறப்பின் அடிப்படையில் சாதியோடு சேர்த்துப் பொதுமைப்படுத்தி வசைபாடுவது வேறு. சாதி ஒழிப்புக்காக இறுதி வரை போராடிய பெரியாரும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘‘பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனியம் வந்தது. எனவேதான், பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்” என்று சொன்னவர் பெரியார். எனினும், வேறுபாடு இருக்கிறது. ஆதிக்கச் சாதியை நோக்கிய வசை என்பது வலியில் உருவாகும் கோபத்தின் வெளிப்பாடு. ஒடுக்கப்பட்ட சாதிகளை நோக்கிய வசை என்பது இழிவான எண்ணத்தின் வெளிப்பாடு. >தமிழக அரசியல் தலைவர்கள் பலரிடம் கருணாநிதி மீதான விமர்சனங்களில் சாதி கூர்மையாகத் தனித்து இயங்கு வதை ஒரு செய்தியாளனாகப் பல்வேறு தருணங்களில் கவனித்திருக்கிறேன். வைகோ, கருணாநிதியைச் சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியபோது என் ஞாபகங்கள், மறைந்த கலை விமர்சகர் தேனுகாவை நோக்கி இயல்பாகச் சென்றன. கும்பகோணத்துக்குக் கடந்த அரை நூற்றாண்டில், எந்த எழுத்தாளர், கலைஞர் சென்றிருந்தாலும் அவர்கள் தேனுகாவைச் சந்திக்காமல் பெரும்பாலும் ஊர் திரும்பியிருக்க மாட்டார்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தேடித் தேடி ஓடிப் படைப்பாளிகளைப் போஷித்து, உவகை அடைந்தவர் அவர். எந்தக் கோயிலுக்குப் போனாலும், அங்குள்ள சிற்பங்களைப் பார்த்த மாத்திரத்தில், அது எந்தக் காலத்தையது, யாருடைய ஆட்சி பாணி என்று தேனுகாவால் சொல்ல முடியும். சிற்பங்களின் தாள லயங்களைப் பேசிக்கொண்டே நம்மூர் ஸ்தபதிகளின் வாழ்க்கை, ஐரோப்பியப் போக்குகள், கீழைத் தத்துவங்கள் என்று சில நிமிடங்களில் எங்கெங்கோ அவரால் பறக்க முடியும்.


தேனுகாவைப் பலரும் ஒரு பிராமணர் என்று நினைத்தது உண்டு. தேனுகா என்கிற அவரது பெயர்; கோயில் கலைகளில் அவருக்கிருந்த ஆர்வம், நுண்கலைகளில் அவருக்கிருந்த புலமை, இசையில் அவருக்கிருந்த ஞானம் இவற்றையெல்லாம் பார்த்து அப்படி எண்ணியதாகப் பலர் அவரிடம் சொன்னது உண்டு. அப்படிச் சொல்பவர்களிடம் ‘‘எந்த அறிவும் யார் ஒருத்தருக்கும் மட்டுமானது இல்லை’’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிடுவார் அவர். தேனுகா பிராமணர் அல்ல. இசை வேளாளர். பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர் சீனிவாசன். ‘தேனுகா’ ராகத்தின் மீது அவருக்கிருந்த அலாதியான பிடிப்பு, அந்த ராகத்தின் பெயரையே தன் பெயராக்கிக்கொள்ள வைத்தது. தேனுகாவுடன் நாள்கணக்கில், மணிக்கணக்கிலான உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன். சாதி தொடர்பாக அரிதாகவே அவர் பேசுவார்.

“தலித் சமூகங்கள் மட்டும்தான் சாதிய அவமானத்துக்கு ஆளாக்கப்படுதுங்குறது இல்ல; தமிழ்நாட்டுல தலித் சமூகமும்கூட ஒருபடி கீழவெச்சிப் பேசக் கூடிய சமூகம் எங்க சமூகம். எங்க குடும்பம் நாகஸ்வரக் குடும்பம். சுவாமிமலை முருகன் கோயில்ல ஆறு காலப் பூஜைகளுக்கும் நாகஸ்வரம் வாசிக்கிறது எங்க குடும்ப சேவகம். எங்கப்பா, எங்கண்ணன் வாத்திய இசையிலதான் ஊர் கண் முழிக்கும். கோயில்லயும் ஊர் விசேஷங்கள்லயும் கச்சேரி நடக்குற வரை முன்வரிசையில எங்க அப்பாவும் அண்ணனும் நிப்பாங்க. கச்சேரி முடிஞ்ச பின்னாடி, பின் பக்கத்துக்கு எங்களைத் திருப்பிவிட்ருவாங்க. சாப்புடுற எடத்துலகூட அவமானம் காத்திருக்கும். எத்தனையோ எடங்கள்ல கொல்லையில உட்கார வெச்சுச் சோறு போட்டுருக்காங்க. வயலுக்குக் கொண்டுபோய் சாப்பிடச் சொன்னவங்ககூட உண்டு. சின்ன வயசுல அவமானம் தாங்காமப் பல நாள், இலையை அப்படியே மூடிவெச்சுட்டுப் பசியோடவே வீட்டுக்கு வந்திருக்கேன்.

அன்னைக்கு இசை வேளாளர் பெண்கள் ஆடுன ஆட்டம் இன்னைக்குப் பிராமணப் பெண்கள் காலுக்குப் போனதும் புனிதமாயிடுச்சு. பிராமணர்கள் கை மாத்திக்கிட்ட பரதமும் இசையும் மட்டும் இல்ல; புல்லாங்குழல், வீணை எல்லாமும் புனிதமாயிடுச்சு. நாகஸ்வரம் பிராமணர்களுக்கு வசமாகலை. அதனாலதான் இன்னைக்கும் நாகஸ்வரம் வசை பாடப்படுது. பிராமணர்கள்கிட்ட இருக்குறப்போ புனிதமா தெரியுற கலையை இசை வேளாளர்கிட்ட அற்பமா பார்க்கச் சொல்றதும் பேசச் சொல்றதும் எது? ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளேயும் இருக்கிற இழிவுகளை இன்னும் எவ்ளோ காலத்துக்கு இங்கே கீழ்நிலையில இருக்குற சமூகங்கள் சுமக்கணும்கிறது தெரியலை. எப்படியும் நம்மளைக் காட்டிலும் திறமையில மேல இருக்குற மனுஷங்களைச் சாதிரீதியா மட்டப்படுத்திப் பேசி அந்தரங்கமா சந்தோஷம் அடையறது மாதிரி பெரிய அசிங்கம் வேற எதுவும் கிடையாது.”

அன்றைய தினம் உடைந்து அழும் நிலைக்குச் சென்றார் அந்த மாமனிதர்.

போன வருஷம் கருணாநிதியிடம் பேட்டி எடுத்த போது, தேனுகாவிடம் வெளிப்பட்ட ஒரு தருணம் கருணாநிதியிடமிருந்தும் வெளிப்பட்டது. “எதிலும் இரண்டில் ஒன்று பார்க்கும் பிடிவாதக் குணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?” என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, “அம்மா, அப்பா… அப்புறம் அன்றைக்குத் தொடங்கி என்னை விரட்டிக்கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடுகள்” என்று சொன்னார் கருணாநிதி. “இன்றைக்கும் சாதியப் பாகுபாடுகள் உங்களை விரட்டுகின்றனவா? எப்படிச் சொல்கிறீர்கள்? 45 வயதிலேயே நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள். கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாக நீங்கள் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு மேல் அணுகிக்கொண்டிருப்பவர்களெல்லாம் தேசிய அளவிலான தலைவர்கள். அவர்களிடமெல்லாமும்கூட சாதியரீதியிலான பார்வையை எதிர்கொள்வதாகச் சொல்கிறீர்களா?” என்று கேட்டபோது கருணாநிதி சொன்னார், “ஆமாம். அவர்களில் பலரிடமும்கூட சாதியப் பாகுபாட்டை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். திமுக மீதான பலரின் காழ்ப்புணர்வுக்குப் பின்னணியிலும்கூட என்னைப் போன்ற ஒரு எளியவன் தலைமையில் அது இயங்குவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆற்றாமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எவ்வளவு உயரம் போனாலும் இங்கு சாதியம் பின்னின்று தாக்குதல் நடத்தும்.”

இதைச் சொல்லும்போது, அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார். மேலதிகமாகச் சில விஷயங்களைத் தனிப்பட்ட வகையில் அவர் குறிப்பிட்டார். அப்போது அவருடைய கண்களில் நீர் திரண்டது.

கருணாநிதி அரசியலில் சோதனைகளுக்கு உள்ளாகும்போதெல்லாம், சாதிரீதியாகத் தான் தாக்கப்படுவதாகக் கூறுவது வழக்கம். இதை அவர் ஒரு உத்தியாகக் கையாள்வதாகப் பலரும் கூறுவது உண்டு. ஆரம்பக் காலத்தில் நானும் அப்படியே நினைத்திருக்கிறேன். பின்னாளில், ஊடகங்களில் பணியாற்றத் தொடங்கிய பின்னரே, ஏனையோர் தம் தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுவதைக் காட்டிலும் கருணாநிதி எப்போதும் கூடுதல் தண்டனைகளை அனுபவிக்க சாதியும் ஒரு காரணம் என்பதை உணர முடிந்தது. அன்றைய அதிமுக உருவாக்கத்தில் தொடங்கி, இன்றைய தமிழ்த் தேசிய அரசியல் வரையிலான கருணாநிதி எதிர்ப்பு அரசியலில் சாதிக்கும் முக்கியப் பங்கிருக்கிறது.

கருணாநிதி எவ்வளவோ தவறுகளை இழைத்திருக்கிறார். சாதியால் அவர் கடுமையாக அடிபட்டபோதும், அவரும் அதிகாரத்துக்காக சாதி அரசியலை ஊக்குவித்திருக்கிறார். திமுகவும் இடைநிலை சாதிகளின் கோட்டையாக மாற்றப்பட்டதில் கருணாநிதிக்குப் பங்குண்டு. தேர்தல் காலங்களில் சாதிய சக்திகளுடன் கைகோக்க என்றுமே அவர் தயங்கியதில்லை. இன்றைக்கும்கூட, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காத்திரமான தலித் அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் திருமாவளவன், ஏனைய எல்லா ஆதிக்கச் சாதி சக்திகளாலும் கட்டம் கட்டப்பட்டிருப்பதில் கருணாநிதிக்கும் பங்குண்டு. அதிமுகவைப் போல ஆதிக்கச் சாதி ஒட்டுகளை வாங்க வேண்டும் என்றால், கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்கக் கூடாது எனும் முடிவை நோக்கி ஸ்டாலினும் திமுகவின் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலர்களும் இணைந்து எடுத்த முடிவில் கருணாநிதியின் மவுனம் சகித்துக்கொள்ளவே முடியாதது. இன்னும் எவ்வளவோ விஷயங்களில் தமிழக அரசியலைச் சீரழித்தற்காக கருணாநிதியைக் குற்றஞ்சாட்ட முடியும்.

ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டியும் கேரளத்தில் நம்பூதிரிகள், நாயர்கள்; ஆந்திரத்தில் ரெட்டிகள், கம்மாக்கள்; கர்நாடகத்தில் ஒக்கலிகர்கள், லிங்காயத்துகள் என்று இந்திய துணைக் கண்டத்தின் பெரும் பகுதி அரசியல் இன்றைக்கும் ஆதிக்கச் சாதிகளின் கைகளில் மட்டுமே இருக்க முடியும் என்றிருக்கும் நிலையில், ஒரு சிறுபான்மை விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து வந்து,  அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு மாநிலத்தின் இரு மைய சக்திகளில் ஒன்றாகத் தன்னை கருணாநிதி நிலைநிறுத்திக்கொண்டிருப்பது  இந்தச் சாதியச் சமூகத்தில் அவர் நிகழ்த்திருக்கும் மிகப் பெரிய சாதனை. இந்தியாவின் ஏனைய எந்த மாநிலத்திலும் இன்றுவரை நிகழாத அற்புதம். இந்த மாநிலத்தின் பெருமிதம். எது ஆதிக்கச் சாதிகளைச் சார்ந்தவர்களை கருணாநிதி மீது சாதி சார்ந்து காலங்காலமாக வெறுப்பை உமிழச் செய்கிறதோ, அதுவே தமிழகத்தின் சாதி மீறல் வரலாற்றில் என்றைக்கும் கருணாநிதியின் பெயரைப் பொறித்துவைத்திருக்கும். வைகோ போன்றவர்களின் சாதிய துவேஷ வார்த்தைகள் அந்த இடத்தில் நெருப்பின் மீது பட்ட தூசியாகக் கருகும்!

ஏப்ரல், 2016, ‘தி இந்து’   /writersamas.blogspot.ca/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக