திங்கள், 18 ஏப்ரல், 2016

ஜெயலலிதா: திமுக தலைவர் கருணாநிதி குழப்பத்தில் உள்ளார்.

அதிமுக ஆட்சி குறித்து திமுக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது என கூறிய முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி குழப்பத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாரணவாசியில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், கும்மிடிபூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், செய்யார், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

அதிமுகவின் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என திமுகவின் குடும்ப தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்யப்படுகிறது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்கள் பாராட்டுவதை பொறுத்துக்கொள்ளாமல் திமுகவினர் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார் ஜெயலலிதா.
மேலும், தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என்றும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். எந்த பொய்யையையும் துணிந்து சொல்லலாம், வாய்க்கு வந்தததை சொல்லி, மக்களை ஏமாற்றலாம். மின்வெட்டே இல்லாதபோது உள்ளதாக கூறுவது எப்படிப்பட்ட கேலிகூத்து. வீடுகளுக்கு மட்டுமல்ல தொழிற்சாலைக்கும் மின்வெட்டே இல்லை. இதுதவிர வாக்கு அளித்தப்படி அனைத்து கிராமங்களுக்கும் மும்முனை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மின்திருட்டை தடுக்க ஓய்வுபெற்ற ராணுவீரர்கள் அடங்கிய 40 குழுக்கள் அமைக்கப்பட்டு 66,428 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ. 117 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் தொலைக்காட்சிகளில் அதிமுக ஆட்சியில் நிலங்கள் வழங்கப்படவில்லை என்றும், வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை என்றும் பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில்  11,49,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.
முல்லைப் பெரியாறு
முல்லைப் பெரியாறு அணையில் தொடர்ந்து 142 அடி நீரை தேக்குவதற்கு தொடர்ந்து வலியுறுத்தப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கப்பட்டு வருகிறது. எனவே, 142 அடி போதும் என கூறி கருணாநிதி துரோகம் விழைவிக்க வேண்டாம் என்றார் ஜெயலலிதா. தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக