தினமணி.com :தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள்!
தினமணி மகளிர் மணி, எம்.ஓ.பி வைஷ்ணவா மகளிர் கல்லூரி
இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற "மகளிர் - இன்று'
கருத்தரங்கின் தொடர்ச்சி...
திரைப்படக் கலைஞர் செல்வி அர்ச்சனா பேசியதாவது:
"பொதுவாக சினிமாவுக்குள்ளே என்னென்ன இருக்கோ அதுதான்
வாழ்க்கையிலும் அதிகமாக பிரதிபலிக்கிறது. ஏன்னா? சினிமா பவர் ஃபுல் மீடியா.
அதைவைத்துதான் சினிமாவில் இருந்து ஒவ்வொரு உதாரணத்தையும் வழக்குரைஞர்
சுமதி அழகா உங்களுக்கு விளக்கினாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அவங்க
பேசல; ஒரு கிளாஸ் நடத்தியிருக்காங்க உங்களுக்கும், என்னைப்
போன்றவர்களுக்கும். ஒரு தாய் சொன்னது மாதிரி, ஆசான் மாதிரி
சொல்லியிருக்காங்க.
ஒரு சாதாரண இடத்திலிருந்த என்னைப் பார்த்ததும் யாரும்
நடிக்க வாங்கன்னு வாய்ப்பு கொடுக்கல. ரொம்ப கஷ்டப்பட்டுதான் இந்த
சினிமாவுக்குள் நான் வந்தேன்.
ரெண்டு, மூணு இயக்குநர்கள் என்னை அவர்கள் படங்களில் ரெண்டு மூன்று நாள் நடிக்க வைத்து, பிறகு இந்த பொண்ணு ஒரு பிரேம்ல கூட நடிக்க முடியாது. நடிகையாக வரவே முடியாது என்று சவால் விட்டு என்னைத் தூக்கி எறிந்தார்கள்.
ரெண்டு, மூணு இயக்குநர்கள் என்னை அவர்கள் படங்களில் ரெண்டு மூன்று நாள் நடிக்க வைத்து, பிறகு இந்த பொண்ணு ஒரு பிரேம்ல கூட நடிக்க முடியாது. நடிகையாக வரவே முடியாது என்று சவால் விட்டு என்னைத் தூக்கி எறிந்தார்கள்.
அதற்கெல்லாம் நான் சோர்வடையவில்லை. மீண்டும் நாலாவதாக
ஒரு டைரக்டரை பார்க்கப் போனேன். 4 போட்டோகிராப் எடுத்தார். பிறகு நாளைக்கு
வான்னு சொன்னார். மறுநாள் போனேன். உன்னை என் படத்தில் கதாநாயகியாக
அறிமுகப்படுத்த போறேன்னு சொன்னார்.
அவரிடம் "நான் நடிக்கலாமா'ன்னு கேட்டேன். ஏன்னா
அதற்குள் இவ்வளவு நடந்திருக்கு. இவ்வளவு நடந்தும் நான் மனம் தளரவில்லை.
கலங்கவில்லை. ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை, ரொம்ப தைரியமாக,
யதார்த்தமாக இருந்தேன். அதனாலதான் நான் நடிக்கலாமான்னு அந்த டைரக்டரிடம்
கேட்டேன். பதிலுக்கு அவர் "ஏன்? அப்படி கேட்கிறே?' என்றார்?'
"நான் கறுப்பா இருக்கேன், எனக்கு நடிக்க தகுதி
இருக்கான்னு என்னைப் பற்றி எனக்கு ஒண்ணும் பெரிசா தெரியல' என்று சொன்னேன்.
அதற்கு அவர் சொன்னார், "அன்பு ரொம்ப எளிமையானது, பாசம் ரொம்ப எளிமையானது,
உண்மை ரொம்ப எளிமையானது, காதல் ரொம்ப எளிமையானது, சினிமாவும் ரொம்ப
எளிமையானது. என்னுடைய இந்த சினிமாவுக்குள்ள, என்னுடைய இந்த பிரேமுக்குள்ள நீயும் ரொம்ப எளிமையா இருக்கே.
நீ மட்டும்தான் அல்லது உன்னைப் போன்று உள்ள பெண்கள்தான் இந்த சினிமாவுல
தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கலாம் சாகும் வரை' என்று சொன்னவர்
என்னுடைய இயக்குநர் பாலுமகேந்திரா.
அதன்பிறகு, ஷூட்டிங் போனேன். அப்போ ஒரு பத்திரிகையாளர்
வந்து இயக்குநரிடம், "இந்த பெண்ணை ரெண்டு மூணு படத்திலிருந்து தூக்கிப்
போட்டுட்டாங்க. நீங்க இவரை கதாநாயகியாக போட்டிருக்கீங்களே எப்படி?' என்று
கேட்டார்.
உடனே இயக்குநர், அவரிடம் இருந்த பேப்பர், பேனாவை எடுத்து அதில் ஏதோ எழுதிக் கொடுத்தார். அவரும் சென்றுவிட்டார்.
நான் இயக்குநரிடம் கேட்டேன் "என்ன எழுதி கொடுத்தீங்கன்னு?' அதற்கு "நேரம் வரும்போது சொல்றேன்னு' சொன்னார்.
அதன்பிறகு இரண்டு - மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது.
திடீர் என்று ஒரு நேரம் வந்தது. அப்போது இயக்குநர் என்னை கூப்பிட்டு "நான்
ஒரு விஷயம் சொன்னேனே உனக்கு ஞாபகம் இருக்கா, நான் ஒருத்தருக்கு ஒண்ணு
எழுதிக் கொடுத்தேனே ஞாபகமிருக்கான்னு' கேட்டார். "இருக்கு' என்று சொன்னேன்.
அப்போது அவர் சொன்னார், "எல்லாரும் தூக்கிப்போட்ட
இந்தப் பெண்ணை உங்க படத்துல ஹீரோயின்னா போடுறீங்க எப்படின்னு கேட்டார்.
அதற்கு நான் இந்தப் பொண்ணு ஒரு சிறந்த நடிகைன்னு நிச்சயம் தேசிய விருது
வாங்குவான்னு எழுதினேன் என்றார்.
அவர் சொன்னது போலவே எனக்கு தேசிய விருதும் கிடைத்தது.
அது நடந்து இப்போது 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு நடிகையா 16
வயதுல எல்லாருமே நடிப்பது போன்று சில தவறானப் படங்களிலும் நடிக்கலாம், 20
வயதிலேயும் நடிக்கலாம், 26 வயதிலும் நடிக்கலாம், 36 வயதிலும் நடிக்கலாம்.
ஆனால் இந்த 40 வயதுலேயும் தவறானப் படங்களில் நடித்து விடக் கூடாது என்ற
கொள்கையினால் நல்ல வாய்ப்புகளுக்காக கடந்த 20 ஆண்டுகளாக நான்
காத்துக்கிட்டே இருக்கேன்.
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இத்தனை ஆண்டுகளில் பெண்களுக்கான
கதையம்சம் உள்ள படம் இங்கே வரவேயில்லை. நீங்கள் புரிந்து கொள்வீர்கள்
என்று நம்புகிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லங்கிற ஒரே ஒரு
காரணத்தால என்னால தொடர்ந்து நடிக்கவும் முடியவில்லை.
இப்போ கூட நான் எங்காவது வெளியே சென்றால் ஒரு வீடு
கட்டுவது எவ்வளவு கஷ்டங்கிறதுல இப்பவும் எங்க மனசுல நீங்க நின்னுட்டீங்க
அப்படின்னு என் படங்களின் ரோல்களை உதாரணமாக சொல்றாங்க. அப்படியிருக்கிற
போது எனக்கு எவ்வளவு பெரிய சமூக அக்கறை இருக்க வேண்டும் என்பதை
உணர்ந்துதான் நல்ல படங்களில் நடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன் இயக்குநர்கள் கே.எஸ். கோபால
கிருஷ்ணன், பீம்சிங், ஸ்ரீதர், பாலுமகேந்திரா, பாலசந்தர், மகேந்திரன்
உள்ளிட்டோர் பெண்களின் சமூக நிலை குறித்து படம் எடுத்துள்ளனர்.
இப்போதும் பெண்கள் இல்லாமல் படங்கள் இல்லை, ஆனால்
பெண்களுக்காக படங்கள் இல்லை. தற்போது சினிமாவில் பெண்களுக்கென 10 சதவீதம்
கூட முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
இன்னும் 20 ஆண்டுகளில் நடிகைகளுக்கு அதுவும்
கிடைக்காது. ஆனால் சினிமாவை பார்த்து, சினிமாவை அடிப்படையாக கொண்டு நிறைய
பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காரணம், வாழ்க்கைதான் சினிமா,
சினிமாதான் வாழ்க்கை.
இந்த இடைப்பட்ட காலங்களிலும் எனக்கு சினிமா வாய்ப்பு
வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அக்காவாக, அண்ணியாக, அம்மாவாக, மாமியாராக
நடிக்க. நினைத்து பாருங்கள் நாம் வெறும் அக்காதானா? வெறும் அம்மா தானா?
வெறும் மாமியார் மட்டும் தானா? நமக்குன்னு வேறு எதுவுமே இல்லையா? நமக்கு
என்று ஒரு தனித்துவம் இல்லையா? ஒண்ணுமே இல்லையா? நினைத்து பாருங்கள்.
நமக்கு எத்தனை பெருமைகள் இருக்கு, எவ்வளவு பொறுப்புகள்
இருக்கு, எவ்வளவு மன அழுத்தங்கள் இருக்கு, எவ்வளவு நெருக்கடிகள் இருக்கு,
எவ்வளவு தேடல் இருக்கு, அடையாளம் இருக்கு, சுதந்திரம் இருக்கு.
அதைவிட முக்கியமாக 40 வயதில் சந்திக்கும் மெனோபாஸ்
பிரச்னை போன்று இப்படி எவ்வளவோ இருக்கு. உங்கள் அம்மாவிடம் கேட்டுப்
பாருங்கள் அவர்களுக்குள் எவ்வளவோ வலிகள் இருக்கும்.
நீங்கள் திரும்பி பார்ப்பதற்குள் பட்டுனு ஒரு 20 வருடம்
ஓடிவிடும். ஆனால் அந்த 20 வருடத்திற்குள்தான் நீங்கள் எல்லாமே செய்ய
வேண்டியிருக்கிறது.
ஆகவே, பெண்கள் இனிவரும் காலங்களில் சுயமரியாதை,
தனித்துவம் உள்ளிட்டவற்றில் விழிப்பாக இருக்கவேண்டும். எந்தவொரு
சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் இழந்து விடாதீர்கள்.
அப்படி இழந்துவிட்டால் நீங்கள் எவ்வளவு பெரிய உன்னதமான நிலையில்
இருந்தாலும் அது பூஜ்யம்தான்.
இதைக் கருத்தில் கொண்டுதான் இப்போது இந்திய சினிமாவில்
என் பங்கு ரொம்ப அழுத்தமானதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து நீண்ட
காலத்திற்கு பிறகு நானும், என் நண்பர்களும் சேர்ந்து "அழியாத கோலங்கள்'
என்று ஒரு படத்தை ஆரம்பித்திருக்கிறோம்.
இந்த ஒரு சின்ன படத்தை எடுக்கும் முயற்சியில் நூறு தடவை
செத்து, நூறு தடவை பிழைத்த மாதிரி ஒரு உணர்வு இருந்தது எனக்கு. ஆனாலும்
தொடர்ந்து போராடுவேன். முயற்சிப்பேன் ஒரு நிலையான இடத்திற்கு வருவேன்.
- ஸ்ரீதேவி குமரேசன்
படங்கள்: அண்ணாமலை,
ஏ.எஸ்.கணேஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக