செவ்வாய், 26 ஏப்ரல், 2016

திமுக சாதி மோதலை தூண்டுவதாக வைகோ சொல்வது அபாண்ட பொய்: ஸ்டாலின்

தூத்துக்குடி பிரச்சாரத்தில் ஸ்டாலின் சாதி மோதலை தூண்டுவதாக திமுக மீது வைகோ அபாண்டமாக பழி சுமத்துகிறார் என, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார். இறுதியாக கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அ. சுப்பிரமணியனை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
அப்போது மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. அந்த தோல்வி பயத்தில் தான் அதிமுக வேட்பாளரை மாற்றுகிறது. மற்றொரு கட்சித் தலைவர் போட்டியிடவில்லை என்று சென்றுவிட்டார்.
அவரது பெயரைக் கூறி, என்னைக் களங்கப்படுத்தி கொள்ள தயாராக இல்லை. ஆனால், ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு திமுக மீது பழிபோட்டு ஒரு காரணத்தை அவர் சொல்லியிருக்கிறார்.
திமுக சாதி மோதலை தூண்டுகிறது. அதனால் போட்டியிடவில்லை என அபாண்டமாக குற்றம் சுமத்தியிருக்கிறார். அதற்கு கண்டனத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
18 ஆண்டுகளாக திமுக சார்பில் எம்பியாக இருந்த அந்த தலைவர் சில நாட்களுக்கு முன்பு கருணாநிதியை பற்றி அரசியல் நாகரீகத்தை மீறி கொச்சைப்படுத்தி பேசினார் என்பது உங்களுக்கு தெரியும். அதை அவர்களது கூட்டணியில் இருப்பவர்களும் கண்டித்தனர்.
75 ஆண்டு கால வரலாறு படைத்த திமுக தலைவரை அவர் கொச்சைப்படுத்தி பேசினார். கருணாநிதி இதுவரைக்கும் ஒரு சட்டப்பேரவை தேர்தலிலும் தோற்றது கிடையாது. அவர், இந்திய நாட்டுக்கு பிரமதர்களை, ஜனாதிபதிளை உருவாக்கி தந்தவர்.
ஆனால், அவரை பற்றியே அவதூறாக பேசிவிட்டார். திமுக சாதியை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட திட்டமிட்டுள்ளது என்று வாய் கூசாமல் பொய் பேசுகிறார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழிவந்த கருணாநிதி சாதி மதங்களை கடந்து அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக சமத்துவபுரங்களை அமைத்தார். சமத்துவபுரம் உருவாக்கப்பட்ட போது அந்த துறைக்கு அமைச்சராக இருந்தது நான்.
ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் திமுக மீது அபாண்டமாக பழி சுமத்துகிற அவரை வண்மையாக கண்டிக்கிறேன்'' என்றார் ஸ்டாலின் tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக