ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

வைகோவின் சாதி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் ஏன் மௌனம்? சதா சவால் விடுவாரே? வழக்கு போடுங்கள் என்பாரே?

subavee.com :சில நாள்களுக்கு முன்பு ஊடகவியலாளர் சந்திப்பில், மதிமுக வின் பொதுச்செயலாளர் வைகோ, தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த சாதியைக் குறிப்பிட்டு, மிகத் தரம்தாழ்ந்தும் தன்நிலை மறந்தும் பேசினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே அது குறித்துத் தன் மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார்.
உடனே அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கி விட்டனர், படித்தவர்கள் பலர். " அடடா என்ன மாதிரியான மன்னிப்பு அது..... ஏனோ தானோ என்று கூறப்பட்ட ஒன்றில்லை, விரிவான மன்னிப்பு அது" என்று வைகோ வைச்சிலாகித்தனர். தொலைக்காட்சி யில் உரையாடிய தோழர் அருணன் ," வைகோ வுக்கும் பேசிய பின் எவ்வளவு மன உளைச்சல் இருந்திருக்கும்" என்று எண்ணிக்கவலைப் பட்டார்.இதனால் "பேசு பொருள்" மாறிவிட்டதே என்றும் வருந்தினார்.

நமக்கும் கூட ஒரு அய்யம் ஏற்பட்டது. எதனால் வைகோ திடீரென்று "மனம் திருந்திய மைந்தர்" ஆனார் என்று எண்ண வேண்டியதாயிற்று.;">மற்ற நேரங்களில் எல்லாம் வழக்குப் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் வழக்கமுடையவர் அவர். யார் யார் பெயரிலோ குற்றச்சாட்டு, அவர் மூன்று கோடி வாங்கிவிட்டார், இவர் ஆறு கோடி வாங்கி விட்டார் என்று மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதும், ஆதாரம் எங்கே என்று கேட்டால், ' நீதி மன்றத்தில் கூறுகிறேன்' என்பதும் அவருடைய 'அஞ்சாத சிங்கம் அண்ணன் வைகோ' என்னும் பிம்பத்தை கட்டி எழுப்ப முயன்றது.

இதே வேளையில் உங்களுக்கு இவ்வளவு கோடி கை மாறியுள்ளதாமே என்று ஒரு தொலைக்காட்சியில் கேட்டால், நேர்காணலைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறுவதும் அவர் போக்காக உள்ளது. 'கேள்வி கேட்டாலே கற்பு போய்விடும்' என்னும் உலகமகா அதிசய முற்போக்குச் சிந்தனையை வேறு அவர் வெளிப்படுத்தினார். மற்றவர்களின் கற்பு பற்றி மட்டும் அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை. எல்லாம்" எனக்கு வந்தால் ரத்தம், உனக்கென்றால் தக்காளிச்சட்டினி" தத்துவம் தான்.<;">இப்படிப்பட்ட வைகோ இப்போது மட்டும் ஏன் இப்படி உடனடி மன்னிப்புக் கேட்டார் என்பது எண்ணிப்பார்க்கத் தக்கதுதானே!.

வேறொன்றுமில்லை மற்ற குற்றச் சாட்டுக்களுக்கெல்லாம் வழக்குப் போட்டால் அது விசாரணைக்கு வந்து, தீர்ப்பு சொல்லப்பட்டு, பிறகு மேல் முறையீட்டிற்க்குச் சென்று, இறுதி முடிவு வருவதற்குள் எல்லோருக்கும் வயதாகிவிடும்.
ஆனால் சாதி குறித்த இந்தப்பேச்சு அப்படிப்பட்டதன்று, தேர்தல் ஆணையத்திடம் உடனே யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். தேர்தல் நேரம் என்பதால், தேர்தல் ஆணையம் தானாகவே வழக்கை எடுத்துக்கொள்ளலாம். அப்படி ஏதேனும் நடந்தால், இந்தத் தேர்தலிலேயே ம.தி.மு.க. விற்குச் சிக்கல் வந்துவிடும்.
மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அதனால் தான் அவசரம்,அவசரமாக, ஐந்து, ஆறு மணி நேரத்திற்குள்ளாகவே, கண்ணீர் விட்டுக்கலங்கி, ஒரு மன்னிப்பு அறிக்கை வெளியாகி உள்ளது என்று தோன்றுகிறது. மன்னிப்பு அறிக்கை ஒரு கவசமாக இருக்குமல்லவா! சுப.வீரபாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக