வியாழன், 7 ஏப்ரல், 2016

ம.ந.கூட்டணியில் வீரலட்சுமி: என்னை முதலமைச்சர் வேட்பளராக அறிவிக்கப்பட்டால் ஏற்றுகொள்வேன்!

கோயம்பேட்டில் கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்காத விஜயகாந்த், இன்றைக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை சந்தித்துப் பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மக்கள் நலக் கூட்டணி சார்பில் வேட்பாளராகவும் போட்டியிடப் போகிறார் வீரலட்சுமி. அவரிடம் பேசினோம். >விஜயகாந்த்தை சந்திக்க எப்போது அழைப்பு வந்தது?< மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைகோவை முன்பே சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயகாந்த் அண்ணனை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இன்று காலையில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார் விஜயகாந்த். உடனே, வைகோ அண்ணனோடு போய் சந்தித்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுஉங்களிடம் விஜயகாந்த் என்ன பேசினார்? 'சட்டமன்றத் தேர்தலில் நன்றாக வேலை பார்க்க வேண்டும். 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்' என்றார்.
நானும் அவரிடம், 'தமிழர் முன்னேற்றப்படைக்கு ஒதுக்கப்படும் தொகுதிக்கு மட்டுமல்லாமல், 234 தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்வேன்' என உறுதியளித்தேன். சிரித்துக் கொண்டே வாழ்த்தினார்.

கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்கிறார்கள். நன்றாக இருக்கிறாரா?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவர் ரொம்ப நல்லா இருக்கார். எனக்கு எதிரில் நேரடியாக உட்கார்ந்து பேசினார். எனக்கு காபி கொடுக்குமாறு சொன்னார். அவருக்கு சைனஸ் பிரச்னை மட்டும்தான் இருக்கிறது. அதைவிட சந்தோஷம், தமிழர் நலன் சார்ந்து நான் நடத்திய ஒவ்வொரு போராட்டங்களையும் குறிப்பிட்டுச் சொன்னார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. 'உன் போராட்டத்தைப் பார்த்துட்டு வர்றேன். தமிழ்நாட்டில் இப்படியொரு வீரமிகுந்த பெண் இருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். எங்கள் கூட்டணிக்கு நீங்கள் வந்ததில் ரொம்ப சந்தோஷப்படறேன்'னு சொன்னார். சுதீஷ் அண்ணனும், 'களத்தில் போராடும் போராளி நீங்கள்' எனப் பாராட்டினார்.

தமிழர் முன்னேற்றப்படை எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது?

ஒரே ஒரு சீட்தான். அதுவும் எனக்கு மட்டும்தான் மக்கள் நலக் கூட்டணி ஒதுக்கியிருக்கிறது. எந்த தொகுதி என்பது நாளைக்குத் தெரிந்துவிடும்.

எந்த தொகுதி வேண்டும் எனக் கேட்டிருக்கிறீர்கள்?
ஐந்தாறு தொகுதிகளைக் குறிப்பிட்டிருக்கேன். கடலூர், குறிஞ்சிப்பாடி, ஜெயங்கொண்டம், திருவள்ளூர்னு லிஸ்ட்ல சொல்லியிருக்கேன்.

இந்தத் தொகுதிகள் எல்லாம் பா.ம.க பலமாக இருக்கும் பகுதிகள். எப்படி வெற்றி பெற முடியும்?

எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வடமாவட்டங்களில்தான் அதிகமாக இருக்கிறார்கள். கட்சியின் உள்கட்டமைப்பும் இந்தப் பகுதியில் நன்றாக இருக்கிறது. எனக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. என்னை பா.ம.க எப்படிப் பார்க்கிறது என்று தெரியவில்லை. நான் போட்டியிடும்போது, பா.ம.க வேட்பாளரும் போட்டியிடுவாரா? என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

மக்கள் நலக் கூட்டணியை ஏன் தேர்வு செய்தீர்கள்?

தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் லஞ்ச ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. வைகோ அண்ணன் மீது எந்தப் புகாரும் இல்லை. அவர் சுயமாக சம்பாதித்த பணத்தில்தான் கட்சியை வழிநடத்துகிறார். விஜயகாந்த் அண்ணனும் சொந்த உழைப்பால் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்கிறார். மக்கள் நலக் கூட்டணிதான் எல்லாவற்றுக்கும் மாற்றாக இருக்கும். அதனால்தான் இந்தக் கூட்டணியை எங்கள் கட்சி ஆதரித்தது.
உங்கள் கட்சியின் லட்சியம் என்ன?

அதை நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.

'தமிழ்நாடு தமிழருக்கே' என சீமான் சொல்கிறார். நியாயப்படி, நீங்கள் சீமானுக்குத்தானே ஆதரவு கொடுத்திருக்க வேண்டும்?


தமிழ்நாட்டின் பாரம்பர்யமே யார் வந்தாலும் நல்லபடியாக வாழணும்கிறதுதான். அதைவிட்டுவிட்டு, மற்றவர்கள் இந்த மாநிலத்தைவிட்டுப் போக வேண்டும் என்று சொல்வது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. அதை நாங்கள் ஏற்கவில்லை. தமிழரே தமிழனை ஆளணும் என்கிறார் சீமான். இந்தக் கோரிக்கை மக்கள் மனதில் எடுபடாது. தான்தோன்றித்தனமாக தன் மனதிற்கு வருவதையெல்லாம் சீமான் பேசக் கூடாது.

உங்களை வீரமிகுந்த பெண் என்கிறார் விஜயகாந்த். இந்த மண்ணை ஆள வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா?


எல்லாருக்குமே அந்த ஆசை இருக்கத்தானே செய்யும். என்னைப் பொறுத்தவரைக்கும் என் கட்சியின் அடிப்படைத் தொண்டன் ஆள வேண்டும் என்றுதான் ஆசைப்படுவேன். கட்சியின் உயர்மட்டக் குழு முதலமைச்சராக என்னை முன்னிறுத்தினால், கட்டாயம் ஏற்றுக் கொள்வேன். இந்த மண்ணை ஆள்வது என்னுடைய பிறப்பின் கடமை என்றே நினைக்கிறேன்.

நல்ல விஷயம்...உங்கள் கட்சிக்கு எத்தனை சதவீத வாக்கு வங்கி இருக்கிறது?
வாக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். தேர்தல் முடிவில் அதுவும் தெரியும்.

-ஆ.விஜயானந்த் விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக