சனி, 16 ஏப்ரல், 2016

பழ.கருப்பையா: பணத்தால் நான்: பணத்தோடு நான்: பணத்திற்காகத்தான் நான்..300 ரூபாய்,பிரியாணி.= கைதட்ட வேண்டும்.

விருத்தாசலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு செல்கிறார் ஜெயலலிதா. இரண்டு பேர் சாகின்றனர்; 17 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இது, பொதுக் கூட்டத்திற்கு சென்றவர்களின் நிலை. அது பொதுக்கூட்டம் தானே, போர்க்களம் அல்லவே! பின் ஏன் சாவுகள் நிகழ வேண்டும்?
ஈ.வெ.ரா., அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவர், ராஜாஜி போன்ற தலைவர்களின் சிந்தனை திறன் மிக்க பேச்சைக் கேட்க, மக்கள் கடலெனத் திரண்டனர். அவர்களின் பேச்சுகள் நிகழும் மைதானங்கள், மாலை நேர கல்லுாரிகளாகவே மாறின. அந்த வகையில், பழைய தலைமுறையின் கருத்து வளமும், சொல்வளமும் மிக்க பேச்சாளர்களில் இன்று எஞ்சி இருக்கும் இருவர், கருணாநிதியும், அன்பழகனும் தான்.
ஜெயலலிதா, எழுதி தரப்பட்டதை படிப்பவர். பேச்சு, பெரிய பெரிய எழுத்துக்களில் அச்சடித்து கொடுக்கப்பட்டிருக்கும். 'நான் செய்தேன்; நான் ஆணையிட்டேன்; எனது தலைமையிலான அரசு' என்றெல்லாம் சொல்லும்போது, குரலை உயர்த்தி இடைவெளி அளிப்பார். அப்போதெல்லாம் கைதட்ட வேண்டும். எல்லாமே ஒருவகை ஏற்பாடு தான்.

மாவட்ட செயலர்களின் முதன்மையான வேலைகளில் ஒன்று, ஜெ.,யின் கூட்டத்திற்கு ஆள் திரட்டுவது தான். மாவட்ட செயலர் கொள்ளையடிக்க அனுமதிக்கப்படுவதன் முதற்காரணம், இதுபோன்ற கூட்டங்களுக்கு ஆள் திரட்ட செலவு செய்ய நேரிடும் என்பது தான்.
வட்டச் செயலர், மாவட்டச் செயலர், கவுன்சிலர், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், அமைச்சர்கள் என, அனைவருமே, தங்கள் நிலைக்கும் அதிகாரத்திற்கும் தக்க, மக்களை சுரண்டிக் கொள்ளலாம்.
இது, கடுமையான கோடை காலம். உச்சத்தை தொடும் பங்குனி மாதத்து வெயில். முந்தைய காலங்களில் எல்லாம் மாலை வேளைகளில் தான் பொதுக் கூட்டங்கள் நடக்கும். இப்போதும் பிற கட்சிக் கூட்டங்கள் எல்லாம், மாலை தொடங்கி இரவு வரை நடக்கின்றன.
ஆனால், ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்கள் மட்டும் பட்டப்பகலில் தான் நடக்கும். அது திரளும் கூட்டமல்ல, திரட்டப்படும் கூட்டம், காசு கொடுத்துக் கூட்டி வரப்படும் கூட்டம்.
கூட்டத்திற்கு வந்து செல்வதற்கு வண்டி வசதி உண்டு. பகல் 12.00 மணிக்கே அவர்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டு விடுவதால், பிரியாணி பொட்டலம் மற்றும் தலைக்கு 300 ரூபாய்.
அவர்களுக்கு ஒரேயொரு வேலை மட்டும் உண்டு. மூன்று, நான்கு மணித்துளிகளுக்கு ஒருமுறை கைதட்ட வேண்டும். எப்போது தட்ட வேண்டும் என்று, இவர்களை அழைத்து வந்த வட்ட செயலர் தட்டி தொடங்கி வைப்பான். அவன் செய்வதைப் பார்த்து செய்தால் போதும்.
விருத்தாசலம் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள், மொட்டை வெயிலில், மொட்டை பொட்டலில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். ஆடு மேய்ப்பவன் கூட, ஆடுகளை மேய விட்டுவிட்டு, மர நிழலை அண்டியிருப்பான். உச்சி வேளையில் வெளியில் செல்பவன், வீட்டோர நிழலை ஒட்டியே நடப்பான்.
ஆனால், அண்டுவதற்கு நிழலில்லாத நடுப்பொட்டலில் அமர வைக்கப்பட்டவர்கள், தண்ணீர் குடிப்பதற்கும், சிறிது நிழல் பார்த்து இருந்துவிட்டு வருவதற்கும் வெளியேற முனைந்தபோது, கட்சிக்காரர்களும், காவல் துறையினரும், 'காசு வாங்குனியில்ல, போய் உட்காரு. காசையும் வாங்கிக்கிட்டு, அம்மா வர்ற நேரத்துல வெளியே போவீயா? வாங்குன ரூபாயை நினைச்சுக்க, வெயில் சுடாது' என்று கடுமையாக பேசி, வெளியே செல்ல முடியாமல் தடுத்துவிட்டனர்.
விளைவு, இரண்டு பேர் சாவு. 17 பேர் மருத்துவமனையில் அனுமதி. இவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு உரைக்காது. இனி செத்தவர்களின் குடும்பங்களுக்கு, ஏதோ ஒன்றிரண்டு லட்சங்கள் வழங்குவார். அதைக் கூட அவர் பரிவால் செய்ய மாட்டார்; பொதுக் கருத்திற்கு அஞ்சி செய்வார்.
இவ்வளவையும் செய்துவிட்டு, 'இரண்டு பேரும் நோவினால் இறந்து விட்டனர்' என்று அறிக்கை வெளியிடுகிறாரே ஜெயலலிதா. இது அடுக்குமா?
இதுபோன்ற கூட்டங்களை மாலை வேளையில் நடத்தக்கூடாதா? நடத்தலாம், ஆனால், அது ஜெயலலிதாவுக்கு வசதிப்படாது.
கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள், சாலை வழியே சென்று, மக்களுக்கு வசதிப்பட்ட நேரங்களில் அவர்களை சந்திக்கின்றனர். ஜெயலலிதா சாதாரணமான வரா? 'எனது ஆட்சி; எனது ஆட்சி' என்று எக்காளமிடுபவர், தரை வழியே செல்வது அவருடைய மதிப்பிற்கு உகந்ததாக இருக்க முடியுமா?
ஆகவே, ஹெலிகாப்டரில் தான் செல்வார். ஹெலிகாப்டர் இரவில் பறக்காது, 5 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும். ஆகவே தான், பகல் 2.00 மணிக்கு பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. எவன் இந்த வெயிலில் கூட்டம் கேட்க வருவான்? எனவே தான், காசு கொடுத்து கூட்டம் திரட்டப்படுகிறது.
வாகனங்களில் அளவுக்கு மீறி மாடுகளை ஏற்றிச் செல்பவர்களின் மீது, உயிர் வதை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெயில் கொடுமை தாங்காமல் சிறிது வெளியே செல்ல நினைத்தவர்களை, போலீசை வைத்து அச்சுறுத்தியவர்களின் மீது, ஏன் விசாரணை நடத்தி தண்டிக்கவில்லை? இது உயிர்வதை இல்லையா? என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்?
பணம் தான் எல்லாம் என்று நினைப்பவர் ஜெயலலிதா. சட்ட துறை, அதிகார துறை என்று எல்லாவற்றையும், பணத்தால் அடித்துச் சாய்க்க முடியும் என்பது தான் ஜெயலலிதாவின் ஒரே அரசியல் கொள்கை.
பணம் கொடுத்தால், பங்குனி மாதத்து உச்சி வெயிலில், பொட்டல் காட்டில் வந்து உட்காருவான்; அவன் வெயிலின் கொடுமையால் செத்து போய்விட்டால், கூடுதல் பணம் அந்தக் குடும்பத்தின் சத்தத்தை வெளியில் கேட்காமல் செய்துவிடும்.
மோசமான ஆட்சி என்று பெயராகி விட்டால், ஒவ்வொரு வாக்காளனுக்கும், காந்தி படம் போட்ட பெரிய தாளைக் கொடுத்தால் போதும். 'என் வீட்டில், 12 ஓட்டு; நீங்கள், 10க்குத்தானே கொடுத்திருக்கிறீர்கள்' என்று கணக்கு விடுதலை சுட்டிக்காட்டி வாங்கி விடுவான்.
'பணத்தால் ஆட்சிக்கு வருவது; ஆட்சிக்கு வந்து பணம் திரட்டுவது' எனும் நச்சு அரசியல் தான் ஜெயலலிதாவின் அரசியல். 'மக்களால் நான்; மக்களோடு நான்; மக்களுக்காகத்தான் நான்' என்று ஒவ்வொரு கூட்டத்திலும் ஜெயலலிதா உரக்கச் சொல்லும்போது, அவருடைய உள்மனம் சொல்லும், 'பணத்தால் நான்; பணத்தோடு நான்; பணத்திற்காகத்தான் நான்!'

-பழ.கருப்பையா-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக