ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

18 அதிகாரிகளை இடம்மாற்றி முக்கியமானவர்களை தப்ப விட்ட தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக 4 கலெக்டர்கள், 5 எஸ்பிக்கள், 5 டிஎஸ்பிக்கள் உள்பட 18 அதிகாரிகளை அதிரடியாக  மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. புகார்களில் சிக்கிய முக்கிய அதிகாரிகளை தப்ப விட்டதாக எதிர்கட்சிகள்  குற்றம்சாட்டியுள்ளன. தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில மாவட்டங்களில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்கள் செயல்படுவதாக  தேர்தல் ஆணையத்தில் திமுக, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் புகார் செய்தன. அதேபோல், ஆம்புலன்ஸ்,  போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில்தான் பணம் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. ஆனால், இந்த புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை  எடுக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் ெதாடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.


எனினும், புகார்கள் மீது விசாரணை நடத்திய தமிழக தேர்தல் அதிகாரிகள், இதுகுறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினர். இந்நிலையில், தேர்தல் அறிவிக்கை வெளியிட்ட 22ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டில் உயர் அதிகாரிகள்  வந்தனர். அதைத் தொடர்ந்து, புகாருக்கு உள்ளான கேபிள் டிவி நிர்வாக இயக்குநர் குமரகுருபரன் அதிரடியாக மாற்றப்பட்டார். நேற்று தமிழகத்தில்  ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட 4 மாவட்ட கலெக்டர்கள், 5 மாவட்ட  எஸ்.பி.க்கள், 5 டிஎஸ்பிக்கள்  உள்பட 18 அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்  செய்யப்பட்டனர். காவல் துறை அதிகாரிகள்: தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக, சேலம் மாவட்ட எஸ்பி சுப்புலட்சுமி மாற்றப்பட்டு  சிபிசிஐடி எஸ்பியாக இருந்த அமீத்குமார் சிங் அங்கு நியமிக்கப்பட்டார். புதுக்கோட்டை எஸ்பி ராஜேஷ்வரி மாற்றப்பட்டு பாளையங்கோட்டை சட்டம்  ஒழுங்கு துணை கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி எஸ்பி லோகநாதன் மாற்றப்பட்டு மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை  கமிஷனர் பண்டி கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 நாமக்கல் மாவட்ட எஸ்பி மகேஷ்வரன் மாற்றப்பட்டு சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.  திருச்சி எஸ்பி உமா மாற்றப்பட்டு கோவை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக  புதிய பணிகள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு தேர்தல் தொடர்பில்லாத பணியிடங்களை உள்துறைச் செயலாளர் ஒதுக்கீடு செய்வார்.
கலெக்டர்கள் : வேலூர் மாவட்ட கலெக்டர் நந்தகோபால் மாற்றப்பட்டு பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேசன் நிர்வாக இயக்குநர் ராஜேந்திர ரத்னு, சேலம்  கலெக்டர் சம்பத் மாற்றப்பட்டு தொல்லியல் துறை கமிஷனர் கார்த்திகேயன், திண்டுக்கல் கலெக்டர் ஹரிகரன் மாற்றப்பட்டு போக்குவரத்து கமிஷனர்  சத்தியப்பிரதா சாஹூ, தேனி கலெக்டர் வெங்கடாச்சலம் மாற்றப்பட்டு தமிழ்நாடு இணையதள தலைமை அதிகாரியாக உள்ள நாகராஜன்  நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட 4 கலெக்டர்களுக்கும் புதிய பணியிடம் வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் டி.ஆர்.ஓ. மாற்றம்: திருப்பூர் டிஆர்ஓ பிரசன்ன ராமசாமி, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆர்டிஓ வடிவேலு பிரபு ஆகியோரும்  மாற்றப்பட்டுள்ளனர்.

உதவி காவல் கண்காணிப்பாளர்கள்: ஆவடி உதவி கமிஷனர் நந்தக்குமார், திருச்செங்கோடு டிஎஸ்பி சூர்யமூர்த்தி, அருப்புக்கோட்டை டிஎஸ்பி தனபால்,  ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி ராஜா, வாணியம்பாடி டிஎஸ்பி சுந்தரம் ஆகியோர் உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில் ஆவடி உதவி கமிஷனர்   ஆர்.குமரேஷன், திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக டி.சுரேஷ், அருப்புக்கோட்டை  டிஎஸ்பியாக எஸ்.ஆரோக்கியம், வாணியம்பாடி டிஎஸ்பியாக ஜி.ஹெட்டர்  தர்மராஜ்,  ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.யாக சி.கபிலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சென்னை நுங்கம்பாக்கம்  இன்ஸ்பெக்டர் ராஜசேகர்,  புழல் இன்ஸ்பெக்டர் கிளாக்ஸன் டேவிட்  ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. எனினும்  புகார்கள் சொல்லப்பட்ட முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தப்பவிட்டு சாதாரண அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது என்று  எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

‘அம்மா ஆணைப்படி...’ சேலம் கலெக்டரும் தப்பவில்லை

சேலம் கலெக்டராக இருந்த சம்பத் ஒரு முறை ‘‘அம்மா ஆணையின்படி மழை பெய்தது’’ என்று பேசி பெரும் கிண்டலுக்கு உள்ளானவர். தேனி கலெக்டராக  இருந்த வெங்கடாச்சலம், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், திண்டுக்கல் கலெக்டராக இருந்த ஹரிகரன், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் மிக  நெருக்கமானவர்களாக செயல்பட்டவர்கள். திருப்பூர் டிஆர்ஓ பிரசன்ன ராமசாமி, முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினர்.  மாற்றப்பட்ட அதிகாரிகள் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகள் இருந்ததால் மாற்றப்பட்டுள்ளதாக ேதர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.  dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக