வியாழன், 7 ஏப்ரல், 2016

அ.தி.மு.க.விடம் இருந்து ரூ.1,500 கோடி வாங்கவில்லை; வைகோ பேட்டி

அ.தி.மு.க.விடம் இருந்து ரூ.1,500 கோடி வாங்கவில்லை என்று வைகோ தெரிவித்தார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கருணாநிதி கூறிய சமாதானம் கடந்த 2004–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்தேன். ஆனால் என்னுடன் ஆலோசிக்காமல், எனது கட்சிக்கு வெறும் 4 தொகுதிகளை கருணாநிதி ஒதுக்கி விட்டு, அதற்கான ஒப்பந்தத்தில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரிடம் கையெழுத்து வாங்கி கொண்டார்.
நான் சிறையில் இருந்து வந்தவுடன், கருணாநிதியை சந்தித்து என்னுடன் சிறையில் இருந்த கணேசமூர்த்திக்கு மட்டும் பழனி அல்லது திருச்செங்கோடு தொகுதி தருமாறு மன்றாடி கேட்டுக்கொண்டேன். ஆனால் கருணாநிதி அதனையெல்லாம் கேட்காதீர்கள் என்று சொல்லி விட்டார்.

அதன்பின் நான் மன வருத்தம் அடைந்து இருப்பேன் என்று எண்ணியகருணாநிதி, ‘‘என்னிடம் எனக்கு பின் தி.மு.க. கட்சி இருக்காது, ஆனால் உனது கட்சி இருக்கும்’’ என்று என்னை சமாதானப்படுத்தினார்.தே.மு.தி.க. உடைப்பு
எனது கட்சியை உடைத்து தாயகத்தை கைப்பற்ற கருணாநிதி எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
தற்போது தே.மு.தி.க.வை உடைக்கும் வேலையில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். தே.மு.தி.க. உடைப்புக்கு முக்கிய காரணம் ஸ்டாலினும், அவரது மருமகன் சபரீசனும் தான். எங்களோடு கூட்டணி வைத்தற்காக விஜயகாந்தை அழிக்கப்பார்க்கிறார்கள்.
ஆதாரம் உள்ளது தி.மு.க. பணம் கொடுத்து தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களை இழுக்கிறது என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நெல்லை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முகமது அலி. இவருக்கும், அங்குள்ள எங்கள் கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதி கோல்டன் கானுக்கும் இடையே நல்ல பழக்கம் உள்ளது.
கோல்டன் கானின் உறவினர் நஜ்முதீன். இவர் நெல்லை சென்று கோல்டன் கானை சந்தித்து, நீங்கள் சொன்னால் தே.மு.தி.க. செயலாளர் முகமது அலி எதையும் கேட்பாராமே, அவரை நீங்கள் தி.மு.க. பக்கம் அழைத்து வந்தால் அவருக்கு ரூ.3 கோடியும், உங்களுக்கு ரூ.50 லட்சம் பணமும் கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்.
விஜயகாந்திற்கு விஷம் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் விஜயகாந்த் நல்லவர். கூட்டணி வைக்காவிட்டால் அந்த கட்சியை உடைப்பது. இது தான் தி.மு.க.வின் வேலை. சந்திரகுமார் கடந்த மாதம் (மார்ச்) 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் எங்களுடன் இருந்தார்.
அப்போது, ‘‘கேப்டன் கிணற்றில் குதிக்க சொன்னால் கூட குதிப்பேன்’’ என்றார். கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் ஒருசேர கடுமையாக தாக்கி பேசினார். நான் கூட விஜயகாந்திடம், ‘‘சந்திரகுமார் இவ்வளவு அருமையாக பேசுகிறாரே’’ என்றேன்.
ஆனால் இப்போது சந்திரகுமார் செய்தது பச்சை துரோகம். அவர், இதை விட விஜயகாந்திற்கு பாலில் விஷம் வைத்து கொடுத்து இருக்கலாம். சோற்றில் கூட விஷம் வைத்திருக்கலாம். இவர்களை போன்றவர்கள் அதனை செய்தாலும் செய்வார்கள். நாங்கள் நம்பியவர்களுக்காக உயிரை கூட கொடுப்போம்.
சிறுதாவூர் பங்களா ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தேர்தல் நடைபெறும், மாநிலங்களில் பணப்புழக்கம் திடீரென்று அதிகமாக இருக்கிறது. இதனை கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிறுதாவூர் பங்களாவில் இருந்து 2 கண்டெய்னர்கள், 10 லாரிகளில் பணம் தான் போனது என்றேன். என் மீது வழக்கு போட்டு இருக்கிறார்கள்.
சிறுதாவூர் பங்களாவில் ஏன் சோதனை செய்யவில்லை என்றால், அங்குள்ள எஸ்.பி., கலெக்டரிடம் அறிக்கை கேட்டு இருக்கிறோம் என்கிறார் ராஜேஷ் லக்கானி. அப்போது சாலையில் செல்லும் வாகனத்தை மட்டும் நிறுத்தி சோதனை செய்வது சரியா?. இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
ஸ்டாலின் நான் உளறுவதாக கூறுகிறார். மீத்தேன் திட்டத்திற்கு எந்த கையில் நீங்கள் கையெழுத்து போட்டீர்கள். அதற்கு என்ன கைமாறு கிடைத்தது என்று சொல்லுங்கள்.
மாமண்டூரில் 10–ந் தேதி மாநாடு நடத்துகிறோம். இதற்கு விளம்பரம் தேடிக்கொடுத்த ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் இந்த மாநாட்டிற்கு எப்படி ஆட்கள் திரட்டுவது என்று எண்ணிக்கொண்டு இருந்தோம். ஆனால் தே.மு.தி.க.வை உடைத்து, எங்கள் தொண்டர்களை கோபம் அடைய செய்து விட்டார் ஸ்டாலின். எனவே இந்த மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.
ஜெயலலிதா 9–ந் தேதி தீவுத்திடலில் கூட்டம் போடப்போகிறார். நாங்களும் தீவுத்திடலில் தான் மாநாட்டை நடத்த முடிவு செய்து அரசு அதிகாரிகளிடம் சென்று கேட்டோம். ஆனால் கோர்ட்டில் தடை இருக்கிறது, எனவே தீவுத்திடல் மைதானத்தை தர முடியாது என்று கூறி விட்டனர்.
ஆனால் ஜெயலலிதாவிற்கு மட்டும் தீவுத்திடலில் எப்படி அனுமதி தருகிறார்கள். அவர்களுக்கு மட்டும் சட்டம் தனியாக வளையுமா?.
ரூ.1,500 கோடி எங்களது மாநாடு, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான நுழைவாயிலாக இருக்கும். எங்களுக்குள் தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. நான் அ.தி.மு.க.விடம் இருந்து ரூ.1,500 கோடி பணம் வாங்கவில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக மதுவிலக்கு குறித்த பிரசார பாடல்களை அவர்கள் வெளியிட்டனர்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக