வெள்ளி, 22 ஏப்ரல், 2016

அம்மா டோஸ் : குனிஞ்சு குனிஞ்சு கும்பிட தெரியறது கொஞ்சமாவது.....? 10...15 வருடங்களுக்கு முன்பு எங்கிருந்தீர்கள்? யோசிச்சு பாருங்க ...?.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதி மாற்றப்பட்டு, வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மாற்றத்தால் இதுவரை 27 பேர் முன்னாள் வேட்பாளர்களாக ஆகியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்னும் பல வேட்பாளர் மாற்றங்கள் வரலாம் என காதை கடிக்கின்றது கார்டன் வட்டாரம். காரணம் கடந்த 2 தினங்களுக்கு முன், கார்டனில் நடந்த சூரசம்ஹாரம். அன்றைய தினம் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்காற்றிய
கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களையும், முன்னாள் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரையும் ஜெயலலிதா வறுத்தெடுத்தார் என்கிறார்கள். எந்த தேர்தலானாலும், வேட்பாளர் அறிவிப்பதில் துவங்கி பிரசார பயணங்கள் திட்டமிடுவதை வரை கடந்த காலங்களில்,  ஜெயலலிதா தலைமையிலான அதிமுகதான் ரேஸில் முந்தி நிற்கும். வெற்றி யாருக்கானதாக இருந்தாலும் தேர்தல் பணியில் அது காட்டுகிற சுறுசுறுப்பு, மற்ற கட்சிகளுக்கு கிலி ஏற்படுத்திவிடும். தேர்தல் நேர அதிரடிகளிலும் ஜெயலலிதா அப்படித்தான்.மனதில் பட்டதை அதிரடியாக செய்வார். அதன்மீதான விமர்சனங்களுக்கு பொருட்படுத்தமாட்டார். ஆனால் இந்த முறை வேட்பாளர் மாற்றம் தொடர்ந்து கொண்டிருப்பதில் முதன்முறையாக ஜெயலலிதா எரிச்சலுக்குள்ளானார் என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.


வேட்பாளர் பட்டியல் மாறுதல் என்பது, தேர்தல் சூழலுக்கு தக்கபடி கட்சிகள் மேற்கொள்ளும் ஒரு சாதுர்யம். அதன்படி கடந்த காலங்களில் அதிமுக வேட்பாளர் பட்டியல் மாறுதலுக்குள்ளானது உண்டு. ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலைப்போன்று இதற்கு முன் அதிமுகவில் இத்தனை தடவைகள் பட்டியல் மாறுதலுக்குள்ளாகியிருக்குமா என்றால் இல்லை. இதில் கட்சியினரே ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து கிடக்கின்றனர்.

வயது, உடல்நிலை காரணமாக இந்த முறை வேட்பாளர் தேர்வில் ஜெயலலிதா நேரிடையாக தலையிடாமல் நால்வர் குழுவிடமும், தனக்கு நெருக்கமான முன்னாள் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடமும் பொறுப்பை ஒப்படைத்தார் என்கிறார்கள்.

அதன்படி தேர்வானவர்கள் பட்டியல்தான் கடந்த 4 -ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் மறுதினத்திலிருந்தே இந்த பட்டியல் மாறுதலுக்குள்ளாகி இப்போது வேலூரில் மாற்றப்பட்ட அல்லது வாய்ப்பு இழந்த நீலகண்டன் வரை இதுவரை 27 பேர் மாற்றப்பட்டிருக்கின்றனர்.
ஆளுமை கொண்ட ஒரு பிரதான கட்சியான அதிமுக, தங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை நாளொன்றுக்கு ஒருவர் வீதம் மாற்றியமைத்துக் கொண்டிருப்பது அதிமுக தலைமையின் குழப்பத்தை சொல்வதாக உள்ளது. இத்தனை குழப்பத்திற்கும் காரணம் வேட்பாளர் தேர்வுக்குழு என்கின்றனர். தேர்வுக்குழுவும், அவர்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட முன்னாள் அரசு அதிகாரியும் 'அரசியல்' செய்ததே இதற்கு காரணம் என்று சொல்பவர்கள்,  இதில் முக்கிய பங்கு வீட்டு வசதியை நிர்வகித்தவர் என்கிறார்கள்.  

கட்சியின் இரண்டாம் தலைமையாக குறிப்பிடப்படுபவரின்  நெருங்கிய வட்டத்தை சேர்ந்த அவர்தான், இந்த முறை வேட்பாளர் தேர்வுக்குழுவுக்கு தலைமை வகித்தார். கடந்த முறை  இந்த பொறுப்பில் இருந்தவர் பெரும்பாலும் டம்மியாகவே  இருந்தார் என்கிறார்கள். இதனால் வீட்டுவசதியே, தங்களுக்கு பிடித்தமானவர்களை தேர்வு செய்து அம்மாவிடம் அதை பவ்யமாக நீட்டி ஒப்புதல் பெற்றாராம். அமைச்சரவையில் 'தங்களுக்கு' கடந்த காலத்தில் ஒத்துசெயல்படாத சிலரை கட்டம் கட்டிய அவர்,  முன்ஜாக்கிரதையாக அவர்களின் தொகுதிகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்த சர்ச்சைகளை ஃபைல் போட்டு வைத்துக்கொண்டாராம்.

             
அமைச்சர்கள் பெயர்கள் விடுபட்டதை பற்றி ஜெயலலிதா கேட்டபோது, அவைகளை உடனே எடுத்துக்காட்டி சமாளித்தார் என்கிறார்கள்.  முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னய்யா  விவகாரத்தில் நடந்த விவகாரங்களை சொல்லி மாய்ந்து போகிறார்கள் சிலர்.

முன்னாள் சபாநாயகர் முனு ஆதியின் அக்காள் மகனான சின்னய்யா, கட்சியில் நுழைந்த காலத்திலிருந்தே தீவிர ஜெயலலிதா ஆதரவாளர். கட்சியில் முளைத்த மற்ற அணிகளின் மீது அவ்வளவாக அக்கறை காட்டாதவர். கட்சியின் இரண்டாம் தலைமையாக கூறப்படுபவரின் அணியில் தாமரை இலை தண்ணீராக இருந்தவர். அதுதான் அவருக்கு ஆபத்தாகிவிட்டது. இத்தனைக்கும் பெரிய அளவில் சின்னய்யா சர்ச்கைகளுக்குள் சிக்காதவர். இதுதான் அதிமுகவின் ஐந்தாண்டுகளை நிறைவு செய்த அமைச்சர்கள் பட்டியலில் ஜனவரி வரை அவரை முட்டிமோத வைத்தது.

தங்களுக்கு ஒத்துப்போகாத அவரை, வீட்டுவசதி அணி தந்திரமாக காய்நகர்த்தி காலி செய்தனர் என்கிறார்கள். காஞ்சி மாவட்டத்தில் வீட்டுவசதிக்கு பிடித்தமான மற்றொரு எம்.எல்.ஏவும் மாவட்டச் செயலாருமான ஒருவரின் எல்லைக்குட்பட்ட மாவட்டத்தில், திட்டமிட்டு சில மாதங்களுக்கு முன் பொதுக்கூட்டத்தை நடத்தியது வீட்டுவசதி அணி.
அதில் கூட்டத்தை பெரிய அளவில் வரவழைத்து,  அந்த புகைப்படங்களை தலைமையிடம் காட்டி, ஒரு எம்.எல்.ஏ கூட்டுற கூட்டத்தை கூட, அமைச்சரா இருக்கிறவரால அவர் எல்லைக்குள்  கூட்ட முடியலை. இத்தனை கூட்டம் வருகிறது. அதனால் மாவட்டத்தில் கட்சியை வளர்க்க இவர்தான் சரிப்படுவார் என்பதுபோல் சின்னய்யா பற்றி டேமேஜான தோற்றத்தை உருவாக்கினார்களாம். இதில்தான் அவர்கள் எதிர்பார்த்ததுபோல் கடந்த பிப்ரவரியில் விக்கெட் விழுந்ததாம்.

திட்டமிட்டதுபோல் வேட்பாளர் தேர்விலும் சின்னய்யாவை கழற்றிவிட்டார் வீட்டுவசதி. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல. தமிழகம் முழுவதிலுமே திட்டமிட்டுதான் வேட்பாளர் தேர்வில் காய் நகர்த்தியிருக்கிறார் 'வீட்டுவசதி' என்கிறார்கள்.

இப்போது தொடர்ந்து தேர்வான வேட்பாளர்கள் குறித்து கார்டனில் புகார்கள் படையெடுத்துவருவதன் எதிரொலிதான், தினந்தோறும் வானிலை அறிவிப்பு போல வேட்பாளர் மாற்ற அறிவிப்பு வந்துகொண்டிருக்கிறது. இந்த குழப்பங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என முன்னெச்சரிக்கையாகத்தான், தன் அரசுக்கு ஆலோசனை சொல்லிவந்த முன்னாள்  பெண் ஐ.ஏ.எஸ்ஸை தேர்வுக்குழுவுடன் இருக்கச்செய்தாராம் ஜெயலலிதா. ஆனால் அதிகாரி 'அரசியல்வாதி'யாகிவிட்டிருக்கிறார்.

வேட்பாளர் பட்டியலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த பெண் அதிகாரிக்கு வேண்டப்பட்டவர்கள் இடம்பெற்றிருப்பதை கடந்த வாரம் விசாரித்து அறிந்துகொண்ட ஜெயலலிதா அவரையும், தேர்வுக்குழுவில் இடம்பெற்ற மற்றவர்களையும் கார்டனுக்கு அழைத்து வறுத்தெடுத்தாராம்.
“நன்றியோட இருப்பீங்கன்னுதான் உங்களை நம்பி இவ்ளோ பெரிய பொறுப்பை தர்றேன். உங்களை யெல்லாம் எவ்வளவு நம்பினேன். ஆனால் மோசம் போயிட்டேன். ஒரு கேன்டிடேட்டையும் நீங்க சரியா போடலை...எல்லாவற்றையும் திரும்ப என்னால் மாற்றிக்கிட்டு இருக்க முடியுமா....அப்படியே மாத்திக்கிட்டிருக்கிறதுக்கு பதிலா இப்பவே நம்ம தோல்வியை ஒப்புக்கவேண்டியதுதான்.
இப்படியே மாற்றிக்கிட்டிருந்தா கட்சி என் கட்டுப்பாட்டில் இல்லை என்கிற எதிர்கட்சிகளின் விமர்சனத்தை மக்கள் நம்பிவிடமாட்டார்களா?...நீங்களெல்லாம் என்னால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். 10 பதினைந்துவருடங்களுக்கு முன்பு நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள் என எண்ணிப்பாருங்கள். இது என்னால் வந்த உயர்வு. இப்போ எனக்கு எதிராகவே செயல்படறீங்களா... ?” என்ற ரீதியில் பொங்கி வெடித்தாராம்.

“கடந்த 2 தினங்களாக  கார்டனில் இதுபற்றிதான் காரசார வாக்குவாதம் நடைபெற்றது. அம்மாவின் கோபம் இன்னும் அடங்கவில்லை. விமர்சனங்களுக்கு அஞ்சி பெரிய அளவில் பட்டியல் மாறாவிட்டாலும் இன்றும் நாளையும் வேட்பாளர் பட்டியலில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும். இதில் அந்தியூர் , தாம்பரம், திருவொற்றியூர், தி.நகர், தென்மாவட்டங்களில் இருதொகுதிகள் காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல தொகுதிகள் என தமிழகம் முழுவதும் பரவலான மாற்றங்கள் இருக்கும் என உறுதியாக சொல்கிறார்கள்.
- சௌமியன்  விகடன்.கம 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக