புதன், 23 மார்ச், 2016

விஜயகாந்த் முதல்வர் ஆவாரா? - சமூக நோக்கர்கள் கருத்து..tamil.thehindu.com

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் தமிழக முதல்வராவது உறுதி என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணி இனி 'விஜயகாந்த் அணி' என அழைக்கப்படும் என்று வைகோ கூறியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் இது மிகப் பெரிய திருப்பம்தான். அதேசமயம் விஜயகாந்த் முதல்வர் ஆவாரா? என்பதுதான் தற்போதைய கேள்வி.
அந்த கேள்வியை சில சமூக நோக்கர்களிடம் முன்வைத்தோம்.
ஆழி செந்தில்நாதன் (அரசியல் விமர்சகர்): விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட ஆக முடியாது. தேமுதிகவின் வாக்கு வங்கியை ஊடகங்கள் மிகை மதிப்பீடு செய்து வெளியிடுகின்றன.

திமுக, அதிமுகவுக்கு மாற்று என்றால் மாற்றுக் கட்சி என்று மட்டும் அர்த்தமல்ல. எந்த அரசியல் கலாச்சாரத்தின் மாற்று என்பதும் முக்கியம். அந்த வகையில் மக்கள் நலக் கூட்டணி மீது மாற்று அரசியலுக்கான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விஜயகாந்தை இணைத்துக்கொண்டதின் மூலம் நாங்களும் மாற்று கிடையாது என்று மக்கள் நலக் கூட்டணி அறிவித்துள்ளது.
விஜயகாந்த் அடிக்கும் கேலிக்கூத்துகளை பார்த்துவருகிறோம். கருணாநிதி, ஜெயலலிதாவை விட மேம்பட்டவர் என்று விஜயகாந்த் எந்தவிதத்திலும் தன்னை நிரூபிக்கவில்லை. இந்த சூழலில் விஜயகாந்த் முதல்வர் ஆவாரா? என்ற கேள்வியே அவருக்கு வைக்கும் மிகப் பெரிய கிரீடமாகக் கருதுகிறேன்.
தற்போது தேமுதிகவுக்கு 4% முதல் 5% வாக்குவங்கிதான் இருக்கும். இந்நிலையில், எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்கும்போது விஜயகாந்த் முதல்வர் ஆவாரா? என்று கேட்பது திட்டமிட்டு உருவாக்கப்படும் தவறான விஷயம்.
மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தோ அல்லது தனித்து நின்றோ கிட்டத்தட்ட 40% வாக்குவங்கியை அடைந்தால்தான் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக முடியும். ஆனால், விஜயகாந்துக்கு அதற்கான சாத்தியம் இல்லை. இப்போது விஜயகாந்தை யாரும் சீரியஸ் அரசியல்வாதியாக பார்க்கவில்லை. பேரம் பேசும் அரசியலின் உதாரணமாகத்தான் விஜயகாந்த் இருக்கிறார்.
விஜயகாந்துக்கு இல்லாத ஒரு பலத்தை மீடியா உருவாக்க முயற்சிக்கிறது. அவரால் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட ஆகமுடியாது என்பதுதான் உண்மை.
கவின்மலர் (எழுத்தாளர்): விஜயகாந்த் முதல்வராக வாய்ப்பே இல்லை. மக்கள் நலக் கூட்டணியின் மிகப் பெரிய பலமே மாற்று அரசியலை முன்வைத்ததுதான்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடதுசாரிகள் - தலித் கூட்டணி தற்போதுதான் சாத்தியம் ஆகியிருக்கிறது. ஆரம்பத்தில் திருமாவளவனை முதல்வராக்கலாம் என சில ஆதரவுக் குரல்கள் எழுந்தன.
மக்கள் நலக் கூட்டணியில் கொள்கைக்குதான் முக்கியத்துவம். முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்குப் பிறகே அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது விஜயகாந்துடன் கூட்டணி வைத்த பிறகு விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறார்கள். விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதில் தவறில்லை. ஆனால், விஜயகாந்தின் சமூக உணர்வு எப்படிப்பட்டது?
திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய பாரம்பரியம் இருக்கிறது. மக்கள் நலனுக்காக போராடிய வீர வரலாறு இருக்கிறது. ஆனால், விஜயகாந்துக்கு அப்படி சொல்ல என்ன இருக்கிறது? ஒரு முதல்வர் வேட்பாளர் செய்தித்தாளில் வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு மட்டும் கருத்து சொன்னால் போதுமா? சமூக கண்ணோட்டம், சமுதாய வரலாறு, அரசியல் நிலைமை தெரிய வேண்டும்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக சொல்லப்படுகிற தேமுதிகவிலும் குடும்ப ஆதிக்கம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மக்கள் நலக் கூட்டணியுடன், விஜயகாந்த் இணைந்ததால் அதிக வாக்குகளைப் பெறலாம்தான். ஆனால், அது அதிமுகவுக்கு சாதகமாகவே அமைந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.
அதுமட்டும் இல்லாமல், மக்கள் நலக் கூட்டணியில் தலித் முதல்வர் என்ற கனவு நனவாகும் காலம் வெகு அருகில் இருந்தது. அது இப்போது சாத்தியம் இல்லையென்றாலும், 10 அல்லது 15 ஆண்டுகளில் நடக்கும் என்று நினைத்தேன். விஜயகாந்த் மூலம் அந்த கனவு ஒரேயடியாய் தகர்த்து எறியப்பட்டுவிட்டது.
பார்வைதாசன் (தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்): கடந்த தேர்தலில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அந்த நம்பிக்கையில் இப்போது முதல்வர் வேட்பாளராகியிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், விஜயகாந்த் வரும் தேர்தலில் முதல்வராக வாய்ப்பு இல்லை.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தலைவர்களை மக்கள் மாற்று சக்தியாகப் பார்த்தார்கள். ஆறேழு மாதங்களாக செயல்திட்டங்களை வடிவமைத்து, நான்கு கட்டப் பிரச்சாரத்தை முடித்துள்ளனர். இந்நிலையில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டனர். ஆனால், மக்கள் விஜயகாந்தை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை.
மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தின் தலைவராக விஜயகாந்தை விரும்பி ஏற்பது அவ்வளவு சுலபமானது இல்லை. தேமுதிகவும் - மக்கள் நலக் கூட்டணியும் இணைந்திருப்பது அரசியலில் அதிர்வை ஏற்படுத்தும். மாற்றத்தை ஏற்படுத்தாது.
இவ்வாறு சமூக நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக