வெள்ளி, 11 மார்ச், 2016

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் : தேமுதிக முடிவு என்னை பொறுத்தவரை மகிழ்ச்சி தருகிறது..அந்த சிக்கல் நீங்கியது..

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருப்பதால் திமுகவுக்கு எந்த பாதிப்பு இல்லை; இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் திமுக தொண்டர்கள் மேலும் ஊக்கமடைவார்கள் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. 

இந்நிலையில் திடீரென தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று விஜயகாந்த் நேற்று அறிவித்தார். அவரது மனைவி பிரேமலதாவோ, விஜயகாந்த்தை முதல்வராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம் என அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக நடந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறிய கருத்துகள்: விஜயகாந்த் முடிவால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணிக்கு அழைத்தவர்களுக்கெல்லாம் நன்றி என சொல்லி இருக்கிறார். அது நாகரீகம். அதற்கு நன்றி. எப்படிபோட்டியிடுவது? யாரோடு போட்டியிடுவது என்பது அவரவர் விருப்பம்.
அவரவர் உரிமை. எனவே அப்படி ஒரு முடிவை அவர்கள் எடுத்தால் அது அவர்கள் விருப்பம். திமுகவைப் பொறுத்தவரையில் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்ததற்கு ஒரே ஒரு அடிப்படைக் காரணம்தான் உண்டு. இரண்டு கட்சிகளுக்கு இடையே பொது கொள்கை இருக்கிறதா? என்பதைவிட பொதுநோக்கம் இருக்கிறது என்பது.. அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற பொதுநோக்கம் இருக்கிற கட்சிகள் வாருங்கள் என்பதுதான் திமுக அழைப்பின் அர்த்தம். அதை அவர்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

இதை பாஜக எப்படி பார்க்கிறது? மக்கள் நலக் கூட்டணி எப்படி பார்க்கிறது என்பதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. அது அவர்களின் கவலை.

இனி திமுகவைப் பொறுத்தவரை இனி தெளிவாக இப்போதிருந்தே இந்த தேர்தலை நோக்கி முழுமையாக செயல்பட வேண்டும். திமுக தனித்து நின்றே வெற்றி பெறும் என்பது எங்கள் அடிப்படையான நம்பிக்கை. பழம் நழுவி பாலில் விழும் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார் எனில் அதற்கு பின்புலத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதை இனிமேல் தோண்டி கிளறி வெளியே சொல்வது நாகரிகமாக இருக்காது. எது நடந்ததோ அது நடந்துவிட்டது. என்ன நடந்தது? பேச்சுவார்த்தை எப்படி நடந்தது? எந்த சூழலில் கருணாநிதி அப்படி சொன்னார் என்பதையெல்லாம் இனி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை.

அதை தேமுதிகவும் விரும்பாது. நான் தனிப்பட்ட முறையில் திமுக தனித்து நின்று வெற்றி பெற வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். இன்று பிரேமலதா பேசும்போது யாரால் ஜெயலலிதா முதல்வரானார்? வெற்றி பெற்றார் என இன்றைக்கு கேட்கிறார்....ஒருவேளை திமுக- தேமுதிக கூட்டணி ஏற்பட்டிருந்தால் நாளை திமுகவைப் பார்த்தும் இந்த கேள்வியைக் கேட்டிருப்பார்கள். எங்களுக்கு அந்த சிக்கல் நீங்கியது. நாளை நாங்கள் தலைநிமிர்ந்து சொல்வோம்... நாங்கள் எங்களால்தான் வெற்றி பெற்றோம்.. எங்கள் தலைமையால், தொண்டர்களின் வியர்வையால், தொண்டர்களின் ஓயாத உழைப்பால் திமுக வெற்றி பெற்றது என்று நாளைக்கு தலைநிமிர்ந்து சொல்வதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் முடிவு மகிழ்ச்சிதருகிறது. இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும் போதுதான் திமுக தொண்டர்கள் மேலும் ஊக்கமடைந்திருக்கிறார்கள் என்பது பழைய வரலாறு. தனித்து நின்றாலும் வெற்றி பெறுவோம். கூடுதலாக கட்சிகள் வந்தால் வெற்றி உறுதிப்படும் என்ற நம்பிக்கை இருந்தது என்னவோ உண்மைதான். அதை மறுக்கவில்லை. திரைமறைவில் என்ன நடந்தது என்பதை ஏறத்தாழ 2 மாதங்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் பேசிவிட்டோம். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்தது குறித்து அதிகாரப்பூர்வமாக எனக்கு எதுவும் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் இந்த நிமிடத்தில் இருந்து திமுக தேர்தலை நோக்கி உழைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது என்பதை மட்டுமே வலியுறுத்த விரும்புகிறேன். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே விஜயகாந்த்தைப் பற்றி கவலைப்படுவதை நான் நிறுத்திவிட்டேன். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இந்த தேர்தலில் வைக்கப்படுகிற கேள்வி. தேர்தலில் இந்த ஆட்சி தொடரக் கூடாது என கருதுகிறவர்கள், இந்த ஆட்சியை அகற்றக் கூடிய வலிமை யாருக்கு இருக்கிறது என்பதை முடிவு செய்வார்கள். ஆட்சி தொடர வேண்டும் என்று விரும்புகிறவர்கள் கண்டிப்பாக ஆளும் கட்சிக்கு வாக்களிப்பார்கள். இதில் ஒன்றை நான் தெளிவாக சொல்கிறேன்... 3வது அணி, 4வது அணி, 30வது அணி வேண்டுமானாலும் வரலாம்... மோதப் போவது இரண்டு அணிகள்தான். இதில் வெல்லப் போவது திமுக அணி என்பது என் நம்பிக்கை. இவ்வாறு சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.
Read more at://tamil.oneindia.co

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக