புதன், 23 மார்ச், 2016

நிஜமான போட்டி என்னவோ அய்யாவுக்கும் அம்மாவுக்கும்தான்...மிச்சம் மீதியெல்லாம் சென்சேஷன் மட்டும்தான்

nisaptham.com :ஓபிஎஸ், நத்தம், பழனியப்பன் தலையில் தூக்கிப் போட்டுவிட்டு ‘எல்லாம் இந்த கேடிகள் செஞ்ச தப்பு..அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாதாம்..பாவம்
கலைஞருக்கு தேமுதிகவை உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று ஆசை. ஆனால் ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. ‘திமுகக் கூட்டணிக்கு தேமுதிக வருகிற வாய்ப்பு இருக்கிறது’ என்று ஒரு பக்கம் கலைஞர் நெக்குருகிக் கொண்டிருக்க, ‘கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை’ ‘அவங்க கூட பேச்சுவார்த்தையே நடக்கலை’ என்று பெருங்கற்களைச் சுமந்து ஸ்டாலின் ஒவ்வொன்றாகப் போட்டார். ஆட்சியில் பங்கு உள்ளிட்ட தேமுதிகவின் கடுமையான நிபந்தனைகள் ஸ்டாலினை எரிச்சலூட்டியிருந்தாலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்களிடம் இப்படி வெளிப்படையாகப் பேசியதை விஜயகாந்த்துக்கான ஸ்டாலினின் எதிர்ப்புணர்வு என்றுதான் புரிந்து கொள்ள முடிந்தது. அப்பா எதிர்பார்ப்பதை மகன் எதிர்ப்பதை எப்படி புரிந்து கொள்வது?
வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டி என்றே எடுத்துக் கொள்ளலாம்.
‘நான் முதலமைச்சர் வேட்பாளர்ன்னுதான் தேமுதிக உள்ள வரக் கூடாதுன்னு வேலை செய்யறாங்களாய்யா?’ என்று துரைமுருகனிடம் கலைஞரிடம் கேட்டிருக்கிறார். பழம் கனியவில்லை என்றவுடன் பேச்சுவார்த்தைக்கு கனியையே அனுப்பலாம் என்று தலைவர் எடுத்த முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டதே பொருளாளர்தான் என்கிற தகவலும் உண்டு. தேமுதிக கைவிட்டுப் போனதை கலைஞர் கசப்புடனேயே பார்த்துக் கொண்டிருந்ததாகத்தான் தெரிகிறது.  இதைத் திமுகக்காரர்கள் ஒத்துக் கொள்ளவே போவதில்லை என்றாலும் இதுதான் உண்மை. பலவிதமான நாடகக் காட்சிகளுக்குப் பிறகு கனிந்த பழம் வேறொரு பால் குண்டாவில் விழுந்துவிட்டது. தேவையில்லாமல் ‘தேமுதிக வந்தால் ஜெயித்துவிடலாம்’ என்பது போன்ற மாயை உருவாக்கி அவர்கள் இல்லை என்னும் சூழலில் ‘ஒருவேளை தோத்துடுவோமோ?’ என்கிற எதிர்மறையான சிந்தனையை சாமானியத் தொண்டனிடம் விதைத்துவிட்டதுதான் இப்போதைக்கு திமுக கண்டபலன். 
அதிமுக மிகச் சரியாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. செயல்படாத அரசாங்கம், ஊழல் கறை படிந்த ஆட்சியாளர்கள் என்பதையெல்லாம் ஓபிஎஸ், நத்தம், பழனியப்பன் தலையில் தூக்கிப் போட்டுவிட்டு ‘எல்லாம் இந்த கேடிகள் செஞ்ச தப்பு..அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாதாம்..பாவம்’ எனப் பேச வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஒருவேளை திமுகவும் தேமுதிகவும் சேர்ந்திருந்தால் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் உள்ளூரில் செல்வாக்கு வாய்ந்தவர்கள் வேட்பாளர்கள் ஆகியிருப்பார்கள். இப்பொழுது அதற்கும் அவசியமில்லை. யாரை வேண்டுமானாலும் நிறுத்துவார்கள். வெகு சீக்கிரம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். ‘இந்தத் தொகுதிகளை நீங்க பார்த்துக்குங்க’ என்று ஒவ்வொரு பெருந்தலைகளுக்கும் சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டு மேலிருந்து கீழாக பட்டுவாடா செய்வார்கள். எங்கேயாவது பட்டுவாடா தடைபட்டால் தயவுதாட்சண்யமே இல்லாமல் பொறுப்பாளரைத் தூக்கி வீசுவார்கள். எல்லாம் ஜரூராக நடக்கும். சரியான எதிரணி இல்லாதது, கரைபுரண்டு ஓடப் போகிற அதிமுகவின் பணபலம் போன்றவை கட்சியை கரை சேர்த்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.
அதிமுகவுக்கு ஆதரவான தொனியாக இருந்தாலும் இவற்றைத்தான் Fact ஆகப் புரிந்து கொள்கிறேன். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதில் எனக்கும்தான் விருப்பமில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் உருப்படியான எந்த வளர்ச்சித் திட்டமுமில்லை. அரசாங்கம் செயல்படவேயில்லை என்று அதிகாரிகளே சலித்துப் போய்த்தான் கிடக்கிறார்கள். மாநிலத்தின் வளர்ச்சி அதலபாதாளத்தில் கிடக்கிறது என்பதுதான் நிதர்சனம். ஆனால் பொது மனிதனுக்கு அதுபற்றிய பெரிய கவலை எதுவும் இருக்கப் போவதில்லை. ஆடு மாடு கொடுத்தார்கள், இலவசங்கள் கொடுத்தார்கள், மின்சாரம் இருக்கிறது என்பதுதான் முக்கியக் காரணிகளாக இருக்கப் போகிறது. 
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை  தூண்டிவிடுகிற வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். இந்த முறை திமுக இன்னமும் அத்தகையதொரு வேலையை ஆரம்பிக்கவே இல்லை என்பதுதான் நிஜம். நமக்கு நாமே, கூட்டணி உடன்பாடு என எதுவுமே அலையை உண்டாக்குகிற வேலை எதையும் செய்திருக்கவில்லை. சவசவத்துப் போன இந்த நடவடிக்கைகளினால் அதிமுக அரசுக்கு எதிரான மனநிலையை வாக்காக அறுவடை செய்கிற வேலைகளில் இதுவரைக்கும் திமுக தோற்றிருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிமுகவின் பி டீம்தான் மநகூ என்று புலம்புவதைவிடவும் திமுகவுக்குள்ளேயே இருக்கும் அதிமுகவின் பி டீமைக் கண்டுபிடித்தாலே கூட திமுக தம் கட்டிக் கொள்ளலாம். ‘நாங்கதான் ஹைடெக்காக கட்சியை நடத்துகிறோம்’ என்று சொல்கிற குழுதான் அதிமுக வெல்வதற்கான அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருகிறார்கள் போலிருக்கிறது. ஒருவேளை கலைஞர் முதல்வராக அமர்ந்து கட்சிக்குள் கண்டவர்கள் தலையெடுப்பதை வேடிக்கை பார்ப்பதைவிடவும் எதிர்கட்சியாகவே இருந்து கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறாரோ என்னவோ?
தேமுதிக+மநகூ என்பதெல்லாம் சென்சேஷனல் செய்தி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் பெரிதாக எதையும் சாதிக்கப் போவதில்லை. விஜயகாந்த் தன்னுடையப் பெயரைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறார். அவரைத்தான் முதலமைச்சர் என்று காட்டி பாலபாரதியும் திருமாவும் நல்லக்கண்ணுவும் ஒலிவாங்கியைப் பிடிக்கப் போகிறார்கள். பாவமாக இருக்கிறது. இப்படித்தான் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கித் தரப் போகிறார்கள். தொகுதிக்குத் தொகுதி வாக்குகளைப் பிரித்து நிறையத் தொகுதிகளில் மிகக் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகிறார்கள். 
தேர்தலுக்கு இன்னமும் அறுபது நாட்கள் இருக்கின்றன. ஏதேனும் பெரிய தில்லாலங்கடி வேலை நடக்காவிட்டால் களம் இப்படித்தான் இருக்கப் போகிறது. இன்றைய சூழலில் மேற்சொன்னவற்றையெல்லாம் ஒரு சேரப் பார்த்தால் தனிப்பட்ட முறையில் எது நடக்கக் கூடாது என விரும்புகிறேனோ அது நடந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன். திமுகவின் உள்ளடி வேலைகள், மநகூ+தேமுதிகவின் வாக்குப் பிரிக்கும் திட்டம் போன்றவற்றையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட Game over என்றுதான் என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.
என்னமோ நடக்கட்டும். நமக்கு எதுக்குங்க அரசியல் எல்லாம்? வேலையைப் பார்க்கலாம்.    nisaptham.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக