செவ்வாய், 15 மார்ச், 2016

திருமாவளவன்:விஜயகாந்துக்கு கடைசியான அழைப்பு அனுப்பியுள்ளோம்...தனி அணி அமைக்க வேண்டாம்

சென்னை, மார்ச் 15- மக்கள் நலகூட்டணி தலைவர்களில் ஒருவரான திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கே: தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதாக மக்கள் நலகூட்டணி கூறுகிறது. அது எந்த வகையிலான மாற்றமாக இருக்கும்?
ப: இரண்டு திராவிட கட்சிகளையும் மாற்றி மாற்றி மக்கள் ஆட்சியில் அமர்த்தி பார்த்து விட்டார்கள். ஆட்சி அமைக்கும் வலிமை அவர்களிடம் இருப்பதாக கருதி அப்போது ஆதரித்தார்கள்.
இப்போது இரு கட்சிகள் மீதும் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். மக்கள் நல கூட்டணி வலிமை பெற்ற அணியாக இருக்கிறது. எனவே மக்கள் ஆதரிக்க முன்வந்துள்ளார்கள். இரு கட்சிகளுக்கும் மாற்றான ஒரு ஆட்சியை, மக்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

கே: உங்கள் கூட்டணியில் இருக்கும் தலைவர்களும் இரு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி அமைத்தவர்கள் தானே?
ப: தேர்தலில் கூட்டணி அமைத்தது. தொகுதி பங்கீடு செய்து கொண்டது உண்மை. ஆனால் நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இடம் பெறவில்லை. எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளானதில்லை. மதுக்கடைகள் திறந்தது, ஊழல் குற்றச்சாட்டுகள், மக்கள் விரோத செயல்களுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது.
கே: அனைத்து தொகுதிகளிலும் அமைப்பு ரீதியாக மக்கள் நல கூட்டணி பலமாக உள்ளதா?
ப: கட்டாயமாக உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 40 பேரை கொண்ட குழுவை நியமித்து இருக்கிறோம். பொருளாதார வலிமை இல்லாவிட்டாலும் தேவையான அளவு தொண்டர்கள் பலம் உள்ளது. கட்டமைப்பு வசதியும் உள்ளது.
கே: அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கிறது. அதை முறிடியக்கும் அளவு உங்களிடம் வாக்கு வங்கி இருக்கிறதா?
ப: வாக்கு சதவீதம் என்பது எங்கள் கூட்டணி கட்சிகள் அந்த கட்சிகளுடன் கூட்டணியில் இருந்த போது பெற்றதுதான். தனியாக நின்று வாங்கியது இல்லை. கடந்த தேர்தலில்தான் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. அப்போதும் சில சிறிய கட்சிகள் கூட்டணியில் இருந்தது.
எவ்வளவு தொகுதியில் போட்டியிடுகிறது என்ற அடிப்படையில்தான் வாக்கு சதவீதத்தை பார்க்கிறார்கள். இது அனைத்து தொகுதிகளுக்கும் உரியது என்று கூறமுடியாது.
கே: அ.தி.மு.க. வெற்றிக்காக மக்கள் நல கூட்டணி மறைமுக உதவி செய்வதாக கூறப்படுவது பற்றி...?
ப: அப்பட்டமான பொய். மக்கள் நல கூட்டணி வலிமை பெற்று வருவதால் காழ்ப்புணர்ச்சியில் பரப்பும் கருத்து இது.
அது உண்மை என்றால் என்னை விமர்சனம் செய்யுங்கள். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதை சொல்லுங்கள் என்று கூறியிருப்பாரா? நாங்கள் அவருக்கு பினாமியாக இருந்தால் அவரை விமர்சித்து பேச எங்களை தூண்டிவிடும் அளவுக்கு அவர் விபரம் தெரியாதவரா? தி.மு.க. செய்யாத அளவுக்கு நாங்கள் அ.தி.மு.க.வை விமர்சித்து வருகிறோம்.
கே: மேற்கு வங்கத்தில் காங்கிரசோடு கம்யூனிஸ்டு கை கோர்த்துள்ளது. இங்கே காங்கிரசை எதிர்க்கிறது. இது முரண்பாடு இல்லையா?
ப: தேசிய கட்சிகளுக்கு தேசிய அளவில் ஒரே நிலைப்பாடு இருக்கும். மாநில அளவில் வரும் போது மக்கள் விரோத அரசுகளை அகற்ற இருவரும் இணைந்தால் தான் முடியும் என்கிற போது மாநிலத்துக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படுகிறது.
இது தேர்தல் யுக்தி தான். தமிழ்நாட்டில் காங்கிரஸ் செய்த தவறுகளுக்காக எதிர்க்கிறோம். மேற்கு வங்கத்தில் இடது சாரிகள் எடுத்துள்ள முடிவால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் வராது.
கே: அப்படியானால் கட்சிகளின் ஒரே குறிக்கோள் ஆட்சிக்கு வருவது. அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது மட்டும்தானா?
ப: இந்த பார்வை தவறானது. அப்படி ஒரு எண்ணம் இருந்து இருந்தால் ஆட்சி முக்கியம் அதிகாரம் முக்கியம் என்று நினைத்து இருந்தால் பெரிய கட்சிகளோடு அல்லவா கூட்டணி வைத்திருப்போம்.
கே: தேர்தலுக்கு பிறகு தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம் என்கிறீர்கள். ஒரு வேளை விஜயகாந்த் உங்கள் அணியில் சேர்ந்தால் அவரை அறிவிப்பீர்களா?
ப: தனி அணி அமைக்க வேண்டாம். மக்கள் நல கூட்டணிக்கு வாருங்கள் என்று விஜயகாந்த்துக்கு கடைசியான அழைப்பு விடுத்துள்ளோம். வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. வந்தால் அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
கே: எந்த நம்பிக்கையில் ஆட்சியை பிடிப்பதாக கருதுகிறீர்கள்?
ப: நாங்கள் பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மிகப்பெரிய சக்தியாக வளருவோம். விடுதலை சிறுத்தைகள் குறிப்பிட்டதை போல் கூட்டணி ஆட்சி மலரும்.
கே: கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு எளிமையான அரசியல்வாதி. அவர் முதல்வராகும் தகுதி உள்ளவர் என்கிறீர்கள். நீங்கள் வெற்றி பெற்றால் அவரை முதல்வர் ஆக்குவீர்களா?
ப: வெற்றி பெற்ற பிறகு அதை பற்றியும் கவனத்தில் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக