சனி, 5 மார்ச், 2016

குஷ்புவுக்கு சீட் தரக்கூடாது...ஸ்டாலின் காங்கிரசுக்கு நிபந்தனை?

நடிகை குஷ்புவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தரக் கூடாது என காங்கிரஸுக்கு முக்கிய ‘கூட்டணி’ நிபந்தனையாக திமுக விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டசபை தேர்தலில் திமுக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. திமுகவை விட்டால் தமிழகத்தில் வேறு கட்சிகள் எதுவும் காங்கிரஸை கூட்டணிக்கு சேர்க்கப் போவதும் இல்லை. இதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு; கறார் தொகுதிப் பங்கீடு என்பது போன்ற வெற்று முழக்கங்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டது காங்கிரஸ். 35 தொகுதிகளில் பேரத்தை தொடங்கி தற்போது 25 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். அத்துடன் திமுக தரப்பில் மற்றொரு முக்கிய நிபந்தனையும் விதிக்கப்பட்டதாம்.

குஷ்புவுக்கு சீட் தரக் கூடாது திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவிய நடிகை குஷ்புவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவே கூடாது என்பதுதான் அந்த நிபந்தனையாம். குஷ்பு திமுகவில் இருந்த போது ஸ்டாலினை தலைவராக ஏற்க முடியாது என பேட்டி கொடுத்தவர். இதனால் கொந்தளித்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்பு மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர் திமுகவை விட்டே வெளியேறினார். இருந்தாலும் குஷ்பு மீது ஸ்டாலின் தரப்பு கடும் கோபத்தில் இருப்பதால்தான் இந்த நிபந்தனை கறாராக சொல்லப்பட்டதாம்.
ஈரோட்டில் நிற்க முயற்சி முதலில் இந்த நிபந்தனையால் கொஞ்சம் ஜெர்க் ஆனதாம் காங்கிரஸ் தரப்பு. ஏனெனில் குஷ்புவைப் பொறுத்தவரையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தொகுதியில் நிற்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்; இதற்காகவே அண்மையில் ஈரோடு சென்றிருந்த குஷ்பு, கணவர் சுந்தர் சி பிறந்த சூரம்பட்டி மொசுவண்ண கவுண்டர் சந்தில் உள்ள வீட்டை தேடி கண்டுபிடித்து நான் ஈரோட்டு மருமகளாக்கும் என்றெல்லாம் கூறிக் கொண்டார். இதனால் காங்கிரஸ் தரப்பு கொஞ்சம் பலமாகவே யோசித்ததாம். இருப்பினும் வேறுவழியே இல்லாமல் இந்த கறார் நிபந்தனைக்கு காங்கிரஸ் தரப்பு ஒப்புக் கொண்டதாம்.
கொந்தளித்த குஷ்பு இந்த தகவல் குஷ்புவுக்கு லேட்டாக தெரிவிக்கப்பட கடும் அதிர்ச்சி அடைந்தாராம்… எங்க கட்சி விவகாரத்தில் அவங்க எப்படி தலையிடுவாங்களாம்? எனவும் கொந்தளித்திருக்கிறார்.
குட்டி கலாட்டா அத்துடன் கடந்த சில நாட்களாக எனக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன் என பத்திரிகைகள் மூலம் செய்தியை பரப்பி குட்டி கலாட்டாவை நிகழ்த்தி வருகிறார். இது திமுகவில் ஸ்டாலின் தரப்பை ரொம்பவே கோபப்படுத்திக் கொண்டிருக்கிறதாம். அதே நேரத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஏற்கனவே இருக்கிற கோஷ்டி பிரச்சனையை சமாளிக்க முடியலை; இந்தம்மா பிரச்சனையை எப்படி சமாளிப்பது என புலம்புகிறாராம்.
oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக