வியாழன், 24 மார்ச், 2016

ரோஹித் பெயரில் சட்டம் வரும் வரை போராட்டம்... எச்சரிக்கும் கன்ஹையா குமார் ஹைதராபாத்தில் பல்கலை கழக வாசலில்....


ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலாவின் பெயரில் சட்டம் இயற்றப்படும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா, ரோகித்தின் சகோதரர் ராஜா ஆகியோரை சில மாதங்களுக்கு முன் நேரில் சந்தித்து தேச துரோக வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்ஹையா குமார் ஆறுதல் கூறினார்.
< இந்நிலையில், நேற்று மாலை ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்னும் தலைப்பில் பேசுவதற்காக கன்ஹையா குமாருக்கு, பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்து இருந்தது. இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சமூக நீதிக்காகப் போராடி வரும் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காவல்துறை அனுமதி அளித்தால் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பேன்.

தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வேமூலாவின் தாய் ராதிகாவையும், அவரது சகோதரர் ராஜாவையும் சந்திக்க உள்ளேன். ரோஹித் வேமூலாவின் கனவு நிறைவேற வேண்டும். கல்வி நிறுவனங்களில் ஜாதி ரீதியில் பாகுபாடு காணப்படுவதைத் தடுக்க ரோஹித் பெயரில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.

ரோகித் வெமுலாவின் தற்கொலை விவகாரத்தை மத்திய அரசு மறைக்க முயற்சிக்கிறது. ரோகித் போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்வரை எங்களது போராட்டம் தொடரும்" என்றார்.

இதற்கிடையே, ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கன்ஹையா குமார் பல்கலைக்கழகத்தில் பேச இருப்பது தொடர்பாக அனுமதி கேட்டு யாரும் எங்களிடம் தொடர்பு கொள்ளவில்லை. நிச்சயமாக இதற்கு நாங்கள் அனுமதி அளிக்கவும் மாட்டோம்" என்றார்.

இதேபோல் அப்பல்கலைக்கழக பதிவாளர் சுதாகர் கூறும்போது, ''பல்கலைக்கழகத்தில் நிலவும் சூழ்நிலை கருதி 23–ம் தேதி (நேற்று) முதல் 26–ம் தேதி வரை வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த 4 நாட்களிலும் ஊடகத்துறையினர், அரசியல் கட்சியினர் உள்பட யாரையும் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிப்பது இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ள" என்றார்.

ஆனால், மாலையில் கன்ஹையா குமார், இந்திய கம்யூனிஸ்டு தலைவர்களுடன் பல்கலைக்கழகத்துக்குள் செல்ல முயன்றார். அப்போது, துணைவேந்தரின் பாதுகாவலர்கள் அனுமதி இல்லாமல் நீங்கள் உள்ளே செல்ல முடியாது என்று அவரை தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது. அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து கன்ஹையா குமார் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.  விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக