சனி, 12 மார்ச், 2016

விஜயகாந்த் கூட்டணிகள் பேச்சுவார்த்தை....மூன்றும் தோல்வி! ஏன்? விபரம் வெளியானது!

விகடன்.com :மிஸ்டர் கழுகு: மூன்று பேரங்கள்... முறுக்கிக்கொண்ட விஜயகாந்த்! தனித்துப் போட்டி... முடிவின் பின்னணி!தே.மு.தி.க. மகளிர் தினப் பொதுக்கூட்டம் முடிந்தபிறகு வருகிறேன்” என்று கழுகார் செய்தி அனுப்பி இருந்தார். கழுகார் செல்கிறார் என்றால், அந்தக் கூட்டத்துக்கு ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது என்பதால் காத்திருந்தோம். எதிர்பார்த்தது மாதிரியே தனது முடிவை அறிவித்துவிட்டார் விஜயகாந்த். தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கேட்டதுமே அலுவலகம் நோக்கிப் பறந்து வந்தார் கழுகார்.

‘‘விஜயகாந்த் முடிவின் பின்னணி என்ன?” என்ற கேள்வியைப் போட்டோம்.

‘‘பின்னணியில் நடந்ததில் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதனால்தான், இந்த முடிவுக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டார்” என்றபடி சொல்ல ஆரம்பித்தார்.


‘‘மூன்று கூட்டணிகளுடன் விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்று பேரிடமும் அவர் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். முதலில் தி.மு.க கூட்டணியில் 104 இடங்கள், துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் இடம், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகித இடங்கள் என்று கோரிக்கை வைத்தார். ‘கடந்த முறை அ.தி.மு.க கொடுத்த 41 சீட் தருகிறோம்’ என்று தி.மு.க சொன்னது. இறுதியில் 50 வரைக்கும் தர தி.மு.க ஒப்புக்கொண்டது. அதற்கு மேல் ஏறவில்லை. 55 என்று கருணாநிதி முடிப்பார் என எதிர்பார்த்தார்கள். மற்ற கோரிக்கைகளான துணை முதல்வர், அமைச்சரவையில் இடம் ஆகியவைப் பற்றிப் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் 20 சதவிகிதம் தரலாம் என்று சொன்னார்கள். தி.மு.க இறங்கி வரவில்லை என்ற கோபம் இருந்தது விஜயகாந்த்துக்கு. அதனால்தான் பி.ஜே.பி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.”

‘‘அங்கு என்ன கோரிக்கை வைத்தார்?”

‘‘பி.ஜே.பி கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கச் சொன்னார். 150 இடங்கள் தரவேண்டும் என்றார். சுதீஷுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டார். பிரேமலதாவுக்கு மத்திய பொறுப்பு கேட்டார் என்று பி.ஜே.பி தரப்பினர் சொல்கிறார்கள். இவை எதையும்
பி.ஜே.பி ஏற்கவில்லை. ‘நாங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்று விஜயகாந்த்தை அறிவிக்க மாட்டோம். அந்த வாக்குறுதியை அவருக்குத் தரவில்லை’ என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சொன்னார். இதுவும் விஜயகாந்த்துக்கு பின்னடைவு ஆனது.”

‘‘மக்கள் நலக் கூட்டணியில் என்ன நடந்தது?”

‘‘வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அவரைப் போய் பார்த்தார்கள். அது அனைவருக்கும் தெரியும். இரண்டு வாரங்களுக்கு முன் விஜயகாந்த் அனுப்பி, வைகோவைச் சந்திக்க ஒருவர் வந்துள்ளார். ‘கேப்டனை முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் அறிவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். ‘மற்ற தலைவர்களுடன் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்றார் வைகோ. ஆனால் அவரிடம் இருந்து, இது சம்பந்தமாக எந்தத் தகவலும் விஜயகாந்த்துக்கு வந்து சேரவில்லை. 120 தொகுதிகள் கொடுக்கலாம் என்று மட்டுமே அந்தத் தலைவர்கள் நினைத்து இருந்தார்களாம். இப்படி முதலமைச்சர் வேட்பாளர், துணை முதல்வர் என்ற எந்தக் கோரிக்கையும் நிறைவேறாத நிலையில் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்துள்ளார்” என்ற கழுகார் அடுத்த மேட்டருக்கு தாவினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக