வியாழன், 17 மார்ச், 2016

நேர்மையாக கொரியன் படத்தை ரீமேக் செய்த நலன் குமாரசாமி

(டி.என்.எஸ்) வெளிநாட்டு படங்களை சொல்லாமல் காப்பியடிப்பதும், உள்நாட்டு படங்களை ரீமேக் என்ற பெயரில், சொல்லிவிட்டு காப்பியடிப்பதும் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வரும் கலாச்சாரம் தான் என்றாலும், முதல் முறையாக வெளிநாட்டு படம் ஒன்றை ரீமேக் என்ற பெயரில் சொல்லிவிட்டு காப்பியடித்திருக்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி. பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னையில் வேலை தேடி சுற்றும் நாயகி மடோனா செபாஸ்டியனின் லட்சியமும், ஒயின்ஷாப் பார் முதலாளியாக வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழும் விஜய் சேதுபதியின் லட்சியமும் நிறைவேறியதா இல்லையா, என்பது தான் இப்படத்தின் கதை.
ஒரே இடத்தில் வாழும் இவர்களது லட்சியத்தின் பயணமும், அதில் வரும் பிரச்சினைகளும் தான் திரைக்கதை.
‘மை டியர் டெஸ்பரடோ’ என்ற கொரியன் படத்தின் தழுவல் தான் இப்படம், என்று சொல்வதைவிட, அப்படத்தின் ஈ அடிச்சான் காப்பி தான் இப்படம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். (என்னதான் பணம் கொடுத்து ரைட்ஸ் வாங்கியிருந்தாலும், இப்படி டிட்டோவா காப்பியடிப்பது)
படத்திற்கு படம் தனது தனி திறமை மூலம் ஜொளிக்கும் விஜய் சேதுபதி, தனது இயல்பான நடிப்பு மூலம் ஸ்கோர் செய்கிறார். ஏன், மொத்த படத்தை சுமப்பதே விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும், அவரது பர்பாமன்ஸும் தான். இதற்கு முன்பு இதுபோன்ற வேடங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும், தன்னால் முடிந்த அளவுக்கு சிறு சிறு வித்தியாசங்களை தனது நடிப்பில் காட்டியிருப்பது படத்திற்கு பெரும் பலமாக உள்ளது.
அறிமுக நாயகி மடோனா செபாஸ்டியன் அழகில் சுமாராக இருந்தாலும், நடிப்பில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சூப்பராக பயன்படுத்தியுள்ளார்.
சில படங்களில் நம்மை கவனிக்க வைக்கும் சமுத்திரக்கனி, பல படங்களில் சும்மா வந்துபோவதை போல இந்த படத்திலும் வந்து போகிறார். கவுன்சிலராக நடித்துள்ள நடிகரும், அவரது தம்பியாக நடித்துள்ள கிரணும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தாலும், அவர்களது கதாபாத்திரங்கள் டம்மியாகவே உள்ளது.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அதிலும், “ககக போ...” பாடல், கைதட்டல் பெறுகிறது. படத்தின் முதல் பாதியில் கச்சிதமாக கத்திரி போட்ட எடிட்டர் லியோ ஜான் பால், இரண்டாம் பாதியில் சற்று கத்திரி போட்டியிருக்கலாம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சிகளில்.
காட்சிகளிலும், திரைக்கதையிலும் மாற்றம் ஏதும் இல்லை என்றாலும், வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.
நாயகன், நாயகி இவர்களுக்கு இடையே வரும் சிறு சிறு மோதலும், அவர்களிடம் ஏற்படும் காதல் உணர்வுகளும் தான் முழு படமே என்றாலும், காதலிலும், மோதலிலும் எந்தவிதமான ஈர்ப்பும் இல்லை. மாறாக விஜய் சேதுபதியின் நடிப்பும், அவரது கதாபாத்திர அமைப்பும் தான் படத்தை ரசிக்க வைக்கிறது.
‘சூது கவ்வும்’ படம் மூலம் தன்னை நிரூபித்த இயக்குநர், தனது இரண்டாம் படத்தில் இயக்குநராக எந்த இடத்திலையும் நிரூபிக்கவில்லை. மொத்தத்தில், ‘காதலும் கடந்து போகும்’ விஜய் சேதுபதி என்ற முத்திரைக்கொண்ட படமாகவே உள்ளது.
ஜெ.சுகுமார்  //tamil.chennaionline.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக