ஞாயிறு, 20 மார்ச், 2016

ஸ்டாலின் :அமைச்சர்களை பலிகடா ஆக்குவது ஜெயலலிதாவுக்குப் புதிதல்ல..

ஜெயலலிதா செய்த பெரிய தவறுகளை மூடி மறைப்பதற்கு, சிறிய சிறிய தவறுகளை செய்திருக்கக் கூடிய அமைச்சர்களை பலிகடா ஆக்குவது அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் புதிதல்ல என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார். . திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும்?
விரைவில் அனைத்துப் பணிகளும் நடைபெற்று முடிந்த பிறகு நாங்களே உங்களை அழைத்து விவரங்கள் வழங்குகிறோம். 

இன்றைய பயணத்தில் தொகுதி பங்கீடு பற்றி பேசி முடிவெடுக்கப்படுமா?
இன்று திராவிடர் கழகத்தின் மாநாட்டுக்காக சென்று கொண்டு இருக்கிறேன். தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய திமுக சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு கூடி தொகுதி பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பிறகு முடிவெடுக்கப்படும் என்று ஏற்கெனவே தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியை பிரிக்க திமுக முயல்வதாக அந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து திமுக மீது விமர்சனம் வைத்து வருகிறார்களே?
அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய வேறு எந்த வழியும் தெரியாததால், பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை என்பதால் அப்படி பேசி, பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்து விட்டதா?
தேர்தல் அறிக்கை தயாராகி கொண்டு இருக்கிறது. அது முழுமையடைந்த பிறகு பத்திரிக்கையாளர்களை முறையாக அழைத்து வெளியிடப்படும்.
உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை குறித்து அரசு எந்த விளக்கமும் கொடுக்கவில்லையே?
பத்திரிகையாளர்கள் போயஸ் கார்டனுக்கு நேரில் சென்று முதல்வர் ஜெயலலிதாவிடம் தான் அதைக் கேட்க வேண்டும். அவருக்கும் சசிகலாவுக்கும் ஏதோ தகராறு என்று சொல்கிறார்கள், அதேபோல ஓ.பன்னீர்செல்வத்தை உள்ளேயே விடவில்லை என்று சொல்கிறார்கள், அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை அங்கே நிலவுவதால், இது குறித்தெல்லாம் அறிக்கை விட அவருக்கு நேரம் இல்லை, எனவே, நீங்கள் அங்கே நேரில் சென்று, அவரைத் தேடி கண்டுபிடித்து, அவரிடம் கேட்க வேண்டும்.
அதிமுக அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வருவது தமிழ்நாட்டுக்கு ஆரோக்கியமான சூழலா ?
ஜெயலலிதா செய்த பெரிய தவறுகளை மூடி மறைப்பதற்கு, சிறிய சிறிய தவறுகளை செய்திருக்கக் கூடிய அமைச்சர்களை பலிகடா ஆக்குவது அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் புதிதல்ல.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார். /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக