செவ்வாய், 1 மார்ச், 2016

சசிகலா ஒரத்தநாடு தொகுதியில் போட்டி?

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி, இந்தத் தேர்தலில் அனைவரது கவனத்தையும் பெறும் வகையில் விவிஐபி தொகுதியாகப் போகிறது என்ற பேச்சு தற்போது பரவலாகக் கேட்கிறது. கடந்த 2001 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் அதிமுக வசம் உள்ளது. தற்போதைய வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் இங்கு 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது முதல்வர் ஜெய லலிதாவின் தோழி சசிகலா, இந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதாக தொகுதி முழுக்க பேசிக் கொள்கிறார்கள். இதுகுறித்து உள்ளூர் அதிமுக பிரமுகர் ஒருவர் கூறும்போது, ‘‘சசிகலா போட்டியிடப் போவதாக பேச்சு இருப்பது உண்மைதான். ஆனால், கட்சித் தலைமையிடம் இருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. ஒரத்தநாட்டில் சசிகலா போட்டி யிடுவதாக இருந்தால் தஞ்சாவூர், மன்னார்குடியில் உள்ள அவரது உறவினர்களும், கட்சிக்காரர்களும் இந்நேரம் களத்தில் இறங்கி யிருப்பார்கள். அப்படி எந்த அறிகுறியும் இல்லை’’ என்றார்.

பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘சசிகலாவின் சொந்த ஊர் மன்னார்குடி. கடந்த தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்தித்த போதிலும் மன்னார்குடியில் வெற்றி பெற்றது. அதனால் மன்னார்குடியை அதிமுகவுக்கு பாதுகாப்பான தொகுதியாக கருத முடியாது. ஒரத்தநாடு அதிமுகவுக்கு மிகவும் சாதகமான தொகுதி. அமைச்சர் வைத்திலிங்கம் தொகுதியை நன்றாகவே வைத்துள்ளார். சசிகலா இங்கே போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று கூறப்படுகிறது. அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு அருகிலுள்ள தஞ்சாவூர் அல்லது பேராவூரணி ஒதுக்கப்படும் என்று பேசிக் கொள்கிறார்கள்’’ என தெரிவித்தார்.
‘‘போயஸ் தோட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் உறவினர்கள் சிலர் வேண்டுமென்றே இந்த வதந்தியை பரப்பி வருவதாக சிலர் கூறுகின்றனர்’’ என்றார் ஒரு பத்திரிகையாளர். ‘‘ஒரத்தநாடு மட்டுமல்ல, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி என சுற்றுவட்டார ஊர்களிலும் இதே பேச்சாக உள்ளது. நெருப்பு இல்லாம புகையாதுப்பா” என்றார் தஞ்சையைச் சேர்ந்த ஒரு கட்சிக்காரர்.  தமிழ்.ஹிந்து.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக