வியாழன், 17 மார்ச், 2016

பேரவையிலிருந்து நடிகை ரோஜா இடைநீக்கம்: ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான ரோஜாவை ஆந்திர சட்டப்பேரவையிலிருந்து ஓராண்டு காலம் இடைநீக்கம் செய்த நடவடிக்கைக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தின் நகரி தொகுதியில் இருந்து எம்எல்ஏ-வாக நடிகை ரோஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸைச் சேர்ந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆந்திரச் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளும் தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் குறித்தும், முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்தும் ஆட்சேபகரமான சில கருத்துகளைத் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து ரோஜாவை அவை நடவடிக்கைகளிலிருந்து ஓராண்டு காலம் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதி ராமலிங்கேஸ்வர ராவ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
அவை நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் எந்த ஒர் உறுப்பினரையும் கூட்டத் தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யும் உரிமை பேரவைத் தலைவருக்கு உண்டு. அதேவேளையில், எம்எல்ஏ ரோஜா இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை.
அதை மனுதாரருக்கு சாதகமாக்கி ரோஜாவுக்கு எதிராக ஆந்திர சட்டப் பேரவைத் தலைவர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி ராமலிங்கேஸ்வர ராவ் தெரிவித்தார்.
இதனிடையே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. பேரவைத் தலைவரின் முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என விதிகள் உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக