சனி, 19 மார்ச், 2016

விசாரணை - ஒரு பார்வை.. சரியான புள்ளியில் எடுத்து பிணைந்த திரைக்கதையில்..

visaranai 296கீற்று.com :ஒரு காவல் நிலையத்துக்குள் இருந்து தப்பி வந்தது போலதான் உணர்ந்தேன்... அதே சமயம்.. ஓர் இழவு வீட்டிலிருந்து வெளியேறும் மன நிலையில்தான் படம் முடிந்த பிறகு திரை அரங்கில் நிலவிய அமைதி உணர்த்தியது..... அதில் அச்சம் நிறைந்த வேறு உலகின் இருண்மைத் தத்துவம் லத்திகளாலும்... துப்பாக்கிகளாலும்..... அதிகாரங்களாலும்...சிஸ்டங்களாலும் சூழ்ந்து இருந்தன...படித்தவன் செய்யும் பாவம்.... ஐயோவென போகிறான் அப்பாவி.... மாற்றி எழுதும் வன்மத்தின் விரிசல்.. குடித்துக் கொண்டேயிருப்பது என்னவோ... ஒன்றுமில்லாதவன் குருதியைத்தான்...

கருப்பு வெள்ளை பக்கங்களை... மெல்ல மெல்ல சிவப்பாக்கும்.. சூட்சுமக் கூட்டுக்குள்தான்.. கூடு கட்டி நிற்கிறது.. மனித பரிணாமம். புழுவாகி.... மீனாகி, விலங்காகி.. மனிதனானாலும்... விலங்கின் எதிர்மறை சிந்தனைகளால் அவன் இன்னும் பாதுகாக்கப் படுகிறான்...அவன்... பொறி வைத்துக் கொண்டே இருக்கிறான்... அதில் அவனே மாட்டியும் கொள்கிறான்... கருத்து அறுபடும்போது.... மீண்டும் சிஸ்டத்தை மாற்றுகிறான்...பின் அதையே சிஸ்டம் என்கிறான்...அதன் நீட்சியாக எய்து விட்ட தோட்டாவை நோக்கி ஓட, காரணம் கண்டு பிடித்துக் கொள்கிறான்... காரணமே இல்லாமல் சாக இருக்கவே இருக்கிறது ஒரு கூட்டம்.. அது பூங்காக்களிலும்......சேரிகளிலும்... கடற்கரைகளிலும்...சாலை ஓரங்களிலும் குவிந்து கிடக்கின்றன, ஜனநாயகத்தை காரணமே இல்லாமல் சுமந்து கொண்டு......இங்கும் நால்வர் அப்படி இருக்கிறார்கள்...விளிம்பு நிலை மனிதர்கள்... விலை போகாத மனிதர்கள்..விழி பிதுங்கி தடுமாறுகையில்... உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசும் நாம்... பூனைகளாகி திரை அரங்குக்குள் அடைபட்டிருக்கிறோம்...மனம் முழுக்க மெல்ல மெல்ல படரும்...நிஜங்களை உள்வாங்க முடியாமல் குமட்டிக் கொண்டு வருகிறது.. பெருமூச்சு...
காரணத்தை விதைப்பவர்கள் அதிகார வர்க்கமாகவே இருக்கிறார்கள்... எங்கும்... இங்கும்... ..அதில்... மீண்டு வருவதென்பது.. வந்த பின்னாலும் முடியாத காரியம்... கை கொடுக்க நினைக்கும் விரல்களில்... துப்பாக்கியும்... இருப்பதில்.. எந்தப் பக்கம் பாயும் தோட்டா என்று பதில் தேடுகிறது... பரிதவிக்கும் உயிர்...
தகுதி உள்ளவையே தப்பி பிழைக்கும் என்று மீண்டும்... தத்துவத்துள் போய் விடுகிறது.. இந்த சூழல் சூத்திரம்...விளிம்பு நிலை மனிதர்களை எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளும்.. காவல் துறை.... இருண்ட நகரின் இருட்டு சரித்திரம்... மிக நுட்பமான அச்சத்தை ஓர் அரசியலைப் போல ஆழ விதைப்பதில் நிறுத்தாமல்.. அறுவடையும் செய்கிறது.... மாற்றி மாற்றி குறி மாறும் தோட்டா முனை செய்வதறியாமல் திகைக்கிறது.... திரை தாண்டி எங்கே நம்மையும் குறி பார்க்குமோ என்ற யோசித்த இடத்தில் பதைபதைப்போடு விழிக்கிறது மனித உரிமை.......
இந்த வாழ்வின் பக்கங்கள்...வெளி மனங்களாலும் அக மனங்களாலும் உருவாக்கப் படுகிறது.. மூளையின் நகர்த்துதல் ஒரு வகை பின்னல்களால்... இயங்குவதை..... உணர்ந்தே இருக்கிறோம்.. இங்குதான், தான் என்ற இருத்தலின் தகவமைப்பு மிக முக்கியமாக வெளிப்படுகிறது...... பணம் சேர்ந்தால் பிணம் அரசு செய்யும் நுண்ணிய விளைவு அதிகாரிகளைக் கொண்டு தன்னை நிகழ்த்திக் கொள்கிறது...
மூலக் கதையின் ஆசிரியர் மு. சந்திரகுமாரை எத்தனையோ முறை மிக அருகில் பார்த்திருக்கிறேன்.. பேசி இருக்கிறேன்... அவரின் மேடைப் பேச்சுக்களை கவனித்திருக்கிறேன்... உடன் அமர்ந்து உலகப் படங்கள் பார்த்திருக்கிறேன்.... இனி மீண்டும் அவரை நெருங்குகையில்..இன்னும் கொஞ்சம் அவர் உயர்ந்தே தெரிவார்... அத்தனை நெருக்கமாக உண்மைக்குள் இருந்தே படைத்திருக்கிறார் 'லாக்கப்' நாவலை. படத்திலும் அவருக்கான நியாமான இடத்தை இயக்குனர் பூர்த்தி செய்திருக்கிறார்... மிகப் பெரிய அச்சத்தை அவரின் லாக்கப் நாவலும்... விசாரணையாக மாறிய வெற்றிமாறனின் திரைக்கதையும் செய்திருக்கிறது... அது ஒரு சாட்சி... இந்த அதிகார வர்க்கத்தின் அரசியல் யுக்தியின் நெஞ்சைப் பிடித்து உலுக்கி அவர்களின் மனசாட்சியை கேள்வி கேட்க.. அல்லது பதிலை முணங்கவாது செய்ய வைக்கும் எதிர்மறை அதனூடாக நேர்மறை படபடப்பை எதிரொலிக்க வைக்கும்... ஒரு புள்ளி நகர்வு.....
மூன்று கதைகளின் கிளைகளை ஆக்ரோஷமாக ஒரு மரத்தின் கீழ் கொண்டு வந்து, நிழல் காயும்..கூட்டத்தின் மனத் திரையை கிழித்துக் காட்டியதில்... சுவர் உடைந்த சாத்திரம் தன் போர்வையை விலக்கிக் கொண்டு உங்களை நோக்கி நீட்டுவது கையல்ல.... துப்பாக்கி என்று ..... பகீர் சுருக்கு போடுகிறது.... கதையல்ல நிஜம் சங்கதி......... ஒவ்வொரு அடியும்.... உயிரை மட்டும் தொடாத கவன ஈர்ப்பு...... உயிரின் ஆழம் நடு நடுங்கும் கதறலில்.... மிரண்டுதான் நிற்கிறது.... காவல் நிலைய வாயில்.... இனி ஒரு முறை அந்தப் பக்கம் கூட போய் விடவே கூடாது என்று உள்ளுக்குள் மணி அடிக்கும் முரட்டு பிம்பத்தை பிடித்துக் கொண்டே ஓடி வருகிறது பார்வை...அடுத்தடுத்த அடுக்கு நிலை அதிகாரத்தில்... சிக்கி சின்னாபின்னமாக ஆவது இயலாமையின் கட்டமைப்பு... எங்கு தட்டியும் திறக்காத கதவைத்தான் நம் உரிமைக்கு பின் நிற்கும்... நிழல் உலகம் படைத்துக் கொண்டிருக்கிறது... ஒரு குறிப்பிட்ட பெயரில்... மிக மோசமான உலக அரசியல் செய்யும்... தத்துவத்தை எந்தப் புள்ளியில் எவன் விதைத்தது..... திரும்ப திரும்ப சுழலும் நாயின் வாலைப் போல... மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள அடித்து அடக்குதல்.. எந்த நியாயத்தின் வரைமுறை...
இந்த சிஸ்டம் பணத்தால் நிரப்பப் பட்ட வெற்றிடம்... இங்கே கண்ணுக்கு புலனாகாத இருத்தலை இல்லாமலே செய்து கொண்டிருக்கிறது, பணபலமும்.. அதிகார களமும் கொண்ட வளமிக்க கூட்டம்... வறியவன் சாகவே பிறந்தவன்... அதுவும் அதற்கு கூட காரணம் தெரியாமல்... அழுது புலம்பி, மன உளைச்சலுக்குள்.... சிக்கி.. தடுமாறி.. வெடித்து.... கடைசியில் ஏதாவது ஒரு போலி என்கவுண்டரில் செத்து போகிறான்.... இங்கு ஆரம்பமும் முடிவும்... இல்லாத ஒரு கையறு நாடகம் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.. பொம்மலாட்டக் கணக்கில் ஆடுபவன் இல்லை...
சரியான புள்ளியில் எடுத்து பிணைந்த திரைக்கதையில்...நாளை வருவதை எதிர்கொள்ளும் துணிச்சலோடுதான் இந்த டீம் களம் இறங்கி இருப்பதை உணர முடிகிறது.... அவர்கள்... எதிர்மறை... இவர்கள் நேர்மறை... கச்சிதம்... ஆனால்.... இடையில் மாட்டிக் கொண்ட சமுத்திரக்கனி...?... இதுதான்... சூட்சும உணர்த்தல்...புலி வாலைப் பிடிக்கும்... மனிதனின் கதையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தாள்... சட்டத்தின் நியாயத் தராசுக்காரி... என்று கடந்து விட முடியாத வலையில்... பார்வையாளனும் மாட்டிக் கொள்கிறான்.... அடுத்த வீட்டில் நடக்கும் காரணமின்றி ஒன்று நாளை நம் வீட்டிலும் நடக்கலாம்... அது இயல்பு என்று ஓட்டு போட 200 ரூபாய்க்கு சண்டை போட போகிறோமா.. மனித உரிமை என்பது யாரோ ஒருசாரர் போட்டு வைத்த திட்டம் அல்ல என்று உணரப் போகிறோமா...?
தண்டவாள சாவுகளும்..... தூக்கு கயிறு சாவுகளும்...... லாக்கப் சாவுகளும்... கிணற்றடி சாவுகளும்..... தீ விபத்து சாவுகளும்... நெடுஞ்சாலை விபத்துகளும்... வெறும் தலைப்பு செய்திகளா......?- யோசிக்க வைக்கிறது... விசாரணை...
விசாரணை ஆரம்பம்.... விசாரிக்கப்படுவதும்... உட்படுவதும்... நாமே... இது சாமானியனைப் பற்றிய கதை.... கடந்து விடுவது அத்தனை சுலபமல்ல...
- கவிஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக