செவ்வாய், 1 மார்ச், 2016

பாராளுமன்றத்தில் அதிமுக எம்பீக்கள் கூச்சல் குழப்பம் பாராளுமன்றம் முடக்கம்


முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது சொத்துக்கள் பற்றி ‘பயோனியர்’ ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்து இருப்பதாகவும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறை தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த செய்திகளை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத்தில் இன்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சினையை கிளப்பினார்கள். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சொத்துக்கள் பற்றி விசாரிக்க வேண்டும் ப.சிதம்பரம் மீதான ஏர்செல் – செல் மேக்சிஸ் விவகாரம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினார்கள். இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்திருந்தனர். தங்களது கோரிக்கையை அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று கிளப்பினார்கள்.


இதே போல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி சபைக்கு தவறான தகவல்கள் அறிப்பதாக கூறி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதனால் பாராளுமன்றத்தில் கூச்சல் – குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சபை 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக சபையில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசுகையில், அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதை கைவிட்டால் இது பற்றி மத்திய அரசு விவாதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

டெல்லி மேல் – சபையிலும் இன்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சொத்துக்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷம் போட்டனர். அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் மேல் – சபையின் மையப்பகுதிக்கு சென்று துணை தலைவர் முன் நின்று கொண்டு ‘‘நீதி வேண்டும், நீதிவேண்டும்’’ என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். கையில் ப.சிதம்பரம் தொடர்பாக வெளியான செய்தி பத்திரிகையை பிடித்திருந்தனர்.

அப்போது சபையை நடத்திக் கொண்டு இருந்த துணைத்தலைவர் பி.ஜே.சூரியன் அ.தி.மு.க. எம்.பி.க்களைப் பார்த்து, நீங்கள் புகார் கூறும் இருவரும் இந்த சபையின் உறுப்பினர்கள் இல்லை. சபையில் உறுப்பினர் அல்லாதவர்கள் மீது விசாரணை நடத்த நிர்ப்பந்திக்க முடியாது.

இதுபற்றி மேல் – சபை தலைவர் அமீத் அன்சாரி தான் முடிவு எடுக்க வேண்டும். உங்கள் கோரிக்கையை மத்திய அரசிடம் தான் தெரிவிக்கவேண்டும். நான் மத்திய அரசு அல்ல. மேல் – சபை துணைத்தலைவர் என விளக்கம் அளித்தார்.

என்றாலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மேல் – சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் சபை கூடியதும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மறுபடியும் சபையின் மையப்பகுதியில் சென்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் அடுத்தடுத்து 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. 3 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் அ.தி.மு.க. உறுப்பினர்களின் அமளி தொடர்ந்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் பாராளுமன்றத்தின் மக்களவையிலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மீண்டும் கோஷம் எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு எதிராக பிரச்சினையை தொடர்ந்து கிளப்பினார்கள். இதனால் சபையில் கூச்சல் அமளி நிலவியதால் சபை 2–வது முறையாக பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சொத்துக் குவிப்பு தொடர்பான புகார் குறித்து கார்த்தி சிதம்பரத்திடம் கருத்து கேட்டபோது, ‘‘சட்ட விதிகளுக்கு உட்பட்டே தொழில் நடத்தி வருகிறேன். என் மீதான புகார்கள் உண்மையில்லை என பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக