வினவு.com :அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி மட்டும்
அடையவில்லை. இன்னவென்று விளக்க முடியாத ஒரு பயம், அவலம், கையறு நிலை,
வாழ்க்கை குறித்த நம்பிக்கையின்மை அனைத்தும் அந்த இரண்டு நிமிட காட்சி
சடுதியில் ஏற்படுத்திவிட்டது. அந்த உணர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி?
உடன் கொமரலிங்கத்திற்கு புறப்பட்டோம்.
தேவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கிராமம்தான் கொமரலிங்கம். 16.03.2016 அன்று அங்கே நுழையும் போது கிராமமே மயான அமைதியுடன் இருந்தது. சுவரொட்டியோ, அரசியல் கட்சி தலைவர்களின் வருகையோ எதுவுமில்லை. தெருவுக்கு தெரு குவிக்கப்பட்டிருந்த போலீசை தவிர ஒரு தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட கிராமத்திற்கான தடையமே இல்லை.
முந்தைய நாள் 15.03.2016 இரவு போலீஸ் நடத்திய தடியடியின் விளைவு தான் அந்த அமைதி என்பதை பின்னர் அறிந்தோம்.
கொமரலிங்கம் கிராமம் ஒரு அறிமுகம்
படுகொலை நடந்த உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் இருக்கிறது கொமரலிங்கம் கிராமம். தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரான பள்ளர்கள் எனும் தேவேந்திரகுல வேளாளர்கள் கணிசமாக வசிக்கும் கிராமம் இது. திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இருக்கிறது கொமரலிங்கம்.
பள்ளர் சாதி தவிர முஸ்லீம்கள், நாயக்கர்கள், கவுண்டர்கள், அருந்ததியர்கள் உள்ளிட்ட பல சாதியினர் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமையைப் பொறுத்தவரை கவுண்டர்கள் மற்றும் நாயக்கர்கள் நிலவுடைமையாளர்களாகவும், பள்ளர்கள் அவர்களின் நிலங்களில் வேலை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள்.
“நாங்க 1500 குடும்பம் இருந்தா மத்தவங்க ஒரு 50-60 குடும்பம் இருப்பாங்க; நாங்க தான் மெஜாரிட்டி. பெரும்பாலும் கரும்பு அறுக்குறது, நடவு வேலை, நெல் அறுக்கன்னு போவாங்க. 100-ல 5 பேரு தான் எங்காளுங்கல்ல வசதியானவங்க” என்றார் ஜான்பாண்டியன் கட்சியில் இருக்கும் தமிழ் மணி.
இளைஞர்களிடம் கூட விவசாய வேலைதான் முதன்மையானது. திருப்பூர் போன்ற நகரங்களுக்கும் மில் வேலைகளுக்கும் ஓரளவு இளைஞர்கள் செல்கிறார்கள். முன்பு அதிகம் சென்ற நிலைமை இப்போது இல்லை.
படிப்பை பொறுத்தவரை பெரும்பாலும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படிக்கிறார்கள். ஒரு சிலரே பொறியியல் படிக்கிறார்கள். சங்கரின் தந்தை சுமார் 4 லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் பெற்று மகனைப் படிக்க வைத்திருக்கிறார். இந்த தொகை என்பது அவரது முழு ஆயுள் உழைப்பையும் கோரக்கூடியது. அப்படித்தான் சங்கரும் படித்து தற்போது கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்திருந்த சமயத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஒரு ஏழை தலித் குடும்பத்தில் இது வெறும் மகனை மட்டும் பறிகொடுத்த இழப்பல்ல. அவனை வைத்து கனவுகளும், சமூகத்தில் பெறப்போகும் மதிப்புகளும் என்று ஒரு பெரும் வலி நிறைந்த நினைவுகள் இங்கே பின்னிப் பிணைந்திருக்கின்றன.
கொமரலிங்கம் கிராமத்தில் பள்ளர்களின் சமூக நிலைமை
தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களானாலும் பள்ளர்கள் அப்படி அழைக்கப்படுவதை விரும்புவதில்லை. ஆனால் ஆதிக்க சாதிகளின் தீண்டாமை இதர ஒடுக்குமுறைகளை குறிப்பாக கேட்டால் அவை இருப்பதையும் எதிர்ப்பதையும் கூறுவார்கள். சமூக ரீதியாக பறையர்கள் மற்றும் அருந்ததியினர் வாழும் நிலைமையில் பள்ளர்கள் இல்லை. இதற்கு காரணம் நிலமில்லாவிட்டாலும் நகரங்களுக்கும் வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் சென்று சுய பொருளாதாரத்தை அவர்கள் ஓரளவேனும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த பலத்திலிருந்தே அவர்கள் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்கள். 90-களில் நடந்த கொடியங்குளம் ‘கலவரம்’ அப்படித்தான் தேவர் சாதியினரின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்டது. வட தமிழகத்தில் பறையர் இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களிலும், கோவை பகுதியில் நகரங்களுக்கு வேலை செய்யும் அருந்ததி மக்களிடத்திலும் இந்த பொருளாதார முன்னேற்றம் தற்போது ஏற்பட்டு வருகிறது.
கோவை பகுதியைப் பொறுத்த வரை பள்ளர்கள் மீது சொல்லிக் கொள்ளப்படும் தீண்டாமைகளோ இதர ஒடுக்குமுறைகளோ பெருமளவு கிடையாது. கவுண்டர்கள் கூட பள்ளர்களின் கிராமங்களுக்கு அஞ்சும் நிலைமை இருக்கத்தான் செய்கிறது. சுற்றியுள்ள பிற கிராமங்களில் கொமரலிங்கம் கிராமம் என்றால் அவர்களிடம் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அஞ்சும் நிலைமையை பலரும் அங்கீகரித்தார்கள். “கொமர்லிங்கம் பள்ளன்னு சொன்னாலே வேற ஊருல பயப்படுவாங்க சார்” என்று ஊர் இளைஞர்கள் கூறியதை, வெளியூர் ஆட்கள் முதல் நமக்கு வழிகாட்ட அழைத்து சென்ற தோழர்கள் வரை அனைவரும் உறுதிப்படுத்தினார்கள்.
தென்மாவட்டங்களில் ஒரு பள்ளர் கிராமத்தில் இப்படி ஒரு ஆதிக்க சாதிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டு அங்கேயே வாழ்வது அரிதினும் அரிது. சங்கர் இங்கே அப்படி வாழ முடிந்ததற்கு இத்தகைய பின்னணியும் ஒரு காரணம்.
இக்கிராமத்தில் பள்ளர்களுக்கான பஞ்சாயத்து இருக்கிறது. சாவடி என்று அழைக்கப்படும் பஞ்சாயத்தில் தான் ஊர் முடிவு எடுக்கிறார்கள். சங்கரின் உடலை வாங்க கூடாது சாலை மறியல் செய்ய வேண்டும் என்ற முடிவும் அங்கே எடுக்கப்பட்டு ஊருக்கு தண்டோரா போட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவுகளுக்கு ஊரில் இருக்கும் பிற சாதியினரும் கட்டுப்படுகிறார்கள்.
கிராமத்தில் பள்ளர்கள் தெருக்களை ஒட்டி மதுரை வீரன் கோவிலும், அருந்ததியர் மக்களின் 20-30 வீடுகளும் இருக்கின்றன. புதிதாக வருபவர்கள் பிரித்தறிய முடியாதபடி இருபிரிவினரின் வீடுகளும் பொருளாதார நிலைமைகளும் சற்றேறக் குறைய ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆயினும் அருந்ததியர் மக்கள், பள்ளர்களால் சமூக ரீதியில் ஓரளவுக்கு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை. இந்த முரண்பாடு ஆதிக்கசாதி – தலித் போல கடும் முரண்பாடாக இல்லை என்றாலும் சில பிரச்சினைகளில் உக்கிரமாகவும் இருக்கின்றது. சாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஆதிக்க சாதியினர் வெட்டுகிறார்கள் என்றால் இங்கே அந்த அளவுக்கு போகாது என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம் இவர்களில் பெரும்பாலானோர் வர்க்கம் என்ற முறையில் ஏழைகளாகவும், நிலமற்றவர்களாகவுமே இருக்கிறார்கள்.
சாதி மறுப்புத் திருமணங்கள் சாத்தியமான மண்ணிது
தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகம் நடப்பதில்லை என்ற பொதுக்கருத்திற்கு மாறாக இப்பகுதியில் கணிசமான அளவு சாதி மறுப்பு திருமணங்கள் இங்கே நடந்துள்ளன. ஈஸ்வரன் என்பவரிடம் பேசினோம்.
“உங்க கிராமத்தில கலப்பு திருமணம் நடந்திருக்கா”?
“என்ன இப்படி கேட்டுட்டீங்க! நிறைய பேர் இருக்காங்க. எனக்கு தெரிஞ்சே 25-லிருந்து 30 குடும்பத்துல நடந்திருக்கும். என் அக்கா பையன் கூட வேற வூட்டு பொண்ண தான் கல்யாணம் பன்னிருக்க்கான்.”
அந்த வழியாக போய் கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை அழைத்து “இதோ இவங்க கூட கலப்புத் திருமணம் தான்.” என்றார்.
நாங்கள் வற்புறுத்தி கேட்ட பிறகு அப்பெண்மணி தன்னைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.
(வெட்கப்பட்டுக்கொண்டே) எம்பேரு மும்தாஜ். எங்கூட்டுக்காரர் பேரு சுப்பிரமணியன். ரெண்டு பசங்க இருக்காங்க. துரையம்மா 9-வது படிக்குது, இன்னொரு பொண்ணு 7-வது படிக்குது. எங்களுக்கு கலியாணம் முடிஞ்சு 17 வருசமாச்சி. எனக்கும் அவருக்கும் இதே ஊருதான். எனக்கு ரெண்டு தெரு தள்ளி. நாங்க இஷ்டப்பட்டு கலியாணம் பண்ணிக்கிட்டோம்.”
“உங்க வீட்டுக்காரர் கூட ஒரு போட்டோ எடுத்துக்கிறோம்” என்றோம்.
“அவரு வீரப்பூர் கோவில் திருவிழாவுக்கு போயிருக்கார். நான் போகலை.” என்றார் அந்த பெண்மணி.
ஊர் இளைஞர்களிடம் பேசியதிலிருந்து முஸ்லீம்-பள்ளர் காதல் திருமணங்களில் சிலர் முஸ்லீம்களாக மாறி திருமணம் செய்திருக்கிறார்கள் பலர் மும்தாஜை போன்று குழந்தைகளுக்கு இந்து பெயரிட்டு இரண்டு நம்பிக்கைகளையும் தாங்கி வாழ்கிறார்கள்.
“உங்க வீட்ல ஏத்துகிட்டாங்களா?”
“இப்போ கூட அக்கா வீட்டிலிருந்தான் வாரேன். நாங்க யாரு வந்தாலும் ஏத்துக்குற சாதி.”
“உங்களே மாதிரி இஷ்டப்பட்டு சாதி மாறி கலியாணம் பண்ணவங்க இந்தூர்ல இருக்காங்களா?”
“நெறய பேரு இருக்காங்க. எல்லாரும் வீராப்பூர் கோவிலுக்கு போயிருக்காங்க.”
இதே பகுதியின் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் ரவிச்சந்திரன் வன்னியர் சாதியை சேர்ந்தவர் – கவிதா பள்ளர் சாதியை சேர்ந்தவர். இவர்களது காதல் திருமணம் குறித்து கவிதா கூறுகிறார்.
“மில்லுல ஸ்கீம் வேலைக்கு வந்திருந்தேன். என் நம்பரை பிரெண்ட்ஸ்கிட்டருந்து இவரு வாங்கி மெசேஜ் அனுப்புனாரு. அப்புறம் பேச ஆரம்பிச்சோம். புடிச்சி போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டோம்.”
“உங்க வீட்ல ஏதும் சொல்லலியா”
“முதல்ல ஏத்துக்கல. அப்படியே போயிறுனு சொல்லிட்டாங்க. எங்க பெரியப்பா போலீஸ்ல எஸ்-ஐ யா இருககரு. அவரு ஆளுங்கள கூட்டிட்டு வந்து கொமரலிங்கம் ஸ்டேசன்ல வெச்சி இனி இந்த பொண்ணுக்கு எது நடந்தாலும் அதுக்கு என் புருசன் இவரு தான் காரணமும்னு எழுதிதர சொன்னாங்க. அப்படி பஞ்சாயத்து பேசி முடிச்சிட்டோம்.”
“ஆனா எங்கப்பாவுக்கு தெரியாம எங்கம்மா ஃபோனுல பேசுவாங்க. பழநி கோயிலுக்கு வரச் சொல்லி ரெண்டு பேரும் பாத்துப்போம். குழந்தை பெறந்த பிறகு அப்பாவும் சமாதானமாயிட்டாரு. இப்போ நாங்க எங்க வீட்டுக்கு போவோம். அவங்களும் வருவாங்க”
“சரி உங்க மாமியார் ஒத்துக்கிட்டாங்களா”
“அவங்களையே கேளுங்க” எனறு அருகில் சிரித்தபடியே இருந்த மாமியாரை கை காட்டினார். நீயே சொல்லு என்று அவர்களுக்குள் நடந்த சிறு உரையாடலுக்கு பிறகு மாமியார் சரங்கம்மாள் பேச ஆரம்பித்தார்.
“திடு திப்புனு கலியாணம் செஞ்சிகிட்டான். எனக்கு மொதல்ல பிடிக்கல. மொத ஆறு மாசம் எப்படியாவது பிரிச்சரனும்னு பாத்தேன். சொந்தக்காரரு போலீஸ்ல இருக்காரு, அவர வெச்சி முயற்சி செஞ்சேன். இருந்தா இந்த பொண்ணோட தான் இருப்பேன் இல்லைனா உன்ன விட்டு பிரிஞ்சி தனியா போயிருதேனு சொல்லிட்டான். அதனால ஏத்துக்கிட்டேன். அப்புறம் ஒரே வீட்டுல இருக்கோம். மூஞ்ச திருப்பிட்டா போக முடியும்.”
இப்போ உங்க மருமகளை பத்தி என்ன சொல்றீங்க
“இப்போ நான் அடிச்சு வெளிய அனுப்புனாகூட இந்த ரெண்டும் போகாதுங்க” சொல்லிவிட்டு மூவரும் சிரிக்கிறார்கள்.
ஏதோ புது ஆட்கள் வீட்டிற்கு வந்திருப்பதை பாத்து இவர்களது உறவினர் வந்து விசாரித்தார். “ தம்பி நான் சொல்றேனு எழுதிக்குங்க. எனக்கும் இந்த மாதிரி மருமக கெடச்ச நால்லா இருக்கும்னு நெனக்கேன்.”
“அப்போ உங்களுக்கும் பள்ளர் வீட்டு பொண்ணுதானா?”
“ஆமா. இதே மாதிரி பொண்ணு கெடச்சா சம்மதம்தான்.”
சங்கரின் கொலை குறித்த பேச ஆரம்பித்தபோது முன்னர் சாதி மறுப்பு திருமணத்தை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று முயற்சித்த அந்த மாமியார் கூறினார், “அந்த பொண்ணு அவங்க அப்பனை கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்கு போவோனும்; அப்ப தான் என் மனசுக்கு ஆறும். பாவிப்பய சின்ன பிள்ளைகளை இப்படி தவிக்கவெச்சுட்டானே.”
பேச்சுவாக்கில் சரங்கம்மாள் “பள்ளரா இருந்தால கொஞ்சம் பரவாயில்ல __(அருந்ததியராக) இருந்தால் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்.” – என்றார். கோவை மண்டலத்தை பொருத்தவரை அருந்ததியினர் தான் தாழ்த்தப்பட மக்களில் பெரும்பான்மையினர். சாதிய அடுக்கின் கீழ் நிலையில் கொடூரமான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவர்களும் இவர்களே.
அருந்ததியினர் – பிற சாதியினர் காதல் திருமணம் குறித்து பார்த்தால் அது மற்ற பிரிவினரின் காதலை விட குறைவாக இருக்கிறது. அடுத்ததாக அருந்ததியர் குடியிருப்புக்குள் நுழைந்தோம்.
அங்கிருந்த 20 குடும்பங்களில் 2 குடும்பங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அதில் ஒருவரான முத்துலெட்சுமி பள்ளர் சாதியைச் சார்ந்தவர். அருந்ததிய சாதியை சேர்ந்த சண்முகவேலை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
“நான் R.R மில்லில் வேலை செய்து வந்தேன். அங்க தான் இவரும் பழகுனோம். வீட்டுக்கு தெரியாம கலியாணம் செஞ்சிகிட்டோம். முதல்ல எங்க வீட்ல ஏத்துக்கல். அப்புறம் பஞ்சாயத்து பேசி அனுப்பிட்டாங்க. இப்போ அம்மா வந்து பாப்பாங்க. சொந்தக்காரங்க இன்னும் ஏத்துக்கல.” என்றார்.
ஆதிக்க சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் உள்ள முரண்பாடு போல தலித்துக்களிடையே இல்லை என்பதற்கு இது ஒரு சான்றி. எனினும் விதிவிலக்காக இங்கேயும் சாதி மறுப்பு திருமணங்களுக்கு வன்முறைகள் நடக்காது என்றில்லை. ஏனெனில் இக்குடியிருப்பு மக்கள் விவாதித்தினூடாக ஒரு பிரச்சினையே பேச வந்து பிறகு நிறுத்திவிட்டார்கள். அதை பேசினால் பிரச்சினையாகும் என்ற பயம் அவர்களிடையே இருந்தது.
அந்த கிராமத்தை அறிந்த தோழர் ஒருவரிடம் அது குறித்து கேட்டோம்.
அருந்ததிய இளைஞர் ஒருவர் பள்ளர் பெண்ணைக் காதலித்து மணம் செய்து ஊரை விட்டு சென்றுவிட்டார். அதை தொடர்ந்து அருந்ததியர் பகுதிக்கு வந்த பள்ளர்கள் நீங்கள் தான மறைத்துவைத்திருக்கிறீர்கள் என்று கூறி வீடுகளில் புகுந்து சராமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
பின்னர் வீட்டைவிட்டு வெளியே செல்லும் ஆண்ககளை பார்த்த இடத்தில் அடிப்பது என தொடர்ந்திருக்கிறார்கள். அது சிறுவர்களோ இல்லை முதியவர்களோ யாராக இருந்தாலும் அடிதான்.
இதை தாங்க முடியாமல் அருந்ததிய மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்திருக்கிறாரகள். பின்னர் திரும்ப வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும் பலனில்லை. ஒப்பீட்டளவில் பள்ளர்கள் இவர்களை விட சமூகரீதியாக கொஞ்சம் மேம்பட்டிருப்பதுதான்.
சில நாட்களுக்கு காவல்துறையே இப்பகுதிகளில் பாதுகாப்பு கொடுத்திருந்தது. பின்னர் பல மாதங்கள் கழித்து காதல் ஜோடி திரும்பியிருக்கிறது. காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து செய்து எழுது வாங்கி தற்போது பிரச்சனையின்றி வசித்துவருகிறார்கள். ஆம். தலித்துக்களிடையே ஏற்படும் முரண்பாடு ஆதிக்க சாதிகள் நடத்தும் ஒடுக்குமுறைபோல இருக்க வேண்டியதில்லை. இதுவே ஒரு தேவர் கிராமத்தில் நடக்கவே நடக்காது.
காதலையும் சாதி மறுப்பு திருமணத்தையும் சாத்தியமாக்கியது எது?
பொதுவில் சொல்லப்படுவதற்கு மாறாக இப்பகுதியில் சாதி மறுப்பு திருமணம் சகஜமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடத் தகுந்த அளவில் காதல் திருமணங்கள் நடக்கின்றன. மேலும் நமக்குத் தெரிய வந்த காதல் கதைகள் அனைத்தும் தொழிற்சாலைகளான மில்களில் தோன்றியது ஒரு தவிர்க்கவியலாத உண்மை.
திருப்பூர் உள்ளிட்ட அருகாமை நகரங்களுக்கும் இதர ஆலைகளுக்கும் கணிசமான அளவில் ஆண்களும் பெண்களும் வருகிறார்கள். இங்கே இருக்கும் தொழிற்துறை மற்றும் தொழிலாளர் சூழல் காதல்களின் எண்ணிக்கை அதிகமாவதவற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
ஆதிக்க சாதியினரின் தலையீடுகளிலிருந்து இந்த ஜோடிகளை பாதுகாப்பதில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கு (சி.பி.ஐ, சி.பி.எம்) முக்கியமானது. இது குறித்து உறுமிய கொங்கு சாதி சங்க பிரமுகரின் பேட்டியை கட்டுரையில் இறுதியில் பார்க்கலாம்.
தென்தமிழகத்தை போல காதலித்தால் கொலை செய்வது என்பது இப்பகுதியில் மிக மிக அரிது. இப்பகுதிகளில் நடக்கும் காதல் திருமணங்களின் ஒப்பிடும் போது ‘கௌரவக் கொலை’ எனப்படும் சாதிவெறிக் கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
கவுண்டர் உள்ளிட்ட எந்த சாதியாக இருந்தாலும் காதல் திருமணங்கள் நடந்தால் பெண்ணை தலைமுழுகுவதை தான் பிரதான எதிர்ப்பாக பதிவு செய்கிறார்கள். தந்தையின் விவசாய நிலத்தை சாராமல் நகரங்களில் தொழில்கள் வந்துவிட்ட பிறகு இந்த தலை முழுகுதல் என்பது பொருளாதார அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நல்லது கெட்டது போன்ற விசேசங்களுக்க்கு போகமுடிவதில்லை என்பதை தாண்டி வேறு பிரச்சினை இல்லை.
சாதிப் படிநிலையைப் பொறுத்து குழந்தை பிறந்த பிறகு சேர்த்துக் கொள்வதோ இல்லை கடைசிவரை சேர்த்துக் கொள்ள மறுப்பதோ நடக்கிறது. கொலை செய்வது என்பது இந்த பகுதிகளில் அனேகமாக இல்லை.
உடன் வந்த தோழர்களிடம் “ஏன் தோழர் கவுண்டர்கள் கொலை செய்வதில்லையா?” என்று கேட்டோம்.
“இவங்களுக்கு அது தேவையில்லை. எப்படியாவது பிரிச்சிருவாங்க. காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து நடக்கும். கவண்டர் சாதியினர் தான் காவல்துறையிலும் வழக்கறிஞர்களாகவும் உடன் இருப்பார்கள். ‘தம்பி உன் பாதுக்காப்புக்குதான் சொல்கிறேன். இவனுங்க மோசமாவனுங்க தட்டிருவானுங்க.’ என்று மென்மையாக மிரட்டுவார்கள்.”
“இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே கவுண்டர் சாதியினர் வெளியிலிருந்து வெட்டுவேன் குத்துவேன் என்று சவுண்டு விடுவார்கள். தேவைப்பட்டால் அப்பகுதி தலித் அமைப்பினரை அழைத்து ‘ஜோடிகளுக்கு’ அறிவுரை கூறுவார்கள். யாரும் துணைக்கு இல்லாத நிலையில் வேறு வழியில்லாமல் உயிருக்கு பயந்து அவர்களும் சம்மதிப்பாரகள். இப்படி சவுண்ட் விடுவதை கடந்து வெற்றி கண்டுவிட்டால் பெரும்பாலும் தலைமுழுகிவிட்டு நகைகள், சொத்துக்களில் பங்கில்லை போன்றவைகளை எழுதி வாங்கி பொருளாதார நலன்களை பாதுகாத்துக் கொள்ளும் வேலைகளில் ஈடுபடுவார்கள். ஒரு சில பகுதிகளில் தான் கொலை செய்வது நடக்கிறது.” என்றார் அந்த தோழர். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான அந்த ஆடியோவில் கூட அந்த கவுண்டர் சாதி வெறியர் அப்படித்தான் பாடியும் ஆடியும் பிறகு மிரட்டவும் செய்கிறார்.
சங்கரின் காதல் கொலையில் முடிந்தது எப்படி?
இப்பகுதிகளில் இதுவரை நடந்திருக்கும் காதலுக்கும் சங்கரின் காதலுக்கும் முதல் வேறுபாடு பெண்ணின் சாதி மற்றும் வர்க்கம். சங்கர் திருமணம் செய்து கொண்ட கவுசல்யா, பழநி பகுதியை சேர்ந்த தேவர் சாதியை சேர்ந்தவர். கவுசல்யாவின் தந்தை டிராவல்ஸ், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழில் செய்வது வருவதாக சங்கரின் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் தி.மு.க, மற்றும் அ.தி.மு.கவின் மாநில பிரமுகர்களின் உறவும், நட்பும் அவருக்கிருப்பதாக சங்கரின் கிராம மக்கள் கூறுகிறார்கள்.
டிப்ளமோ முடித்து பொள்ளாச்சி P.A இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு பிரிவில் படித்து வந்த சங்கருக்கும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்த கவுசல்யாவும் காதலிக்க ஆரம்பித்தனர்.
இச்செய்தி பெண்ணின் வீட்டிற்கு எட்டவே அவருக்கு சாதிக்குள்ளேயே திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். இதை அறிந்த சங்கர் – கவுசல்யா 11.07.15 அன்று பழநி பாத விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
“எனக்கு இவன் லவ் பண்றானு எதுவும் தெரியாது. தம்பிகிட்ட சொல்லிருக்கான். திடிர்னு ஒரு நாள் போலீஸ் ஸ்டடேசன்லிருந்து கூப்புடுறோம் இந்த மாறி உங்க பையன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான்னு சொல்லவும் நானும் ஊர்க்காரங்கள ஏழு எட்டுபேர கூட்டுட்டு போனேன். அங்க போனா பொண்ணோட அப்பா அம்மா சொந்தகாரங்கனு ரொம்ப பேரு காருல வந்திருந்தாங்க.
நான் சங்கரோடதான் போவேனு சொல்லி அது போட்டிருந்த தங்க கம்மல், கொலுசு, செருப்பு, செயின், டிரெஸ் முதற்கொண்டு எல்லாத்தையும் அவங்க அப்பாகிட்ட கொடுத்திருச்சி. போலீஸ்காரங்களும் இதயெல்லாம் எழுதி தரச்சொல்லி கையெழுத்து வாங்கிகிட்டாங்க”.உங்களை கொன்னுருவேன் வெட்டிருவேன் என்று அவங்க வீட்டுக்காரங்க மிரட்டவும் அப்படிலாம் செய்யக்கூடாதுனு லேடி இன்ஸ்பெக்டர் சத்தம் போட்டு இவங்க வாழ்க்கையில பிரச்சனை பண்ண மாட்டேனு எழுதி கொடுக்க வெச்சாங்க.” என்று காவல் நிலையத்தில் நடந்ததை விவரிக்கிறார் சங்கரின் தந்தை வேலுச்சாமி.
(காவல் நிலையத்தில் கவுசல்யா, அவரது தந்தை ஆகியோர் கையெழுத்திட்டு கொடுத்த கடிதங்கள் இணைக்கப்பட்டுள்ளது.) படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்.
இதன் பின்னர் பத்து நாட்கள் கழித்து கவுசல்யாவின் தாத்தா ஜெயராம்
மட்டும் சங்கரின் வீட்டிற்கு ஒரு சதித்திட்டத்தோடு வந்துள்ளார். தனது
பேத்தியை பார்க்க வந்ததாக தெரிவித்த அவர் சங்கர் வீட்டார் அனைவரிடமும்
சகஜமாக பழகியுள்ளார்.
கறி சமைத்து சங்கரின் தந்தை வேலுச்சாமி மது வாங்கி வர இருவரும் குடித்திருக்கிறார்கள். பின்னர் இரவில் சென்றுவிட்ட அவர் மறுநாள் காலை மீண்டும் வந்துள்ளார். காலை ஒரு 10 மணி அளவில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். தனக்கு வயல் வேலை இருப்பதால் கவுசல்யாவையும் சங்கரின் அக்கா முறையான மாரியம்மாளையும் ஜெயராமுடன் அனுப்பி வைத்துள்ளார் வேலுச்சாமி.
ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சென்றதும் தனக்கு ஒருவர் பணம் தரவேண்டும் என்றும் அதை வாங்கி வருவதாகவும் அது வரை மாரியம்மாள் அங்கு காத்திருக்க வேண்டும் என்று கூறி கவுசல்யாவை மட்டும் அழைத்து சென்றுள்ளார். மாலை 4 மணி வரை அவர்கள் திரும்பாததை கண்டு வீடு திரும்பி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர் சங்கர் குடும்பத்தின்ர்.
கவுசல்யாவை மட்டும் தனிமைபடுத்தி அழைத்து சென்ற ஜெயராம் மூலம் கவுசல்யாவை கடத்தி சென்று மிரட்டியிருக்கின்றனர். அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். பணிய வைக்க முடியாத நிலையில் காவல்துறையினரும் குடைச்சல் கொடுக்கவே சில நாட்கள் கழித்து பெண்ணை மீண்டும் காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர் பெண் வீட்டார்.
கவுசல்யாவின் தந்தை மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை இருவரையும் கொமரலிங்கத்தில் வைக்கவேண்டாம் எனவும் வேறு இடத்திற்கு மாற்றி தங்கவைக்கமாறும் வேலுச்சாமியிடம் கூறியிருக்கிறது.
“நீங்க அப்பவே வேறு எங்கேயாவது அனுப்பியிருக்கலாம்ல”
“அவன் காலேஜ் முடிக்கனும், அதுக்கு பணம் கட்டவே கடன் வாங்கியிருக்கேன். மத்த இரண்டு புள்ளைகளையும் படிக்க வைக்கனும். இதுல வெளியூர்ல வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைக்க என்னால முடியல. எனக்கு சப்போர்ட் இல்லை. இருந்தா என பையன காப்பாத்தியிருப்பேனே” என்று அழுகிறார்.
அவரால் இருவரையும் இன்ஜினியரிங் படிக்க வைக்க முடியாத நிலையில் சங்கர் மட்டும் படிப்பை தொடர்ந்திருக்கிறார். கவுசல்யா அப்பகுதியிலிருந்த டைல்ஸ் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அக்கடையில் சென்று நாங்கள் விசாரித்த போது அன்று காலை டி.எஸ்.பி கடைக்கு வந்து விசாரித்து சென்றதையும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பேச மறுத்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போன்று உடுமலைக்கு சங்கரோடு சென்ற கவுசல்யா ஒரு காரில் தங்கள் குடும்பத்தினர் காத்திருப்பதை பார்த்துவிடுகிறார். அவர்கள் ஏதோ திட்டத்தோடுதான் வந்திருக்க கூடும் என யூகித்து சங்கரிடம் ஓடு என்று கூறி ஓடத் துவங்குகிறார். அவர் வீட்டார் துரத்தவும் அக்கம் பக்கத்தினர் மூலம் போலீஸ் வரவே மூன்றாம் முறையாக காவல் நிலையத்திற்கு பஞ்சாயத்து வந்திருக்கிறது.
“எனக்கு மாலை 5 மணிக்கு தகவல் வந்தது. உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து தகவல் வந்தது. என் பையனும் பொண்ணும் அங்க இருக்கங்கனு. நான் போயி கூட்டி வந்தேன்.”
“போன மாசம் அவங்க அப்பா அம்மா பாட்டி எல்லோரும் வந்தாங்க. புள்ளைய மட்டும் கூப்பிட்டாங்க. சங்கரை பிரிந்து வர சொன்னாங்க. அது முடியாதுனுருச்சி.”
இந்நிலையில் தான் சங்கருக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்த்ருக்கிறது. அவர் சென்னைக்கு சென்று வேலையில் சேர வேண்டியது தான் பாக்கி.
இனி தங்கள் குடும்பம் கஷ்டத்திலிருந்து மீளும் என்று சங்கரின் தந்தையும், தன் குடும்பத்தார் முன்பு தானும் ஒரு ஆளாய் வாழ்ந்து காட்ட முடியும் என்று கவுசல்யாவும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தான் சங்கர் தேவர சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சி வாட்ஸ் ஆப் மூலமாக பரவி பரபரப்பு உண்டாகவே அது செய்தி சானல்களிலும் ஒளிபரப்பாகி தேசிய செய்தியானது.
இப்பிரச்சனையை பெரிதாக்கவிடாமல் அமுக்க நினைத்த ஜெயா அரசு அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் பஞ்சாயத்து தலைவரை களமிறக்கியது.
“ஜி.எச்ல என்னையும் அப்பாவையும் மட்டும் தனியா கூட்டிட்டு போனாங்க. எங்க கூட யாரையும் விடலை. அங்க ரூம்ல எஸ்.பி, டி.எஸ்.பி, எம்.எல்.ஏ, பிரெசிடென்ட் எல்லாரும் இருந்தாங்க. அவங்க மிரட்டின மாதிரியும் பேசல, ஆனா சாதாரணமாவும் பேசல, இரண்டும் கலந்து பேசினாங்க. அப்பாவுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. பாடி வாங்குறேனு ஒத்துக்கிட்டாரு. கையெழுத்து போட்டாரு. ஆனா வெளிய வந்தா ஏன் வாங்குறேனு சொன்னீங்க? கொலையாளிகளை கைது பண்ண பிறகு வாங்காணும்-னு பல அமைப்புகளிலிருந்து வந்தவங்க சொன்னாங்க.
எங்களுக்கு ஒன்னும் புரியல. இவங்க சொல்றதுதான் சரியா இருந்தது. திருப்பியும் போராட்டத்துல ஈடுபட்டோம். ஆனா அண்ணன் பாடிய எங்களுக்கு தெரியாமலேயே பொள்ளாச்சி வரை கொண்டு வந்து நிறுத்திட்டாங்க. அப்புறம் என்னையும் அப்பாவையும் போலிஸ் வண்டியில கூட்டிட்டு வந்து காத்துட்டு இருந்த அம்புலன்ஸ்ல ஏத்துனாங்க.
ஊர்லயும் போராட்டம் பண்ணிட்டிருந்தாங்க. அதனால வீட்டுக்கு வராம நேரா பின்புறம் வழியா சுடுகாட்டுக்கு கொண்டு போயிட்டாங்க. இத தெரிஞ்சு ஊர்காரங்க வந்து பிரச்சனை செய்து சடங்கு செய்யாம புதைக்க கூடாதுனு சொல்லி வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டோம்.
பின்னர் ஊர்காரங்க குற்றவாளிகளை கைது செய்யாம புதைக்கவிட மாட்டோம்னு போராட்டம் செய்யயும் போலீஸ் சுத்தி வளைச்சு அடிச்சாங்க. ஆம்பிளைங்க சிதறி ஓடுனாங்க பொம்பளைங்களால ஒட முடியல். அவங்களே பாடிய எடுத்துட்டு சுடுகாட்டுக்கு போயி எங்களையும் கூட்டிட்டு போயி பொதச்சிட்டாங்க” என்று நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறார் சங்கரின் தம்பி விக்னேஷ்.
தற்போது ஊரில் பெரும்பாலானவர்கள் வீராப்பூர் கோவில் திருவிழாவிற்கு (கரூர் அருகே பொன்னர் சங்கர் கோவிலில் நடக்கும் விழா) சென்றிருப்பதாகவும் அவர்கள் வந்தவுடன் பஞ்சாயத்து கூடி முடிவு செய்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.
சங்கர் கொலை குறித்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் என்ன கருதுகிறார்கள்?
இந்த ஆதிக்கசாதி வெறிக்கொலை குறித்து ஏரியா நாட்டாமைகளான கொங்கு வேளாள கவுண்டர்கள் என்ன நினைக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள உடுமலைப்பேட்டையில் உள்ள ஏதோ ஒரு கொங்கு அறக்கட்டளை தலைவரை அணுகினோம்.
“நடந்ததுக்கும் கொங்கு வேளாள சமூகத்துக்கும் சம்பந்தமில்லை. எங்களை மாதிரி பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவங்க தாக்குதல் நடத்தியிருக்காங்க.
யுவாராஜில ஆரம்பிச்சி, இப்போ தேவர் பண்ண மாதிரி செட்டியார் நாடார்னு பண்ண ஆரம்பிச்சாதான் இந்த மாதிரி காதல் முடிவுக்கு வரும். வீச்சரிவாள் பயம் வந்தால் தான் செய்ய மாட்டான். அதுக்காக இந்த கொலைய ஆதரிக்கிறேன்னு அர்த்தமில்ல. ஆனா இப்படி நடந்தாதான் புத்திவரும்.
எல்லாரும் சமம்னு சொல்லி வீட்டு விசேசத்துக்கு கூப்பிடலாம்; பக்கத்துல உக்காரவெச்ச சாப்பாடு போடலாம். ஆனா சொந்தம் கொண்டாட முடியாது.
பி.ஜே.பி, பா.ம.க போன்ற கட்சிகள் கூட இந்த கொலையை தேர்தலுக்காக கண்டிக்கிறாங்க. டிவி-ல பொன்.ராதாகிருஷ்ணன் ……என்ன சொன்னரும்மா? என்று தன் மனைவியை பார்த்து கேட்க மனைவி தொடர்ந்தார். அதாங்க குடும்பத்துக்கு மானமரியாதை இருக்கு; இப்படி லவ் பண்ணி கல்யாணம் செய்றதால பெத்தவங்க எவ்ளோ பாதிக்கப்படுறாங்க. அத மனசில வெச்சி பிள்ளைங்க…. அதான் நமக்கு ஆதரவா தான் சொல்றாரு. அதே மாதிரிதான் ராமதாஸ். அவரு சொல்றதுல தப்பில்லை. நாடக காதல்னு எல்லா ஜாதிகாரங்களையும் வெச்சி ஒரு அமைப்பு உருவாக்குனாங்க.
இல்லையே பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்-லாம் ஜாதி கூடாது-னு தான சொல்றாங்க.- என்று நாம் சும்மா தூண்டி விட்டோம்.
அது சும்மா. . இத்துனை ஓட்டுக்காக சொல்றது. மோடி ஆட்சிய தக்கவெச்சுக்கனும்னு சொல்றது.
இப்போ கூட சாதி மறுப்பு திருமணத்தை ஆதரிப்பதாதான ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் போட்டுருக்காங்களாமே?
ஆர்.எஸ்.எஸ் ஓட அடிப்படை நிலப்பாட்டுல இது இருக்கா. ஆரம்பிச்சி இத்தனை வருசம் சொல்லாம இப்போ ஏன் சொல்லுறான். ஏன்னா மோடி ஆட்சிய தக்க வெச்சிக்க.
இல்லைங்க அவங்க காலை வணக்கத்துல கூட அம்பேத்கர் பத்தி பாடுறாங்க.
சிரிக்கிறார். தம்பி..நாங்க கூட கொங்கு வேளாளர் திருமண தகவல் மையம்னு வெச்சா அடுத்தவன் ஏதாவது நினைப்பானு கொங்கு அனைத்து சமுதாய திருமண தகவல் மையம்னு வைப்போம். அது கண்துடைப்புக்கு. வெற சாதிகாரங்க வந்த இல்லைங்க உங்க இதுல போய் பாத்துக்கோங்கனு சொல்லுவோம். நம்ம கட்சிகளில்கூட எல்லா படமும் போடுவோம். அம்பேத்கர், காமராஜர் எல்லா போடுவோம். அது எல்லாம் வெளி – ஒரு இதுக்காக.
நான் இது வரைக்கும் 10 காதல் பஞ்சாயத்துகளுக்கு போயிருக்கேன்.கொங்கு பிள்ளைங்க ஓடிபோயிரும். அந்த பையன் கம்யூனிஸ்ட் கட்சி ஆபீசுக்கு கூட்டிட்டு போயிருவான். இது வரை ஒரு கேசில கூட நாம் ஜெயிச்சதில்லை தம்பி.
எவ்ளோ கொடூரமானவங்களா இருந்தாகூட அப்பா அம்மாவ அழுறத பாத்தா மனசு மாறும். அனா இந்த பொண்ணுங்க மாற மாட்டாங்க. ஏன் தெரியுமா? மனசு இல்லைனு இல்ல. அதுக்கு முன்னாடியே கம்யூனிஸ்ட் கட்சிகாரன் கிளாஸ் எடுத்து வெச்சிருப்பான். இப்படி இப்படி நடக்கும் அழுவாங்க காலுல விழுவாங்க அதில நீ ஒத்துக்கிட்டனா இப்படி நடக்கும்னு எல்லாத்தையும் கிளாஸ் எடுத்து வெச்சிருப்பான்.
நம்ம கிட்ட பொண்ணு விரும்புனா கூட்டிட்டு போனு சொல்லிருவான். பொண்ணு வராது. இது மாதிரி ஒன்னுல்ல 10 பஞ்சாயத்து நானே பண்ணிருக்கேன். நம்ம புள்ளைங்கதான் காரணம். இப்படி பண்ணுனா தான் எல்லாம் மாறும்.
என்று கூறி முடித்தார்.
______________________________________________
நண்பர்களே இந்தக் கள ஆய்வின் செய்திகள், கதைகள், உண்மைகள் அனைத்தையும் ஒரு சேர நினைவில் நிறுத்திப் பாருங்கள். சங்கரின் கொமரமங்கலம் பொதுவில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு பெயர் பெற்றது. அந்த கிராமம் மட்டுமல்ல அந்த வட்டாரத்தில் பல இடங்களில் அதை பார்க்க முடியும். இந்த கிராமத்திற்குள் பா.ம.க ராமதாஸ், டி.என்.டி.ஜே ஜெய்னுலாபிதீன், கொங்கு வேளாளக் கட்சி ஈஸ்வரன், தனியரசு, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பள்ளர் பிரிவு மா.தங்கராஜு, மா.வெங்கடேசன் அனைவரும் நுழைந்தால் அதிர்ச்சியடைவார்கள். அவர்களின் சாதி வெறி, மதப்புனிதம் அனைத்தும் இங்கே நடைமுறையில் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. சாதிப் படிநிலையின் கீழேயும், வர்க்க பிரிவில் ஏழைத் தொழிலாளிகளாகவும் இருக்கும் இம்மக்களிடையே எந்த சாதிப் பற்றும் இல்லை. குறைந்த பட்சம் சாதி மறுப்புத் திருமணங்களை மறுப்பதில் இல்லை. ஒரு அருந்ததி ஆண் ஒரு பள்ளர் பெண்ணையும், ஒரு பள்ளர் ஆண் வன்னியப் பெண்ணையும், ஒரு கவுண்டர் பெண் ஒரு பள்ளர் ஆணையும் மணம் செய்து வாழும் பூமியிது.
இந்தப் பின்னணியில்தான் சங்கர் – கவுசல்யாவின் மணத்தை பார்க்க வேண்டும். கோவைப் பகுதியில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த செங்கொடி இயக்கத்தின் செல்வாக்கு சாதி மறுப்பு எனும் சாதிக்க முடியாத ஒன்றை இன்றும் சாதிக்க முடியும் என்று காட்டி வருகிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் திட்டமிட்டு நுழைவதற்கு நம்பியிருக்கும் இறுதி அஸ்திரம் சாதிவெறிதான். பல்வேறு சாதி வெறியர்களும், மதவெறியர்களும் இயல்பான கூட்டணியில் தமது நோக்கத்தை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள். அவர்களை கண்டிக்க வக்கற்ற ஊடகங்களும், ஏனைய ஒட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் இருக்கும் வரை இவர்கள்தான் தனிக்காட்டு ராஜாக்கள்.
பெருமாள் முருகன் நாவல் தடை செய்யப்பட்டது, இளவரசன் தற்கொலை, கோகுல்ராஜ் கொலை என்று ஒவ்வொன்றிலும் பார்ப்பன இந்துமதவெறியர்களும், அவர்களின் பங்காளிகளான ஆதிக்க சாதிவெறியர்களும்தான் காரணமாக இருக்கிறார்கள்.
இவர்களை தமிழ் மண்ணிலிருந்து விரட்டும் வரை சங்கரைக் கொல்வதற்கு எப்போதும் சிலர் பின் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். தமிழகம் பெருமைப்படும் கொமரமங்கலத்தை காப்பாற்றப் போகிறோமா, பலி கொடுக்கப் போகிறோமா?
– வினவு செய்தியாளர்கள்

நாம் அனைவரும் சாதி மறுப்பு திருமணத்தை ஆதரிக்க வேண்டும். இனி இது மாதிரி கொலைகள் நடக்காமல் தடுக்க வேண்டும். இப்போ து கெளசல்யாவுக்கு அனைவரும் உதவ வேண்டும். அவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு