திங்கள், 14 மார்ச், 2016

டி.எம்.கிருஷ்ணா: நான் ஒரு தேசியவாதி அல்ல ! மண்ணை நேசிப்போம், தேசிய அரசு பித்தை விட்டொழிப்போம்

ஒரு பிரகடனத்தோடு இந்தக் கட்டுரையைத் தொடங்க விரும்புகிறேன்.
நான் ஒரு தேசியவாதி அல்ல. குறிப்பாக, இந்த அரசு உருவாக்கியுள்ள தேச அடையாளத்தை பொறுத்தவரை நான் தேசப்பற்றாளன் கூட அல்ல! இந்த அரசியல் அமைப்பைக் கேள்விக்குள்ளாக்காத அதன் விசுவாசமான சேவகனாக என்னால் இருக்க இயலாது! 
டி.எம்.கிருஷ்ணா; இந்த அரசு தன் அடையாளங்களாக காட்டிக்கொள்ளும் எவற்றின் மீதும் அளப்பரிய வியப்பேதும் எனக்கில்லை. அனைத்து வகையான கொலைக் கருவிகளும் பகட்டாக ஊர்வலம் விடப்படும் குடியரசு தின விழா நேரடி ஒளிபரப்பைக் காண்பதில் துளியும் மகிழ்ச்சியோ, விருப்பமோ எனக்கு என்றுமே இருந்ததில்லை. பயங்கரவாதிகளாக இருப்பினும் மரண தண்டனை விதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும், நான் இந்த மண்ணுக்குரியவனே! இந்த மண்ணிண் மைந்தனே!
இந்த மண்ணின் தழுவுதலுக்கு பாத்தியப்பட்டவனே! நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் உட்பட யாராயிருந்தாலும் இந்த உரிமையை என்னிடமிருந்து பறித்துவிட முடியாது என்று உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.
இந்த மண்ணுக்குச் சொந்தமானவன் என்ற உணர்வு என்னுள் இயங்குகிறது, நான் இந்த மண்ணை விட்டுப் போகும் நாள் வரையில் அது என்னுள் உயிர்த்திருக்கும். “இந்தியா” வைப் பற்றிய தன்னுடைய கருத்தியலுக்கு எனது நேசத்தையும், வணக்கத்தையும், பணிவையும் யாரும் கட்டாயப்படுத்திக் கோருவதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
அப்படியானால், நான் யார்? நான் எதற்கு சொந்தமானவன்?
கேள்வி கேட்கும் உரிமை
கடந்த சில வாரங்களாக அவர்களது நாட்டைப் பற்றியும் அதன் நோக்கத்தைப் பற்றியும் மாற்று சிந்தனை கொண்டிருந்த காரணத்திற்காக மாணவர்கள் மீது கொலைகார நஞ்சு உமிழப்படுவதை பார்த்தோம். சட்டரீதியான தாக்குதல்களைத் தாண்டி கலப்படமில்லாத வெறுப்பு வீசப்படுவதை கண்ணுற்றோம், அது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.
வெள்ளை வாக்காளர் அடையாள அட்டையும், பச்சை பாஸ்போர்ட்டும் வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் எந்த விதமான நேசம் எதிர்பார்க்கப்படுகிறது என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். எதிர்பார்க்கப்படுவது உண்மையிலேயே நேசம்தானா அல்லது நமது அரசியல் அமைப்பின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கு எதிரான வெறும் சுயநலம் நிரம்பிய பாதுகாப்பு வாதமும், வன்முறையான வலியுறுத்தலும், கண்மூடித்தனமான பதில் மறுப்பும்தானா?
ஆனால், அப்படிப்பட்ட விவாதங்கள்தானே, “இப்போது உள்ளதை” மறுபரிசீலனை செய்யவும், நிராகரிக்கவும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன! இவ்வாறு கேள்வி எழுப்புவோரும், அரசின் கொள்கைகளை விமர்சிப்போரும் எதிர்மறையாக பேசுவதாகவும், நாட்டுக்கு அவமானத்தை கொண்டு வருவதாகவும், தேசக் கட்டுமானத்துக்கு எந்த பங்களிப்பும் செய்யாதவர்களாகவும் சிறுமைப் படுத்தப்படுகின்றனர்.
patriotismதேசக் கட்டுமானத்திற்கான இந்தத் திட்டவரைவு வேறு எங்கிருந்து வர முடியும்? பல்வேறு பதத்திலான, ஒலியிலான குரல்கள் எழுப்பும் கடினமான, சங்கடமான, தொந்தரவு செய்யும் கேள்விகளிலிருந்துதான் அது பரிணமித்து வர முடியும். என்னைப் பொறுத்தவரை, நாம் பேசும் வாக்கியங்களை உருவாக்கும் சொற்களின் பொருளை அத்தகைய குரல்கள் கேள்விக்குள்ளாக்குவது நடக்காமல் நாம் முன்னேறிச் செல்வது சாத்தியமில்லாத ஒன்று. அதாவது கோபம், மனத்தடை அல்லது பகைமை இல்லாமல் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதைக் குறிக்கிறது இது.
நடப்பவை அனைத்தையும் வால்டேரின் “பேச்சுரிமை” குறித்த பிரச்சினையாகவும் சுருக்கி விட வேண்டாம். இது ஒரு குடிமகன் தேசத்தோடு எந்த வகையில் பிணைக்கப்பட்டிருக்கிறான் என்பது பற்றிய ஆழமான, மென்மையான விசாரணை. பேச்சுரிமை என்பதைத் தாண்டிச் சென்று கருத்தின் பின் இருக்கும் சிந்தனையை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சியிலிருந்து நாம் புனிதமாகவும் அவசியமானதாகவும் கருதும் ஒவ்வொன்றைப் பற்றியுமான அடக்க உணர்வும், பணிவும் தோன்ற வேண்டும். பல்வேறு புரிதல்களை வழங்கும் பல்வேறு வகையான குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். ஒவ்வொருவரையும் நமக்குள் வரவேற்கத் தயாராக இல்லாத வரை, நாம் உயிரற்றுதான் இருப்போம்.
“பிறரை” உருவாக்குதல்
carnatic-musician-tm-krishn
பெசன்ட் நகர் கடற்கரையில் பாடும் டி.எம். கிருஷ்ணா (படம் : kafila.org)
பல்வேறு தரப்பிலிருந்தும் எழும் குரல்களை பிற்போக்குவாதியாக மாறாமல் நம்மால் ஏன் எதிர்கொள்ள முடியவில்லை? எதைப் பார்த்து நமக்கு அச்சம் பிறக்கிறது? நான் குழம்பித்தான் போயிருக்கிறேன் : ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் மாணவர்கள் எவரும் எந்தக் கட்டத்திலும் ஆயுதத்தைத் தூக்கவில்லை, யாரையும் தாக்கவில்லை. அவர்கள் எந்த மனிதப் பிறவியையும் கொல்லும் படியோ அல்லது இயற்கை வளங்களை அழிக்கும்படியோ கேட்கவில்லை. இருப்பினும் அவர்களை நாம் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம். அதே வேளையில், உலகெங்கிலுமான பன்னாட்டு நிறுவனங்களும், தொழில் குழுமங்களும் அரசின் ஆசீர்வாதத்தோடு நமது நாட்டை மொட்டையடித்து மக்களை அவர்களது மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்து அகதிகளாக்கி அலைய விடுகின்றன; இன்னொரு பக்கம், மதவாத ரவுடிகள் மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேசிய பெருமித வெறி எங்கிருந்து தோன்றியது? நம்மைச் சுற்றி புள்ளியிட்ட கோடு கிழித்து, நம்மை பிறரிடமிருந்து பிரித்துக் கொள்வதன் மூலம் நாம் அனைவரும் நமக்கே நமக்கான பெருமித அடையாளம் ஒன்றை தூக்கிப் பிடிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். உண்மையில் பெருமிதம் என்பதே சமநிலை தவறிய ஒரு உணர்ச்சிதான்.
ஹைதராபாத், ஜே.என்.யு மாணவர்கள் யாரும் எந்தப் பொருளிலும் தேச-விரோதிகள் அல்ல, இருந்தாலும் ஒரு பேச்சுக்காக அவர்கள் தேசவிரோதிகள் என்றே வைத்துக் கொள்வோம், எனக்கு அது ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. அவர்கள் மக்கள் விரோதிகள், வாழ்வு விரோதிகள், இயற்கை விரோதிகள், காதல் விரோதிகள், கருணை விரோதிகள், நலவாழ்வு விரோதிகள் இல்லையே! நம்முடன் வசிப்பவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோம் என்று நம்மை நாமே தீவிரமாக கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னைப் போல் பிறரையும் பாவிக்கும் தேசவிரோதியைக் காட்டிலும் மனிதத் தன்மையற்ற தேசியவாதி மோசமானவன் இல்லையா?
இன்று இந்திய தேசத்துக்கு தமது விசுவாசத்தை பறை சாற்றுபவர்களில் பலரை கவனமாக பாருங்கள், அவர்கள் மதரீதியாக பிளவுபடுத்துபவர்களாகவும், சாதிவெறியர்களாகவும், ஆணாதிக்கவாதிகளாகவும், ஏழை மக்கள் குறித்தோ ஒடுக்கப்பட்ட மக்களைக் குறித்த துளியும் அக்கறை இல்லாதவர்களாகவும் இருப்பதைப் பார்க்கலாம். சமூக முன்னேற்றத்தில் அத்தகையோரது பங்களிப்பு தான/தர்மம் செய்வதிலிருந்தோ அல்லது அவற்றை தவறாகப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆதாயம் தரும் பிளவுகளை முற்றச் செய்வதிலிருந்துதான் வருகின்றன.
நம்மை பாதுகாப்பாக வைத்திருப்பது எது?
நாம் இந்த மண்ணை நேசிப்போம், தேசிய அரசின் மீதான பித்தை விட்டொழிப்போம். ஏனெனில், தேசிய அரசு என்பதின் மரபணுவிலேயே நம்ம ஆள் – வேற்றாள் என்ற இருமை உள்ளது. இந்தப் பிளவு நாட்டின் எல்லைகளுக்கு வெளியே இயங்கும் அதே அளவுக்கு எல்லைகளுக்கு உள்ளும் செயல்படுகிறது. நமது தேசத்தை உருவாக்கியவர்கள் இந்தப் பிரச்சனையை அங்கீகரித்து அதன் கட்டமைப்பு சிக்கலை தீர்ப்பதற்கு முயற்சி செய்தது அவர்களது சிறப்பைக் காட்டுகிறது. ஆனால், விவாதம் தொடர்கிறது, தொடர வேண்டும். நமது அரசியல் சட்டம் மகத்தான பல விஷயங்களை நமக்கு அளித்துள்ளது. அதே நேரம் கால மாற்றத்திற்கும், மனித வாழ்வுக்கும் ஏற்ப மாற்றங்களை அனுமதிக்கும் ஒரு ஆவணம் முழு முற்றானதோ, இறுதியானதோ அல்ல !
அரசியல் கட்சிகள் மக்களின் கருத்துக்களை கட்சி நிலைப்பாடுகளுக்கு ஏற்ப திரித்து நிலைமையை மோசமாக்கியிருக்கின்றன. பா.ஜ.க, காங்கிரஸ் முதலான கட்சிகள் தமது சொந்த மூக்குக்கு அப்பால் எதையும் பார்க்க முடியாதவர்கள், ஆனால், குழப்பத்தை விதைக்கவும், மனங்களை திரிக்கவும், சாதாரண மக்கள் கோரும் விவாதத்தை திசை திருப்பவும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். கட்சி அமைப்புகளுக்கு அப்பால் எழுப்பப்படும் அரசியல் கேள்விகளை காது கொடுக்கக் கூட யாரும் தயாராக இல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதும் உண்மைதான்.
அடுத்ததாக, இந்தக் கூச்சலுக்கும், எதிர் கத்தலுக்கும் சேர்க்கப்பட்ட இன்னொரு பரிமாணம், நமது இராணுவ வீரர்களின் தியாகத்தை மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எதிராக நிறுத்துவது. துரதிருஷ்டவசமாக மகேந்திர சிங் தோனி, மோகன்லால் போன்றவர்கள் எதிர்ப்புக் குரலை சிறுமைப்படுத்துவதற்கு படைவீரர்களின் மரணத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இராணுவ வீரர்களது தியாகங்கள் ஒருபோதும் மறக்க முடியாதவை, குறைத்து மதிப்பிட முடியாதவை. ஆனால் நமது எல்லைகளை சிலர் பாதுகாப்பதால்தான் நாம் இரவில் நிம்மதியாக தூங்க முடிகிறது என்ற வாதம் எனக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. அது உண்மையாக இருந்தாலும், அது முழுமையான உண்மை அல்ல. இந்திய விவசாயி என்பவர் நமக்கான உணவு உணவு தானியங்களை விளைவித்துக் கொண்டிருப்பதாலும், லைன் பொறியாளர் என்பவரும், துப்புரவுப் பணியாளர்களும் நமது தண்ணீர் குழாய்களையும், கழிவுநீர் குழாய்களையும் அடைப்பின்றி பராமரித்துக் கொண்டிருப்பதாலும், நமது சாயங்களை பாதுகாப்பானதாக செய்யும் அபாயகரமான இரசாயனங்களை ஒருவர் தொடர்ந்து கையாண்டு கொண்டிருப்பதாலும், தேச பக்தர்களான நாம் தொடர்ந்து கொட்டும் குப்பைகளை அனைத்தையும் அள்ளி ஒருவர் தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருப்பதாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஒருவர் போராடிக் கொண்டிருப்பதாலும் நமது ஆசிரியர்கள் அறிவை தாராளமாக பகிர்ந்து கொள்வதாலும், நமது காவல்துறையின் ஆண் பெண் காவலர்கள் தன்னலமின்றி சாலைகளை பாதுகாப்பதாலும்தான் இரவில் நம் மீது தூக்கம் படர முடிகிறது. மேலும், காலையில் உற்சாகமும், இரவில் அமைதியான ஓய்வும் நமக்குக் கிடைப்பதற்கு கலைஞர் என்று அழைக்கப்படும் ஒருவர் நமக்காக பாடுவது அல்லது ஆடுவது காரணமாக இருக்கிறது என்பதையும் மறந்து விட வேண்டாம். சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நாம் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தூங்குவதற்கு உதவி செய்கின்றனர், யாரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ வைக்க முடியாது.
மேலும், நமது நாட்டின் போர் எந்திரத்துக்கு போற்ற முடியாத இன்னொரு பக்கம் உள்ளது. நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்த எந்திரம் பிறரை அச்சுறுத்துகிறது, இல்லையா? குண்டு போடும் விமானத்தையும், நெருப்பைக் கக்கும் பீரங்கி வண்டியையும் நான் அங்கீகரிக்க மறுக்கிறேன்.
அனைத்துக்கும் மேலாக மனிதத்தன்மை
இந்த மண்ணின் காற்று, மணம், மண் வாசனை, சப்தங்கள், மொழிகள், இசை, நடனம், நாடகம், சடங்குகள், உணவு, சொல்லப்படாத வார்த்தைகள், சிரிப்பு, விசித்திரங்கள், பழக்க வழக்கங்கள், போராட்டங்கள், சமத்துவமின்மைகள், பகிர்தல் என பலதும் சேர்ந்துதான் நான் யார் என்பதையும் என்னவாக இருக்கிறேன் என்பதையும் தீர்மானிக்கின்றன. இவை அனைத்தும் அரசுக்கு அப்பாற்பட்டு உயிர்த்திருக்கின்றன.
இது என் மண், என் மக்கள், என் வாழ்க்கை. “இங்கே” என்ற எனது அடையாளம் ஒருபடித்தானதாக்கும் இந்திய குடிமகனுக்கான எந்த ஒரு அடையாளத்திலும், அது சாதாரண குடிமகனாகவோ, வெளிநாட்டு வாழ் இந்தியன் என்ற வகையினதாகவோ அல்லது கடல் கடந்த இந்தியக் குடிமகன் என்ற வகையிலோ அடங்கி விடுவதில்லை.
என்னுடைய மண் இயங்கிக் கொண்டிருப்பது இருப்பது, தேங்கியிருப்பது அல்ல, தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்துக் கொண்டு, தன்னை வரையறுத்துக் கொண்டு, எந்த ஒரு பாடலையும் பாட எனக்கு சுதந்திரமளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த அரசு எனது வாழ்க்கைக்கு வசதி செய்து தந்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அரசே நான் மேலே விவரித்திருக்கும் அனுபவங்களிலிருந்துதான் தோன்றுகிறது தவிர, நான் யார் என்பதை என்னிடமிருந்து அது பறிக்க முடியாது. அரசு நமக்கு தரப்பட்டுள்ள தனிச்சிறப்பான ஒரு பரிசு அல்ல. ஏற்கனவே இருப்பதை புரிந்து கொள்வதன் மீதும், கேள்வி கேட்பதன் மீதும், உருக்கொடுப்பதன் மீதும்தான் அது கட்டப்பட்டுள்ளது. அரசு தான் இருப்பதற்கான நோக்கத்தை மறந்து விட்டால் அது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும், கேள்விக்குள்ளாக்கப்படும்.
நமக்கு தேசியகீதத்தை அளித்த தாகூர், “வைரத்தை விலையாகக் கொடுத்து கண்ணாடிக் கல்லை நான் வாங்க மாட்டேன். மனிதத்தன்மையை தேசப்பற்று வெற்றி கொள்வதை நான் உயிரோடு இருக்கும் வரை ஒரு போதும் அனுமதியேன்” என்றும் கூறியிருக்கிறார்.
அரசுக்கு அடிபணிவதன் மூலம் மனித வாழ்வை அழித்து விடாமல் இருப்போம்.
– டி.எம். கிருஷ்ணா
தமிழாக்கம்: மேகலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக