செவ்வாய், 15 மார்ச், 2016

ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்

விகடன்.com ;அ.தி.மு.க.வில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவரோ அல்லது இருவரோ ஸ்டார் அந்தஸ்தில் இருப்பார்கள். ஆனால் முதல் முறையாக ஓ.பி.எஸ், நத்தம், எடப்பாடி, வைத்தி, பழனியப்பன் என்று ஐவர் அடையாளம் காட்டப்பட்டனர். இது எப்படி நிகழ்ந்தது என்பதும், இதன் பின் விளைவு எப்படியிருந்தது என்றும் மனக் குமுறலோடு கொட்டித் தீர்க்கின்றனர் ஒரு காலத்தில் கட்சியில் கோலோச்சி நின்றவர்கள்.
ஐவரணியின் குட்டுக்கள் உடைந்ததின் பின்னணியில்,  மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ''அப்ரூவர்'' ஆன கதையும் உள்ளது.
திகில், திருப்பங்களுடன் நமக்கு கிடைத்த தகவல்களை அப்படியே இங்கு தருகிறோம்....  எல்லா பழிபாவங்களையும் அப்படியே ஐவர் அணிமீது போட்டுவிட்டு நேக்கு ஒண்ணும் தெரியாது எல்லா அநியாயங்களையும் இவனுகதான் பண்ணிபுட்டாங்க என்று இதயதெய்வம் நீலி கண்ணீர் வடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது

டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்ததால்,   ஓ.பி.எஸ். முதல்வராக பொறுப்பேற்கும் நிலை முதன்முதலில் உருவானபோது மொத்த அமைச்சர்களும் இனம் புரியாத ஒரு உணர்வில் அப்படியே உறைந்துபோய் கிடந்தார்கள். ஓ.பி.எஸ். முதல்மந்திரியாக பதவியேற்ற அடுத்த நிமிடமே ஜெ. அந்த இடத்தைவிட்டு புறப்பட்டு விட்டார். அப்போது அவர் பின்னாலேயே மற்ற மந்திரிகளும்,  தொண்டர்களும் செல்ல,  கடைசித் தொண்டராக எந்தவிதமான உணர்வுகளையும் முகத்தில் பிரதிபலிக்காமல்,  தொய்வான நடையில் ஓ.பி.எஸ். அங்கிருந்து வெளியே வந்தார். ஜெ.வின் கார் புறப்பட்டதும் அந்த இடமே வெறிச்சோடிப் போய்விட,  அதன்பின் தன்னுடைய முதல்வர் காரில் ஏறி ஓ.பி.எஸ். போனார். முன்னாலும், பின்னாலும் எந்த போலீஸ் வாகனமும் வேண்டாம் என்ற அவருடைய வேண்டுகோளை அரசு அதிகாரிகளும், காவல்துறையும் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டது.
இரண்டாவது முறை ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்து சிறை சென்றபோது,  'கண்ணீர் மல்க ஓ.பி.எஸ். மீண்டும் ஒருமுறை முதல்வராகப் பதவியேற்கும் காலமும் கனிந்தது. முதல்வராக பொறுப்பேற்றதால் முதல் ஆளாக பொறுப்பேற்கும் நிலை. அந்தப் பதவியை கண்ணீரோடு ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பது போல ஓ.பி.எஸ். கதறியதால், பின்னே வந்த அத்தனை மந்திரிகளும் அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் கதறிக்கதறி பொறுப்புகளை ஏற்றனர். இந்தமுறை போலீஸ் பாதுகாப்பே வேண்டாம் என்று முதல்முறை பொறுப்பேற்றபோது மறுத்தது போல் ஓ.பி.எஸ். மறுக்கவில்லை. ''கொஞ்சம் போலீஸ் போதும்'' என்று தனது நிலைப் பாட்டைக் கொஞ்சம் போல தளர்த்திக் கொண்டார். அடுத்ததாக விசிட்டர்களின் வருகையில் மாற்றம் தெரிந்தது.
அவர் வீட்டைத் தேடி சொந்த ஊர் ஆட்களும், சென்னை ஆட்களும் பத்துப் பத்தாக தொடங்கி,  பின்னர் நூற்றுக் கணக்கில் குவியத் தொடங்கினர். அதே அளவு ஓ.பி.எஸ்.சின் வாரிசான மகன் ரவீந்திரநாத் வீட்டிலும் விசிட்டர்களின் வருகை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் சாந்தோம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், கண்ணகி சிலை போன்ற பாய்ன்ட்டுகளில் கோட்டைக்குப் போகும் ஓ.பி.எஸ். ரூட்டை போலீஸ் கையிலெடுத்தது. ''டிராபிக்கை குளோஸ்'' செய்து,  எப்படியிருந்தாலும் ஓ.பி.எஸ்., தமிழ்நாட்டின் முதல்வர்தானே? என்ற அடிப்படையில் வேலையைப் பார்த்தது.
அதே வேளையில் போர்நினைவுச் சின்னம் அருகே ஓ.பி.எஸ். கார் நெருங்கும்போது சாலையில் எந்தப் போலீசும் பாதுகாப்புக்கு நிற்க மாட்டார்கள். சைரன் வைத்தபடி முன்னே பின்னே அலர்ட் போடும் போலீஸ் கார்கள், ஜீப்கள் இருக்காது. கோட்டையைத் தொடும்போது கார் கதவைத் திறந்துவிடவும் ஒருவரும்  இருக்க மாட்டார்கள். இந்த முன்னுக்குப் பின் முரணான டைமிங் நாடகம் அத்தனையும் ஜெ. கவனத்துக்கு அன்றாடம் போய்ச் சேர்ந்துவிடும். ஜெ.வின் உண்மையான விசுவாசியாக, நம்பிக்கைக்குரிய நபராக இருந்து வந்த ஓ.பி.எஸ்.சுக்கு அவருடைய "எச்சரிக்கை உணர்வு" குறித்த ஞானம் இல்லாமல் போனதுதான் வியப்பு.
ஓ.பி.எஸ்.சின் மூவ்கள் வேறுமாதிரியாக, குறிப்பாக 100 சதவீதம் கமர்ஷியலாக,  அதுவும் தனி ராஜாங்கம் அமைக்கும் விதமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை "அட்வைசிங் ஏரியா" சைடிலிருந்து விபரமாக சம்பவங்களோடு எடுத்து ஜெ.விடம் கொடுக்கவே,  அவர் எடுத்த முடிவுதான், ஐவரணியை உருவாக்குதல் என்ற முடிவு. ஓ.பி.எஸ். என்னென்ன செய்கிறார் என்பதை அவருக்குத் துளியளவும் ஐயம் ஏற்பட்டுவிடாமல் எனக்குத் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். அத்தோடு அதீத நம்பிக்கை வைத்த ஓ.பி.எஸ்.சே,  இப்படி ஒரு நெகடிவ் பர்சனாக மாறிவிட்டபோது இவர்களை எப்படி முழுமையாக நம்புவது என்ற முன்னெச்சரிக்கை முன்னால் வந்து நிற்கவே, கண்காணிப்பு டீமையும் கண்காணிக்க ஒரு டீமை சைலண்ட்டாக களத்தில் இறக்கி விட்டார் ஜெ.

அவர்கள் கொடுத்த ரிப்போர்ட்டின் ''கொல வெறி'' லைன், "அம்மா, இவங்க அஞ்சு பேருமே ஒரே டீம்தான்மா... உங்ககிட்டே மொத்தமா நடிக்கிறாங்க" என்பதுதான். இதையடுத்துதான் சேசிங், கேட்சிங், என்கொயரி, ரெக்கவரி, ஆபரேஷன் என்று பல உபாயங்கள் அரங்கேறியிருக்கிறது.

நால்வரோடு டீமின் முதல்வராய் இருந்தவருக்கும் சேர்த்து அங்கே, இங்கே என்று ஓடியாடி பண்டமாற்று வேலையைப் பார்த்தவரின் மொபைல் எண்ணிலிருந்து கடல்கடந்து பல வர்த்தகங்கள் பேசப்பட்டிருக்கிறது. இது என்ன சம்பவத்துக்குள் இன்னொரு கிளைச் சம்பவம்? என்ற அதிர்ச்சியில் அவர் நம்பரை டிராக் செய்ய, அதுதான் டீமில் ஐவரோடு இன்னொரு துணையும் இருப்பதை வாய்ஸ் ஆகவும் தொடர்பு எல்லையாகவும் காட்டிக் கொடுத்திருக்கிறது.
உரித்த கோழியாய் அவரைத் தட்டத் தட்ட விபரங்கள் பங்களா, தியேட்டர், மால், பில்டர்ஸ், கல்லூரி என்று நாளுக்கு ஒன்றாய் கொட்ட ஆரம்பித்ததாம். அந்த அப்ரூவர் மாணவரணி முக்கிய நிர்வாகியுடன், இன்னும் பல புதிய காட்சிகள் இரண்டொரு நாளில் கார்டன் ஏரியாவில் காணக் கிடைக்கும்!

- ந.பா.சேதுராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக