செவ்வாய், 8 மார்ச், 2016

அ.தி.மு.கவின் ஐ.டி விங் செயலாளர்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டே இல்லையாம்!

விகடன்.com :தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அதிமுகவில் பலரின் பதவி தப்பித்தது எனலாம். ஆனாலும், உட்கட்சி சீரமைப்புகளில் 'அறுவடைகள்' என்பது மணிக்கு ஒருமுறை என்ற அளவில்  ர.ர.க்களை திக்.. திக்.. ரேஞ்சில் அலற விட்டுக் கொண்டுதானிருக்கிறது. அப்படி அலற விட்ட இடமாற்ற அறுவடைகளில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைந்து விட்டது,  புதிதாக உருவாக்கப்பட்ட  போஸ்டிங்குகள். அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவிற்கு (ஐ.டி.விங்க்), கட்சியின் அமைப்பு ரீதியான  50 மாவட்டங்களுக்கும் செயலாளர்களை நியமித்து ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுகவின் ஐ.டி. விங்கில் புதிதாக போடப்பட்டிருக்கும் பல மாவட்டச் செயலாளர்களுக்கு ஃபேஸ்-புக் அக்கவுண்ட்டே கிடையாது என்பதுதான் இதில் கிளம்பியிருக்கும் குமுறல் பஞ்சாயத்து.  வண்டி வண்டியா நோட்டு கட்டுகள் மட்டும் சேர்த்தாங்க   இவனுக  அறிவை எங்க  சேர்த்தாங்க?


திமுகவின் ஐ.டி.விங்க் சமீபத்தில் நாளிதழ்களில் முழுப்பக்க அளவில் 'ஜெ.அட்டாக்' விளம்பரங்களை  அண்மையில் கொடுத்திருந்தது. அதற்கு பதிலடியாக அதிமுக விளம்பரம் கொடுத்து எதிர்தாக்குதல் நடத்தும் என்று  பல தரப்பிலும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அ.தி.மு.க தரப்பு பதிலடி கொடுக்கவில்லை. அதே சமயம் இணையவெளியில் இருந்த அ.தி.மு.க அபிமானிகள் தொடுத்த தாக்குதல் தி.மு.க. தரப்பை நிலைகுலையச் செய்தது.  

'ஐ.டி.விங்கிற்கு இத்தனை தூரம் ரியாக்‌ஷனா?' என்று பிரமித்துப் போன ஜெயலலிதா, அவசர, அவசரமாக ஐ.டி. விங்கிற்கு மாவட்ட வாரியாக செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டார்.   'ஐ.டி.விங்கில் போஸ்டிங் போடப்பட்டவர்களுக்கு தேர்தலில் சீட் உறுதி' என்பது போல ஒரு தகவலும் இதில் சேர்ந்து கொள்ள,  அதிமுக ஏரியாவில் திடீர் அந்தஸ்து பெற்றதாக ஐ.டி. விங் ஆகிப்போனது. ஆனால், முகநூலிலும் பிற சமூகவலைதளங்களிலும் அதிமுகவிற்காக 'மல்லுக்கட்டி' நின்றவர்கள் இந்த 50 பேரில் இருக்கின்றனரா என்று பார்த்தால் ஒன்றிரண்டு பெயர்களே அதில் உள்ளன.

பாஸ்கர் தமிழ்ச்செல்வி, பாலச்சந்தர் கமல், பாலச்சந்தர் நாகராஜன், (டீம் அம்மா விஷன் 234), கே.எஸ்.கே.சிவா, அண்ணாநகர் கணேஷ், திருவள்ளூர் கிழக்கு விமலாதித்தன், ஷர்மிளா நாகராஜன், பொன்.தங்கவேலன், திருத்தணி அசோக், மா.உதயக்குமார், கௌரிசங்கர் (அம்மா முகநூல் பாசறை) காட்டாங்கொளத்தூர் மதன், இதயதுல்லா கொப்பனப்பட்டி, திருவள்ளூர் முல்லைவேந்தன், தர்மபுரி மதிவாணன், கோவை பாஸ்கர் பிள்ளை, பாலச்சந்தர் திருப்பூர், என்கேஎன் கணேஷ், திருச்சி கேசவன் என இன்னும் ஓரிரு பெயர்களோடு  இன்னமும் களை கட்டிக் கொண்டிருக்கிறது, அம்மா புகழ்பாடும் சமூக வலைதள டீம்.

ஜெ. அறிவித்துள்ள ஐ.டி. விங்கில் இதில் உள்ளோரில் சிலர் பெயர்கள் மட்டும் விடுபட்டிருந்தால் பரவாயில்லை, ஃபேஸ்புக் அக்கவுண்ட்டே இல்லாதவர்களின் பெயரும் ஐ.டி.விங். செயலாளர் பதவிக்குள் வந்திருக்கிறது என்பதுதான் ஐ.டி. விங் செயல்பாட்டாளர்களை ஆட விட்டிருக்கிறது.

முகநூலில் எல்லோரிடமும் 'அம்மா' வுக்காக சண்டை போடும் நபர்களில் பத்து பேரிடம் பேசினேன். அதில் சிலரது கருத்து மட்டும் இங்கே...

 (1)  "அதிமுகவின் முகநூல் போராளிகள் அத்தனை பேரும் வெளியில் உள்ளனர். அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது, அவர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். எந்தக் கட்சி தாக்குதல் நடத்தினாலும், கொலைமிரட்டல் விடுத்தாலும் பதிலடி கொடுக்கிறவர்கள் இன்னமும் வெளியில்தான் இருக்கிறோம்!"

(2) "பதிவாளர்கள் என்று யாரும் இல்லை, பதிவை எடுத்து மறுபதிவு போடுகிறவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐ.டி.விங். போஸ்டிங்கில் வந்துள்ளவர்களில் திருப்பூர் என்.கே.என். கணேஷ், திருச்சி கேசவன் போன்ற வரிசையில் உள்ள ஐந்து பேரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லலாம் தகுதியானவர்கள் என்று"

(3)  "திருவண்ணாமலை மாவட்ட ஐ.டி. விங் செயலாளராக போஸ்டிங் போடப்பட்டிருக்கும் சத்தியபிரகாஷ் "நான் எட்டாவது பாஸூ, பக்கத்து மாவட்டத்துல போஸ்டிங் வாங்குனவர் தான் பத்தாப்பு பெயிலு" என்று சொல்வது போல 'மீம்ஸ்'களை பறக்கவிட்டிருக்கிறது எதிர் குரூப். இதை எங்கே போய் சொல்லி முட்டிக் கொள்வது.... பேஸ் புக்கில் போஸ்ட் போடுகிற அளவுக்கு இது வொர்த் மேட்டராச்சே?’’

(4) ’’செப்.27 தொடங்கி மே.11 வரை அதாவது, கோர்ட், கேஸ் என்று ஆரம்பித்து அம்மா கைதாகி பெங்களூர் சென்றதில் இருந்து ரிலீஸ் வரை பாடுபட்டவர்கள் ஐ.டி.விங் ஆட்கள்தான். லட்சக்கணக்கில் போஸ்ட் போட்டு எதிர்க்கட்சி ஐ.டி.விங்குகளை ஓட விட்டோம். அப்ப ஓட விட்ட பலரை இப்போது ஓ.பி.எஸ். ஆதரவாளரான 'அஸ்பயர் சுவாமிநாதன்' ஓட விட்டிருக்கிறார்!’’

(5)"அண்மையில் பதவியைப் பறிகொடுத்த, திருவள்ளூர் ரமணாவின் ஆசிர்வாதத்தாலும், ஓ.பி.எஸ்.சின் அதிகபட்ச கருணையாலும் வந்தவர்தான் இந்த சுவாமிநாதன். கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, பின்னால் எதிரொலித்த 'கொல்றாங்க' என்ற வசனத்தை சேர்த்தவர் இவர்தான். ’அது ஒரு ‘ஒன் டைம் பேமண்ட்’ வேலை. அதோடு அவருக்கும் தி.மு.கவுக்குமான தொடர்பு முடிந்துவிட்டது. ஆனால், எதிர்காலத்தில் இவர் நமக்குத்  தேவை' என அப்போதே ரமணா மூலம் ஓ.பி.எஸ்ஸுக்கு அறிமுகம் செய்யப்பட்டாராம் அஸ்பையர் சுவாமிநாதன். தொழில்ரீதியாக சபரீசனுக்கும் இவர் வேண்டப்பட்டவர். இவர் எப்படி அ.தி.மு.க ஐ.டி விங்கை அதிகாரம் செலுத்தி நடத்த முடியும்’ என்பதுதான் எங்கள் சந்தேகம்.

அதுவும்போக,  "ஐ.டி.விங்கில் புதிதாக போஸ்டிங் கிடைத்த சிலர் அதில் போஸ்ட் போடுகிற வார்த்தைகள் அபாரம் "அம்மாவின் ஆனைக்கிணங்க" என்றெல்லாம் தமிழ் வளர்க்கிறார்கள். இந்தக் கொடுமைகளை எங்கே சொல்லி அழுவது என்று தெரியவில்லை!’’ என்று புலம்புகிறார்கள்.

வேறெங்கே... ஃபேஸ்புக்கில்தான்!

- ந.பா.சேதுராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக