திங்கள், 21 மார்ச், 2016

ஸ்டாலின்:தி.க.வும் தி.மு.க.வும் சுயமரியாதையையும், சமூக நீதியையும் நிலைநாட்டுவதில் இரட்டை குழல் துப்பாக்கி

திராவிட இயக்கம் என்பது பழுத்த மரம். இதன் மீது எத்தனை கற்களை வீசினாலும் அது தாங்கும்: nakkheeran.in  :ஸ்டாலின் திருச்சியில் திராவிடர் கழகத்தின் சமூக நீதி மாநாடு நடைபெற்றது. சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், 2ம் நாளான ஞாயிற்றுக்கிழமை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.நேற்றும் இன்றும் இரு தினங்களாக நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த சமூக நீதி மாநாட்டில் உங்களுடன் பங்கேற்று, தலைவர் கலைஞர் பங்கேற்று உரையாற்ற வேண்டிய நிலையில், தன்னுடைய உடல் நலம் கருதி, மருத்துவர்கள் கட்டாயப்படுத்தியதன் அடிப்படையில், அவர் வருவதற்கான வாய்ப்பைப் பெற முடியாத நிலையில், வாழ்த்துச் செய்தியை என் மூலமாக அனுப்பி, எனது உரையை தொடங்குவதற்கு முன்பாக அது உங்களிடத்திலே வாசிக்கப்பட்டு இருக்கிறது ஆக இந்த நிலையில் நம் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் ஐயா அவர்கள் என்னை அறிமுகப்படுத்தி, உரையாற்றுவதற்கு பணித்த நேரத்தில் என்னை இன்னும் ஊக்கப்படுத்தும் வகையில், உற்சாகப்படுத்தும் வகையில் என்னை அடையாளம் காட்டியிருக்கிறார்.
அப்படி அவர் அடையாளம் காட்டுகின்ற நேரத்தில் நான் திக்குமுக்காடி, இங்கு என்ன பேசுவது என்று தவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் உங்கள் முன்னாள் நின்று கொண்டிருக்கிறேன். இந்த இரண்டு நாள் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த தீர்மானங்கள் உங்கள் அன்போடும், ஆதரவோடும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.


; சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு தேவை;

மத்திய அரசுத் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுதிடும் உரிமை அவசியம்;

மத்திய அரசுப் பணிகளில் பணியாற்றிடுபவர்களுக்குத் தமிழ் பயிற்சி தேவை;

கீழ்மை நிலை நீக்குக;
குரூப்-சி பிரிவு பணிகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை;
இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்தையும் சட்டமாக்கி, 9-ம் அட்டவணையில் சேர்த்திடுக;
பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு, நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு;
மத்தியிலும், மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோரின் நலன் காத்திட தனி அமைச்சகம், தனி அமைச்சர் தேவை;

சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல்;
பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் தேவை;
சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு தேவை;
வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்க அவசரச் சட்டம் தேவை;
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை அனுமதிக்கக் கூடாது;
தாழ்த்தப்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையங்களை அமைக்கக் கோருதல்;
பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடுக;
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருக;
பாடத்திட்டங்களில் சமூக நீதியைப் பற்றிய விவரங்கள் இடம் பெற வேண்டும்;
நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்க;
ஆசிரியர் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வினை ரத்து செய்க;
ஒடுக்கப்பட்டோர் கல்வி பயில உகந்த சூழல் தேவை;
மாணவர்கள் மீதான தேசத் துரோகப் பொய் வழக்குகளை ரத்து செய்க;
ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு தேவை;
மத்திய அரசின் மதவாதப் போக்கினை முறியடிக்க ஒரே அணியில் திரள்க;
மாற்றுத் திறனாளிகளின் பால் கருணையும், உதவியுன் தேவை;
திருநங்கைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள்;
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை;
நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தைத் திறந்திடுக;
பாதுகாப்புச் சட்டம், நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், அவதூறுச் சட்டம் ஆகியவற்றில் மாற்றம் தேவை;
இப்படி மொத்தம் 25 தீர்மானங்கள் இந்த மாநாட்டின் மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளன. திராவிடர் இயக்கத்தின் தாய் கழகமாக விளங்கிக் கொண்டு இருக்கக் கூடிய திராவிடர் கழகம் நடத்திக் கொண்டு இருக்கும் இந்த சமூக நீதி மாநாடு இங்கு எழுச்சியோடும், ஏற்றத்தோடும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.;

;அதன் தொப்புள் கொடி உறவாக விளங்கிக் கொண்டு இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக இருக்கக் கூடிய அடியேன் இந்த மாநாட்டில் உரையாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். குறிப்பாக நம்முடைய பேராசிரியர் அவர்களுக்கு எனது நன்றியை காணிக்கையாக்க விரும்புகிறேன். சமுத்திரம் போல் சங்கமித்திருக்கும் இந்த சமூக நீதி மாநாட்டில் உரையாற்றுவதில் நான் அளவு கடந்த மகிழ்ச்சியடைகிறேன்

இங்கு ஆசிரியர் எடுத்துச் சொன்னார், “சந்திப்போமா, சந்திப்போமா” என்று அறைகூவல் விடுத்திருந்தார். இங்கே அணி அணியாக நீங்கள் வந்து அமர்ந்திருக்கும் காட்சியைத்தான் நான் இந்த மாநாட்டில் காண்கிறேன்.

தீரர் கோட்டமாம்” இந்த திருச்சி சிறுகனூரில் உள்ள ”பெரியார் உலகம்” என்ற திடலில் இந்த சமூக நீதி மாநாடு நடைபெறுகிறது. திருச்சி என்பதே பெரியாரின் உலகம் தான்.  ஆம், அவர் உலவிய மண் இந்த திருச்சி மண். இந்த திருச்சிக்கு பல பெருமைகள் உண்டு, வரலாற்றில் பல சிறப்புக்கள் உண்டு. எத்தனையோ சிறப்புக்களை எடுத்துச் சொல்ல முடியும். முதன்முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்து அறிவித்த இடம் இந்த திருச்சிதான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆக அப்படிப்பட்ட திருச்சியில் நடைபெறக்கூடிய இந்த மாநாட்டில் நீங்கள் எல்லாம் மிகுந்த எழுச்சியோடு திரண்டு இருக்கிறீர்கள்.">சமுதாய இயக்கமான திராவிடர் கழகத்திலிருந்து, அரசியல் வழியாக திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்டார்கள். 18 ஆண்டு காலத்திற்குப் பிறகு, 1967-ல் ஆண்டில் மீண்டும் தந்தை பெரியார் அவர்களை சந்திப்பதற்கும், அவருடன் இணைந்ததற்கும் உகந்த இடமாக இந்த திருச்சிதான் இருந்தது என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 1967-ல் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக ஆட்சி பொறுப்பை ஏற்கும் அளவிற்கு வெற்றி பெற்று, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்த நேரத்தில், அந்த வெற்றியைப் பெறுவதற்கு பக்கபலமாக இருந்தவர் மூதறிஞர் ராஜாஜி அவர்கள், அந்த வெற்றிக்குத் துணையாக இருந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள்.">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அப்போது தோழமை கண்டு இருந்தார்கள். சிலம்புச் செல்வர் ம.பொ.சி, அவர்கள், மதிப்பிற்குரிய சி.பா.ஆதித்தனார் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியிலும் இடம் பெற்று இருந்தார்கள். அத்தனை பேரிலும் முதன்மையாக அண்ணா சந்திக்க விரும்பிய தலைவர் யார் என்று கேட்டால், தான் தலைவராக ஏற்றுக் கொண்ட தந்தை பெரியாரைத் தான் முதன் முதலில் சந்திக்க விரும்பி திருச்சிக்கு வந்தார். ஆக அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சியில்தான் இந்த சமூக நீதி மாநாடு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.;">எனக்கு இன்றைக்கு நினைவுக்கு வருவது, திராவிட இயக்கத்தின் தலைமகனான விளங்கிய டாக்டர் நடேசனார் அவர்கள் விடுத்த அழைப்புதான். 1914-ல் திராவிட சங்கத்தின் முதலாமாண்டு நிறைவு விழாவில், சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற அந்த  கூட்டத்தில் தான் முழக்கமிட்டார்.">“விழியுங்கள், எழுங்கள். இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்து பட்டோர்” என்று அன்றைக்கு அவர் முழங்கினார். இந்த முழக்கம், தமிழர்களுக்காக, அதுவும் தமிழக இளைஞர்களுக்காக அன்றைக்கு நடேசனார் அவர்கள் முழங்கினார். அதைத்தொடர்ந்து தந்தை பெரியார் அவர்கள் முழங்கினார். அந்த முழக்கத்தின் தொடர்ச்சியாக இந்த சமூக நீதி மாநாட்டைக் கூட்டி நம்முடைய ஆசிரியர் முழங்குவதற்காக இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறார் என்பதுதான் உண்மை. அந்த ஆசிரியரின் சொல்லைத் தட்டாத மாணவர்களாக இங்கே நாமெல்லாம் வந்து குழுமியிருக்கிறோம். அதுதான் இந்த மாநாட்டினுடைய சிறப்பு.">ஆனால் இதே திராவிட இயக்கத்தை சிலர் கிண்டல் செய்கின்ற, கேலி செய்கின்ற, கொச்சைப்படுத்துகின்ற, கொக்கரித்துக் கொண்டு இருக்கக்கூடிய, இந்த இயக்கத்தைப் பற்றி விமர்சிக்கக் கூடிய நிலையை இன்றைக்கு நாம் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.">தமிழகத்திற்கு திராவிட இயக்கம் தேவையில்லை என்று இன்றைக்குப் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இந்த திராவிட இயக்கத்தில் இருந்து பதவிகளை அனுபவித்து விட்டு, தங்கள் பிள்ளைகளை டாக்டர்களாக, எஞ்சினியர்களாக ஆக்கியவர்களும் இன்றைக்கு இந்த திராவிட இயக்கம் வேண்டாம் என்று புலம்புகிறார்கள் என்று சொன்னால், திராவிட இயக்கம் என்பது பழுத்த மரம். இதன் மீது எத்தனை கற்கள் வீசினாலும் அது தாங்கும்.">1916 ஆம் ஆண்டை நாம் வரலாற்றில், அதுவும் நவம்பர் 20 ஆம் தேதியை யாரும் மறக்க முடியாது. மெட்ராஸ் யுனைட்டட் லீக், திராவிட சங்கம் என்றிருந்த இந்த இயக்கத்தை டி.எம்.நாயர் அவர்களும், தியாகராயர் அவர்களும் இணைந்து “தென்னிந்திய நல உரிமை சங்கம்” என்று துவக்கிய அந்த வரலாற்றை நாம் மறந்து விட முடியுமா ?">எப்படி பிள்ளைகளை பெற்றோர் மறக்க முடியாதோ அதேபோல் பிள்ளைகள் எப்படி பெற்றோரை மறக்க முடியாதோ, அப்படி பிள்ளைகளாக இருக்கக் கூடிய நாம், நமது பெற்றோராக இருக்கக் கூடிய திராவிட இயக்கத்தை மறந்து விட முடியுமா ? ஆக, நான் இன்றைக்கு திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டு இருக்கிறார்களே அவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்புகிறேன், அந்த தென்னிந்திய நல உரிமை சங்கம் தான் நீதிக்கட்சியாக மாறியது. அதனால் தான் இன்றைக்கும் திராவிட இயக்கத்தின் தலைமகன் யார் என்று கேட்டால் நீதிக்கட்சிதான் என்று நாம்  கூறி கொண்டிருக்கிறோம்.">நீதிக்கட்சியின் முதல் மாநில மாநாடு கோவையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் முன் வைக்கப்பட்ட இலட்சிய விளக்கம் என்ன தெரியுமா?

பெண்கள் கல்வி
இளைஞர்கள் கல்வி
பொருளாதார வளர்ச்சி
அனைவருக்கும் கல்வி கொள்கை
தொழில் முனைவோரை ஊக்குவிக்க “INDUSTRIAL SPIRIT”.

இன்றைக்கும் எத்தனையோ பேர் தொழில் வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள். மகளிரைப் பற்றி, பெண்களைப் பற்றி பேசுகிறார்கள்.

இந்த நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் “INDUSTRIAL SPIRIT” வளர வேண்டும் என்ற இலட்சிய முழக்கத்தை முழங்கியவர்கள்தான் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். 1926 ஆம் வருடத்தையும் நாம் மறக்க முடியாது. காரணம், அதுதான் சுயமரியாதை என்ற இயக்கம் தோன்றிய ஆண்டு. முதலாவது சென்னை மாகாண சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முத்தான தீர்மானங்கள் என்னவென்றால்,

எல்லோருக்கும் கட்டாயக் கல்வி.
நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்குதல்.
பெண்களுக்கு சொத்துரிமை.
துவக்க கல்வி ஆசிரியர்களாக பெண்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்தில் சம உரிமை.
நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்க வேண்டும்.

என்று வாதாடிய திராவிட இயக்கத்தைப் பற்றி விமர்சனம் செய்ய எங்கிருந்து இவர்களுக்கு தைரியம் வந்தது என்று நான் கேட்க விரும்புகிறேன்.

1944 - ஆம் வருடத்தை நாம் மறக்க முடியுமா ? அதுவும் குறிப்பாக 27.8.1944 ஆம் தேதியின் சிறப்பு பற்றி இங்கே அமர்ந்திருக்க கூடிய உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியுமே ? சேலம் மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை “திராவிடர் கழகம்” என்று மாற்றிய தேதிதான் அந்த தேதி. அந்த மாற்றம் எப்படி வந்தது? பேரறிஞர் அண்ணா அவர்களால் வந்தது. அவர் கொண்டு வந்த தீர்மானத்தால் வந்தது. அதனால்தான் நாம் இன்றைக்கும் திராவிட இயக்க மேடைகளில், ”அண்ணாதுரை தீர்மானம்” என்று அந்த தீர்மானத்தைப் பற்றி நாம் பேசி கொண்டிருக்கிறோம். அதுதான் உண்மை. மாநாட்டில் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற எவ்வளவு நேரம் ஆகியிருக்கிறது தெரியுமா ? 35 மணி நேரம் விவாதித்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இங்கே அமர்ந்திருக்கின்ற ஆசிரியர் அவர்கள் தன்னுடைய 10 வயதில் அந்த தீர்மானத்தின் மீது வழி மொழிந்து பேசியவர் என்பதையும் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதனால் தான் இன்றைக்கு நமக்கு எல்லாம் “ஆசிரியராக” விளங்கி கொண்டு இருக்கிறார்.>அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தால் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் உருவானது. திராவிடர் கழகம் உருவான போது முழங்கிய முழக்க என்ன ?

சாதி பேதமற்ற சமுதாயம்.
பொருளாதார ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயம்.
சமத்துவ நோக்கம் கொண்ட சமுதாயம்.
ஜனநாயக பண்புடைய சமுதாயம்.
அறிவு தெளிவு பெற்ற சமுதாயம்,
இது தான் திராவிடர் கழகத்தின் லட்சியமாக விளங்கி கொண்டிருக்கிறது. நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன், 1949-ஆம் வருடத்தை நாம் மறந்திட முடியுமா ?

பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய ஆண்டு. கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் பேசிய பேரறிஞர் அண்ணா சொன்னாரே,
சமத்துவம், பொருளாதார மேம்பாடு, ஜனநாயக நெறிமுறை” ஏற்படுத்தவும், “பேச்சுரிமை, எழுத்துரிமைக்காக போராடும் நிலையில் இந்த திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என்று அழுத்தம் திருத்தமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னார். அந்த திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தான் இன்று அவரது இதயத்தை இரவலாக பெற்றிருக்கக் கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று, நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்றைக்கும் ”இரட்டைக் குழல்” துப்பாக்கி போல இருந்து தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடும் என்ற நிலையில் இன்றைக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

;இதே திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாவின் தலைமையில், தலைவர் கலைஞர் அவர்களுடைய தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற போதெல்லாம், தந்தை பெரியாரின் கனவுகளை, அண்ணாவின் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகின்றதே. 

சுயமரியாதை திருமணம் சட்டம் நிறைவேற்றினோம்.
பிற்படுத்தப்பட்டோருக்கு,தாழ்த்தப்பட்டோருக்கு தனித்தனியாக அமைச்சகம் கண்டோம்.
அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற கொள்கையை முன்னெடுத்து சென்றோம்.
சமச்சீர் கல்வியைத் தந்தோம்.
அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க நுழைவு தேர்வை ரத்து செய்தோம்.
தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு, பழங்குடியினருக்கு தனியாக ஒரு சதவீத இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்தோம்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான வன்னியர் சமுதாயத்திற்கு 20 சதவீத வழங்கினோம்.
கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தோம்.
உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தோம்.
சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினோம்.
அருந்ததியருக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தோம்.
பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தோம்.
பெண்களை ஆரம்பக் கல்வி ஆசிரியர்களாக நியமித்தோம்.
பெண்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு அளித்தோம்.
பெண்கள் பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்க மகளிர் சுய உதவிக்குழுவை அமைத்தோம்.
அரசியல் அதிகாரம் வழங்க பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்தோம்.

அரசு நிர்வாகத்திலும், அரசியல் அதிகாரத்திலும் பெண்களை அமர்த்தி புரட்சி செய்த ஒரே இயக்கம் திராவிட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

சமத்துவத்தையும், சகோதர மனப்பான்மையையும் வளர்க்க 145 தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களை அமைத்த ஆட்சிதான் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி

ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தை துவக்கிய ஆட்சி கழக ஆட்சி.
இப்படி திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாக வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது. தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார். 1926 ஆம் ஆண்டே இட ஒதுக்கீடு கொள்கையை வழங்கியது திராவிட இயக்கம் என்பார். இப்படி இந்த சமூக நீதி மானாடு இன்றைக்கு நடைபெறுகிறது என்று சொன்னால், அதில் கலந்து கொள்ள வேண்டுமென்று தலைவர் கலைஞர் அவர்கள் தட்டாமல் ஒப்புதல் தந்து, உடல் நலத்தின் காரணமாக இன்றைக்கு வர முடியவில்லை என்று சொன்னாலும், தனது வாழ்த்துச் செய்தியிலும் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறாரே. அதைத்தான் நானும் இங்கு வழி மொழிகிறேன். ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும், ஐயா ஆசிரியர் அவர்களே நீங்கள் கவலைப்பட வேண்டாம், சமூக நீதிக்காக என்றைக்கும் குரல் கொடுக்கக் கூடிய, எந்த தியாகத்தையும் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் காத்திருக்கிறது என்பதை இங்கு உறுதியோடு தெரிவிக்க நான் விரும்புகிறேன்.

மூன்றாவது முறையாக 1989-ல் முதலமைச்சரான தலைவர் கலைஞர் அவர்கள் அன்று மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, சட்ட வடிவமாக்கி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பி, மத்திய அரசை, அன்றைய பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களை வலியுறுத்தியதன் காரணத்தால் 7.8.1990 அன்று, வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் வி.பி.சிங். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், “பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணியில் 27 சதவீத இட ஒதுக்கீட்டு” என்று அறிவித்தார். அவரது ஆட்சிக்கு சோதனை ஏற்பட்டபோது, “27 சதவீத இட ஒதுக்கீடா”, “பிரதமர் பதவியா” என்று கேட்டால் எனக்கு பிரதமர் பதவி தேவையில்லை, பிற்படுத்தப்பட்டோருக்கான இந்த இட ஒதுக்கீடுதான் தேவை” என்று உறுதி முழக்கமிட்டாரே. அந்த 27 சதவீத இட ஒதுக்கீடு இன்றைக்கு முழுமையாக செயல்வடிவம் பெற்றிருக்கிறதா ? என்பதுதான் என் கேள்வி, அதனால்தான் இந்த சமூக நீதி மா நாட்டை இன்று ஆசிரியர் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார். ஆக, அந்த குறை இன்று இன்னும் இருக்கிறது. அதற்காக தொடர்ந்து போராடும் இயக்கமாக திராவிடர் கழகம் இருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. இங்கே அமர்ந்திருக்கு ஆசிரியர் அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் முன்னெடுத்துச் செல்லுங்கள், அதனை பின்பற்றி வழிதொடர நாங்கள் காத்திருக்கிறோம்.

சுயமரியாதையையும், சமூக நீதியையும் நிலைநாட்டுவதில் தி.க.வும் தி.மு.க.வும் வேறு வேறல்ல. நான் இன்னும் சொல்கிறேன், ”ஒரு இயக்கம் கருப்பு சட்டை அணிந்து கடவுளை மற”, என்கிறது. இன்னொரு இயக்கம், ”வெள்ளை வேட்டி-சட்டை அணிந்து மனிதனை நினை”, என்கிறது, இதுதான் உண்மை. ஆக, இங்கே எல்லாரும் சொன்னதுபோல, இரட்டைக் குழல் துப்பாக்கியாக நாம் களத்தில் இறங்கத் தயாராக இருக்கிறோம்.">விரைவில் தேர்தலையும் சந்திக்கவிருக்கிறோம். மே மாதம் அந்த தேர்தலை எதிர் நோக்கியும் காத்திருக்கிறோம். மே-19ம் தேதி. பலர் பேசுகிறபோது, “இந்த நேரத்திலும் இந்த சமூக நீதி மாநாட்டை ஆசிரியர் நடத்துகிறாரே”, என்று, அதில் ஒரு முக்கியமான காரணம் உண்டு.;

யுனெஸ்கோ அமைப்பு பெரியாருக்கு விருது வழங்கியது. அந்த விருது வழங்கிய நேரத்தில் அவரை ”தொலை நோக்காளர்” என்று குறிப்பிட்டு பாராட்டினார்கள். அந்த பெரியாரின் அருகில் இருந்து பகுத்தறிவுப் பாடம் பயின்றவர்தான் நம் ஆசிரியர். எனவே அவர்களுக்கும் அந்தத் தொலைநோக்குப் பார்வை இருக்குமல்லவா ?  நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்தான் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கப் போகிறது என்பது உண்மை. அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் ஆசிரியர் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், நீங்கள் நிறைவேற்றித் தரவேண்டியவை என்று 25 தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்றி, முன்கூட்டியே பட்டியலிட்டு தந்திருக்கிறார். அதனால்தான் நான் முதலில் பேசியபோதே அவற்றைத் தலைப்புச் செய்திகளைப் போல சுருக்கமாகப் படித்துக் காட்டினேன். ஆக அந்த உணர்வோடுதான் இந்த சமூக நீதி மா நாட்டை நடத்தியிருக்கிறார் என்பதுதான் உண்மை. ஆக திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவது உண்மை. பிறகு சமூக நீதியை நிலைநாட்டுகிற வகையிலான அந்த திட்டங்கள் நிறைவேறப் போவதும் உறுதி.

அந்த உறுதியோடு இங்கே குழுமியிருக்கக் கூடியவர்களை நான் கேட்க விரும்புகிறேன், தமிழர்களுக்காக, தமிழினத்திற்காக, தமிழ் சமுதாயத்திற்காக பாடுபடக் கூடிய திராவிடர் கழகத்திற்கும், அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் நீங்கள் என்றைக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கேட்டு, இந்த நல்ல வாய்ப்பினை வழங்கியதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடைபெறுகிறேன், நன்றி. வணக்கம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக