புதன், 30 மார்ச், 2016

கெயில் தீர்ப்பு : ராமன் (பார்பன) பாலத்துக்கு நீதி ! விவசாயி நிலத்துக்கு அநீதி !!

ளியவர்களின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம்தான் என முதலாளித்துவ ஊடகங்களாலும், அறிவுத் துறையினராலும் முன்னிறுத்தப்படும் அந்த இரட்சகன் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்பதை எரிவாயு குழாய் பதிப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மீண்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது. தமிழகத்தின் மேற்கே அமைந்துள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களையும், அவ்வூர்களைச் சேர்ந்த 5,842 சிறு விவசாயிகளை நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கான மக்களை மறைமுகமாகவும் பாதித்து, அவர்களின் நிகழ்கால சேமிப்புகளையும், எதிர்கால வாழ்க்கையையும் ஒருசேர நிர்மூலமாக்கவுள்ள இத்தீர்ப்பில், தேசிய நலனின் முன்னே விவசாயிகளின் உணர்ச்சிகளுக்கெல்லாம் இடங்கொடுக்க முடியாது” என ஞான உபதேசம் செய்திருக்கிறார்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

gail-sc-verdict-1
கெயில் குழாய் செல்லும் பாதை.
தமிழகத்தின் மேற்கு மாவட்ட விவசாயிகள் கொச்சியிலிருந்து பெங்களூருக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை எடுத்துச் செல்லும் கெயிலின் (இந்திய எரிவாயுக் கழகம்) திட்டத்தை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. தங்களின் கிராமம், வயல்வெளிகள், பயிர்கள், கிணறுகள், வீடுகள், பசுமாட்டுக் கொட்டகைகள், கோழிப் பண்ணைகள் ஆகியவற்றை அழித்துக் குழாய்களைப் பதிப்பதற்குப் பதிலாக, அக்குழாய்களை மாற்றுப் பாதையில் – நெடுஞ்சாலை வழியாக கெயில் நிறுவனம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. இதைக் கோரும் உரிமை விவசாயிகளுக்கும் கிடையாது, தமிழக அரசுக்கும் கிடையாது -எனக் கட்டளையிட்டுள்ள உச்சநீதிமன்றம், கேரளாவைப் போல, கர்நாடகாவைப் போல தமிழ்நாடும் இத்திட்டத்தால் பலன் பெற வேண்டாமா?” என பேரம் பேசி, அதற்கு 136 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கையைப் பலியிட்டிருக்கிறது.
கொச்சி-குட்டநாடு-பெங்களூரு-மங்களூரு குழாய் திட்டம் 2011-ஆம் ஆண்டு முடிவில் அன்றைய காங்கிரசு கூட்டணி அரசால் இறுதி செய்யப்பட்டு, அதற்குத் தமிழக மற்றும் கேரள மாநில அரசுகளின் ஒப்புதலும் பெறப்பட்டது. கொச்சியிலிருந்து கோழிக்கோடு வழியாக கர்நாடகாவின் மங்களூருக்கும், கொச்சியிலிருந்து பாலக்காடு, கோவை, சேலம், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கும் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் இத்திட்டத்தின் மொத்த தூரம் 1,104 கி.மீ. இதில் முக்கிய எரிவாயு தடத்தின் (–Main PipeLine) நீளம் மட்டும் 893 கி.மீ. எரிவாயுவைக் கொண்டு செல்லுவதற்கு கேரளாவில் 501 கி.மீ. தூரத்திற்கும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் 310 கி.மீ. தூரத்திற்கும், கர்நாடகாவில் 60 கி.மீ. தூரத்திற்கும் குழாய்கள் பதிக்க வேண்டும்.
இதற்கு கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், திரிசூர், எர்ணாகுளம், பாலக்காடு மாவட்டங்களிலும், கர்நாடகாவின் தட்சிண கன்னடா, சாம்ராஜ்நகர், மாண்டியா, பெங்களூரு மாவட்டங்களிலும் விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனாலும், தமிழகத்தின் ஏழு மாவட்ட விவசாய நிலங்களில் குழாய்
களைப் பதிப்பதற்குத்தான் கெயில் முண்டிக்கொண்டு நிற்கிறது.
இத்திட்டத்தை தமிழக விவசாயிகளைப் போலவே, கேரள, கர்நாடகா மாநில விவசாயிகளும் எதிர்த்து நிற்கின்றனர். அமெரிக்க தரத்தில் இத்திட்டத்தை மேற்கொண்டாலும், எங்கள் நிலங்களில் குழாய் களைப் பதிப்பதை அனுமதிக்க மாட்டோம்” என அவ்விவசாயிகள் கூறுவதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. கேரள விவசாயிகளின் எதிர்ப்பால் கொச்சி-மங்களூரு குழாய் பதிப்பு திட்டம் முந்தைய காங்கிரசு ஆட்சியிலேயே கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. உண்மை இவ்வாறிருக்க, தமிழக விவசாயிகள் மட்டும்தான் இத்திட்டத்தின் மதிப்பு தெரியாமல் எதிர்த்துக் கொண்டு நிற்பதாக உச்சநீதி மன்றம் கூறியிருப்பது கடைந்தெடுத்த பொய்.
gain-sc-verdict-4
விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படுவதை எதிர்த்து தருமபுரி மாவட்டம் ஏலகிரியிலும் (வலது) கேரளாவின் காசர்கோடு பகுதியிலும் விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டங்கள். (கோப்புப் படங்கள்)
விளைநிலங்களில் இரண்டு அடி விட்டமுள்ள குழாய்கள் ஒரு மீட்டர் ஆழத்தில் பதிக்கப்பட்டு, குழாய் செல்லும் இருபுறமும் சேர்த்து 66 அடி அகலம் கொண்ட நிலப்பகுதியை கெயில் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். நிலத்தின் பட்டாவைத் தனது பெயருக்கு மாற்றிக் கொள்ளவில்லை என்றும், அந்தக் குறிப்பிட்ட நிலப் பகுதியின் அனுபோக உரிமையை மட்டுமே பெற்றிருப்பதாகவும், மீதமுள்ள நிலப்பகுதியில் பட்டாதாரர்கள் விவசாயம் செய்து கொள்ள உரிமையுண்டு எனத் தேன் தடவிய வார்த்தைகளில் இந்தக் கையகப்படுத்தலை கெயில் நிறுவனமும், மைய அரசும், உச்சநீதி மன்றமும் நியாயப்படுத்தியுள்ளன.
கெயில் குறிப்பிடும் இந்த அனுபோக உரிமை விளைநிலங்களைப் புறக்கடை வழியாக முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் நயவஞ்சகம் நிறைந்தது. குழாய் செல்லும் பாதை விளைநிலத்தை இரண்டு துண்டுகளாக்கி, அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் தென்னை, மா, பலா, புளி போன்ற மரப் பயிர்களைத்தான் விவசாயிகள் தமது வருமானத்திற்கு நம்பியிருக்கும் நிலையில், அப்படிபட்ட வேர்கள் ஆழமாகப் பூமியினுள் ஊடுருவிச் செல்லும் எந்தவிதமான மரப் பயிர்களையும் குழாய் செல்லும் பாதைக்கு அருகே பயிர் செய்யக் கூடாது என நிபந்தனை விதித்திருக்கிறது, கெயில் நிறுவனம். நிலத்தைக் கையகப்படுத்தும்பொழுதே, அத்தகைய ஒரு இலட்சத்திற்கு அதிகமான மரப் பயிர்களை கெயில் நிறுவனம் அழித்துவிட்டது. மரப் பயிர்கள் மட்டுமின்றி, குழாய் செல்லும் பாதையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கூடாது; கிணறுகள் இருந்தால் அவை மூடப்படும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறது, கெயில்.
‘‘தனது நிலத்தில் காய்ப்பு கொடுக்கும் 240 தென்னை மரங்கள் இருந்ததில், குழாய் அமைப்பதற்காக 120 தென்னை மரங்களை வெட்டப்பட்டு அழிக்கப்பட்டதையும்; குழாய் செல்லும் பாதையில் இருந்த ஆழ் துளைக் கிணறும் தூர்க்கப்பட்டுவிட்டதால், மீதமிருந்த தென்னை மரங்களும் போதிய நீர் பாய்ச்ச முடியாமல் அழிந்து போனதையும்” வேதனையோடு விவரிக் கிறார், விவசாயி ஒருவர்.
குழாய் செல்லும் பாதைக்கு அருகே வண்டி செல்லும் பாதை அமைக்கக் கூடாது; தண்ணீரை ஒருபுறத்திலிருந்து இன்னொரு gain-sc-verdict-5புறத்திற்கு எடுத்துச் செல்லும் பாத்திகளை அமைக்கக் கூடாது; நீர்க் குழாய்களைப் பதிக்கக்கூடாதென கெயில் விதித்திருக்கும் நிபந்தனைகள், நிலத்தைத் தரிசாகப் போடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருக்கிறது நிலத்தின் அனுபோக உரிமையை 99 வருடங்களுக்கு எடுத்துக் கொண்டுள்ள கெயில், அதன் மூலம் இந்த தலைமுறையை மட்டுமல்ல, எதிர்வரும் சந்ததியினரையும் நிலத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டது.
சமையல் எரிவாயுவைச் சந்தை விலைக்கு வாங்கிக் கொள்ள முன்வர வேண்டும் எனப் பொதுமக்களுக்கு உபதேசிக்கும் அரசு, விவசாயிகளின் நிலத்திற்கு சந்தை மதிப்புபடி நட்ட ஈடு தரவில்லை. மாறாக, நிலத்தின் அனுபோக உரிமையை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம் என்ற சந்துக்குள் ஒளிந்துகொண்டு, நிலத்தின் வழிகாட்டும் மதிப்பில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே விவசாயிகளுக்கு நட்ட ஈடாக அளித்திருக்கிறது. இதன்படி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராஜி என்ற விவசாயிக்குக் கிடைத்த நட்ட ஈடு வெறும் 13 ரூபாய்தான். அடிமாடுகளைக்கூட எந்தவொரு விவசாயியும் இந்த விலைக்கு விற்க முன்வரமாட்டான் எனும் நிலையில் சட்டம், போலீசைக் கொண்டு விவசாயிகளை அச்சுறுத்தி, இந்த அபகரிப்பை நடத்தி முடித்திருக்கிறது, கெயில்.
1962-இல் இயற்றப்பட்ட பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் குழாய் பதிப்புச் சட்டத்தின் கீழ்தான் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இச்சட்டம் குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதோடு, குழாய்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை பட்டாதாரரின் மீது சுமத்தி அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கும் அதிகாரத்தை கெயிலுக்கு அளிக்கிறது. அவ்வழக்குகளில் விவசாயிதான் தன்னைக் குற்றமற்றவராக
நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். தவறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் இச்சட்டத்தின்படி அளிக்க முடியும். இச்சட்டம் குற்றம் சுமத்துபவர்தான் குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்ற இயற்கை நீதிக்கு எதிரானது மட்டுமல்ல, தடா, பொடா போன்ற பாசிச சட்டங்களுக்கு இணையானது. இந்தச் சட்டரீதியான அச்சுறுத்தல் வழியாக விவசாயிகளைக் குழாய்களைக் காவல் காக்கும் சம்பளமில்லாத செக்யூரிட்டிகளாக மாற்றிவிட்டது, கெயில்.
எழுபது சதவீத விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும் எனப் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விதி இருந்தாலும், அதனை ஒதுக்கிவைத்துவிட்டு விவசாயிகளின் நிலங்களைக் கையகப் படுத்துவதற்காகவே மைய அரசின் சில சட்டங்களுக்குப் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி விலக்கு அளிக்கப்பட்ட சட்டங்களுள் ஒன்றுதான் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் குழாய் பதிப்பு சட்டம். அதனால் இச்சட்டத்தின் கீழ் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் ஒப்புதலையும் பெறத் தேவையில்லை; நிலத்தை இழப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் அக்கறை கொள்ளத் தேவையில்லை என்ற சட்டரீதியான ஏற்பாட்டைப் பயன் படுத்திக்கொண்டுதான் தமிழக விவசாயிகளின் நிலத்தின் மீதான உரிமையை மறுத்து தீர்ப்பளித்திருக்கிறது, உச்சநீதி மன்றம்.
gain-sc-verdict-6
விவசாய நிலங்களில் பதிக்கப்பட்ட எரிவாயுக் குழாய் வெடித்துச் சிதறியதால் பாதிக்கப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த நகரம் கிராமத்தின் ஒரு பகுதி (இடது) மற்றும் உடல் வெந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அக்கிராமவாசி.
‘‘ராமர் பாலத்தின் மீது மைய அரசு கைவைத்தால் எங்களிடம் வாருங்கள்” என சுப்பிரமணிய சுவாமியின் இந்து உணர்வுக்கு ஆறுதல் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், கெயில் வழக்கிலோ விவசாயிகளின் உணர்ச்சி களுக்கு இடங்கொடுப்பது வாக்குவங்கி அரசியல் என எகத்தாளத்தோடு எடுத்தெறிந்து பேசுகிறது.
குழாய் பதிக்கும் பாதையை மாற்றியமைத்தால் இத்திட்டத்திற்காக ஏற்கெனவே செலவழிக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பாழாகிவிடும் என முதலைக் கண்ணீர் வடிக்கிறது, கெயில். ஆனால், மைய அரசோ சேது சமுத்திர திட்டத்திற்காக ஏற்கெனவே செலவழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் களைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல், அத்திட்டத்தின் பாதையை மாற்றி அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. உழைக்கும் விவசாயிகளைக் காப்பதைவிட ஒரு அற்பமான மணல் திட்டைக் காப்
பதைக் கடமையாகக் கருதும் உச்சநீதி மன்றத்தின், மைய அரசின் இந்து உணர்ச்சி, வாக்கு வங்கி அரசியலைவிட மோசமானது.
மகாராஷ்டிரத்தில் மகாநகர் கேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் மஹிம்-தாசிர் எரிவாயு திட்டமும், குஜராத்தில் அதானி நிறுவனத்தால் இயக்கப்படும் அகமதாபாத்-பகோதரா மற்றும் காந்திநகர்-சார்கட்ஜ் எரிவாயு திட்டமும், உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தி வரும் எரிவாயுத் திட்டமும் நெடுஞ்சாலை வழியாகத்தான் எடுத்துச் செல்லப்படுகின்றன. கொச்சி – குட்டநாடு – பெங்களூரு – மங்களூரு எரிவாயுத் திட்டத்தின் முதல் பகுதியான புத்துவைப்பீ-கலமசேரி எரிவாயு குழாய் இணைப்பு கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் அகமதாபாத்-பரோடா நெடுஞ்சாலையில் 500 கி.மீ. தூரத்திற்கு எரிவாயு குழாய்களை ஓ.என்.ஜி.சி., இந்தியன் ஆயில் உள்ளிட்ட மைய அரசு நிறுவனங்கள் பதித்துள்ளன. உண்மை இவ்வாறிருக்க, எரிவாயுக் குழாய்களை நெடுஞ்சாலையில் பதிப்பது மிகுந்த ஆபத்தானது எனப் பூச்சாண்டி காட்டி வருகிறது, கெயில்.
எரிவாயுவை விளைநிலங்களின் வழியாக எடுத்து வருவது ஆபத்து குறைவானது என்ற கெயிலின் வாதம் சொத்தையானது என்பதை ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள நகரம் கிராமத்தில் பதிக்கப்பட்ட எரிவாயுக் குழாய்கள் வெடித்துச் சிதறிய விபத்து நிரூபிக்கிறது. இந்த விபத்தில் 18 பேர் இறந்துபோனதோடு, 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பு கொண்ட பகுதியில் இருந்த வீடுகள், மரங்கள், பயிர்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை எடுத்துச் செல்வதன் பின்னுள்ள நோக்கம் குறைந்த ஆபத்து என்பதல்ல; மாறாக, கெயிலின் இலாபம். நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்வதென்றால், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கும், பதிக்கப்பட்ட குழாய்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கும், விபத்து ஏற்பட்டால் நட்ட ஈடு வழங்குவதற்கும் அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். விளைநிலங்கள் வழியாக எடுத்துச் செல்வதன் மூலம் தனது இந்தச் சுமைகள் அனைத்தையும் விவ
சாயிகளின் தலையில் சுமத்திவிட்டு, அதனை நியாயப்படுத்துவதற்குத் தேசிய நலன், தொழிற்சாலை, வேலைவாய்ப்பு, வளர்ச்சி – என விதவிதமான பொய்களைக் கவர்ச்சிகரமான முறையில் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.
gail-sc-verdict-2இந்த எரிவாயுத் திட்டம் நிறைவடைந்தால், உரத் தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி நிலையங்களும், அவற்றைச் சார்ந்த தொழிற்சாலைகளும் பலனடைவதோடு, வீடுகளுக்கும், தள்ளுவண்டி கடைகளுக்கும் எளிதாக எரிவாயு கிடைக்கும் எனப் படம் காட்டுகிறார்கள், பொருளாதார நிபுணர்கள். உர மானிய வெட்டு, எரிவாயு மானிய வெட்டு, மின்சார மானிய வெட்டு, கூலி வெட்டு என ஒருபுறம் மக்களின் மீது இடியை இறக்கிவிட்டு, இன்னொருபுறம் உரமும், எரிவாயுவும், மின்சாரமும் அபரித
மாகக் கிடைக்கும் எனப் பேசுவது அயோக்கியத்தனமானது.
பொதுத்துறை நிறுவனமான கெயிலின் 30 சதவீதப் பங்குகள் தனியாரின் கைகளில் இருக்கும்நிலையில், அதன் வியாபார நடவடிக்கைகளில் பொது நலன் என ஒன்று இருக்கவே முடியாது. அப்படி பொது நலன் இல்லாத ஒன்றுக்காக விளைநிலங்களைக் கைப்பற்ற முடியாது என்பதற்காகவே, ஒவ்வொரு கார்ப்பரேட் நடவடிக்கையின் மீதும் தேச நலன், வளர்ச்சி என்ற சல்லாத் துணி போர்த்தப்படுகிறது. விவசாயிகளின் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காத உச்சநீதி மன்ற நீதிபதிகளின் உள்ளத்திலோ கார்ப்பரேட் முதலாளிகளின் விசுவாசம்தான் நிரம்பிக் கிடக்கிறது.
ஆளுங்கும்பலின் இந்த மோசடிகளையெல்லாம் விவசாயிகள் புரிந்துகொண்டு வருகிறார்கள். அதனால்தான், மேற்கு மாவட்ட விவசாயிகள் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் குழாய் பதிப்புச் சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறார்கள். இதனைச் சாதிப்பதற்கு விவசாயிகள் தமது சொந்த பலத்தையும் தமிழக மக்களின் ஆதரவை
யும் பெறுவதைத் தவிர வேறு மாற்று வழி எதுவும் கிடையாது.
ஜெயாவின் கபட நாடகம்
2011-ஆம் ஆண்டு இறுதியில் கொச்சி-பெங்களூரு எரிவாயு குழாய் திட்டத்திற்கு அப்பொழுது மைய ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு ஒப்புதல் தந்தவுடனேயே, அதனை எவ்வித மறுப்புமின்றித் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டதோடு, 2012 மே மாதத்தில் கெயில் திட்டத்தை ஆதரித்து சட்டமன்றத்திலேயே உரையாற்றினார், ஜெயா. கெயில் நிறுவனத்தின் நிலம் கையகப்
படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்து நின்ற விவசாயிகளை ஒடுக்குவதற்கு போலீசையும் மாவட்ட நிர்வாகத்தையும் அனுப்பி வைத்தது, அவரது அரசு. நெடுஞ்சாலை ஓரத்தில் எரிவாயுக் குழாய்களைப் பதிப்பது சாத்தியமற்றது; திட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அன்றைய தலைமைச் செயலர் தேவந்திர நாத் சாரங்கி.
விவசாயிகள் போலீசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி ஒடுங்கிப் போய்விடவில்லை. அவர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்குத் தடையாணை பெற்றனர். உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இணங்க சென்னையில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கெயிலின் திட்டத்தை நெடுஞ்சாலைக்கு மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர். விவசாயிகளின் உறுதியாலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாக்குகளைப் பெற வேண்டுமென்ற சுயநலத்தாலும் பின்வாங்கிய ஜெயா அரசு, விளைநிலங்களுக்குப் பதிலாக நெடுஞ்சாலை ஓரமாகக் குழாய்களைப் பதிக்குமாறு கெயிலுக்குக் கட்டளையிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக
அரசின் ஆணையை ரத்து செய்து, குழாய்களை விளைநிலங்களில் பதிக்க கெயிலை அனுமதித்தது உயர்நீதி மன்றம். உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தொடுத்த வழக்கில்தான் உச்சநீதி மன்றம் கெயிலுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
உச்சநீதி மன்றத்தில் கெயிலுக்கு எதிராகத் தமிழக அரசு தொடுத்திருந்த மேல்முறையீட்டு வழக்கு இறுதி விசாரணைக்கு வந்த நாளன்று, தமிழக அரசு நியமித்திருந்த மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி வாதிடுவதற்கு கோர்ட்டுக்கே வரவில்லை. வக்கீல் வராமல் போனதைத் தமிழக அரசும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோருவதற்கு பெரிய வக்கீல் கூட்டத்தையே உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்த ஜெயா, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வுரிமை சம்மந்தப்பட்ட வழக்கில் வாதிடுவதற்கு நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ஆஜராகாமல் ஒளிந்து கொண்டதைக் கண்டும் காணாமல் விடுகிறார் என்றால், இதனைத் தற்செயலானதாகக் கருத முடியாது. சொத்துக் குவிப்பு வழக்கு
தனக்குச் சாதகமாக முடியும் வரை உச்சநீதி மன்றத்தையும், மைய அரசையும் பகைத்துக் கொள்ளக் கூடாதென்ற ஜெயாவின் சுயநலம் இதற்கு காரணமாக இருக்கக் கூடும்.
இப்படி விவசாயிகளின் முதுகில் குத்தியிருக்கும் ஜெயா, உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். இது, சட்டமன்றத் தேர்தலை மனதில் நிறுத்தி ஜெயாவால் அரங்கேற்றப்படும் இன்னொரு நாடகமே!
– செல்வம்  வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக