புதன், 23 மார்ச், 2016

விஜயகாந்த்+பிரேமலதா : அது இது எது? இன்று கூட்டணி விபரம் (பேரம்?) அறிவிப்பு.

சென்னை: யாரோடும் கூட்டணி இல்லை... தனித்துதான் போட்டி என்று முன்பே திட்டவட்டமாக விஜயகாந்த் அறிவித்தாலும், மீண்டும் அவருடன் கூட்டணி பற்றிப் பேசி வருகின்றன முன்னணி கட்சிகள். இந்தக் கட்சிகளுடன் அவர் இணையப் போகிறாரா? எடுத்த முடிவில் உறுதியாகப் பயணிக்கப் போகிறாரா? என்பது இன்று புதன்கிழமை தெரிந்துவிடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.பழம் கனிந்திருக்கிறது... பாலில் விழும் என நம்புகிறேன் என்று விஜயகாந்துடனான கூட்டணி எதிர்ப்பார்ப்பு குறித்து முன்பு திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் அவரது நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, தனி ரூட்டை அறிவித்தார் விஜயகாந்த்.

இன்னொரு பக்கம், பாஜகவும், மக்கள் நலக் கூட்டணியும் விஜயகாந்த் தங்கள் அணிக்கு வரவேண்டும் என்று மல்லுக் கட்டின. இருவருக்குமே டாடா காட்டிவிட்டார்.
ஆனால் இப்போது மீண்டும் இந்த மூன்று கட்சிகளும் தேமுதிக எங்களுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன.
தான் யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை என்கிறார் விஜயகாந்த். ஆனால் 'நாங்கள் விஜயகாந்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம்' என அறிவிக்கிறார் கருணாநிதி. 'இல்லை இல்லை அவர் சொன்னது பழைய நிலையை... இப்போது பேச்சுவார்த்தை நடக்கவில்லை' என்கிறார் முக ஸ்டாலின்.
இன்னொரு பக்கம், ஏற்கெனவே டெல்லிக்கும் கோயம்பேட்டுக்கும் நடையாய் நடந்த மத்திய அமைச்சர் ஜவடேகர் இன்று மீண்டும் விஜயகாந்தைச் சந்திக்க வருகிறார். வைகோ உள்ள மநகூ தலைவர்கள் இன்னொரு முறை கேப்டனிடம் கேட்டுப் பார்ப்போமே என தேமுதிக அலுவலகத்துக்கே போகப் போகிறார்களாம்.
அட என்னதான்யா நடக்குது... உங்க டீல்தான் என்ன? என்ற ஆர்வம் மக்களுக்கு இருக்கிறதோ இல்லையோ.. மீடியாவுக்கு எக்கச்சக்கமாகிவிட்டது.
எனவே இன்று மீண்டும் தனது முடிவை விஜயகாந்த் சொல்வார் என்ற ஹேஷ்யத்தில் விஜயகாந்த் - மநகூ-பாஜக தலைவர்களின் சந்திப்புகளுக்காக கேமராவும் கையுமாகக் காத்திருக்கிறார்கள். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக