திங்கள், 28 மார்ச், 2016

பேயை ஒட்டுவதாக....பெண்ணை கொன்ற சிங்கள மந்திரவாதி....இலங்கையில்

அநுராதபுரம், கட்டுகெலியாவ பிரதேசத்தில் நோய் நிவர்த்திப் பூஜையொன்றின் பின்னர் கடுமையாக சுகயீனமுற்ற திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் எலயாபத்துவ நெல்லிகுளம் பிரதேசத்தை சேர்ந்த தனூஷிகாகுமாரி சந்திரரத்ன என்ற 36 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பெண் சிறிது காலம் நோயினால் அவஸ்தையுற்று வந்துள்ளார். இதனால் தனது கணவருடன் பூசாரி ஒருவரிடம் சென்று அவரது பரிந்துரைக்கமைய பேயோட்டும் பெண்ணொருவரிடம் இவ்விருவரும் சென்றுள்ளனர். நோயுற்றிருந்த பெண் அடிக்கடி வீட்டிலிருக்கும் போது மயங்கி வீழ்வதாக பேயோட்டும் பெண் ஒருவரிடம் அப் பெண்ணின் கணவர் தெரிவித்தார். அப்போது அப் பெண்ணுக்குப் பேய் பிடித்திருப்பதனாலேயே இவ்வாறு அவ்வப்போது மயங்கி வீழ்வதாக தெரிவித்த பூசாரி, இதற்கான நிவர்த்தி பூஜையை மேற்கொண்டு, தான் குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.


பூஜையின் போது தென்னம்பாளைகள் மூலம் குறித்த பெண் பூசாரி, நோயாளியின் தலையில் பலமாக தாக்கியதாக பொலிஸாரிடம் மேற்படி பெண்ணின் கணவர் தெரிவித் திருந்தார்.

பூஜையின் போது பேயோட்டி சிகிச்சை பெற வந்திருந்த பெண்ணிடம் எலுமிச்சை பழமொன்றினை கொடுத்து அதனை விழுங்குமாறு அவரை பணித்த போது நோயாளியான பெண் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனால் குழப்பமடைந்த அவரின் கணவர் அப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.



அவ்வேளையில் பெண்ணின் உடலை விட்டு பேய் வெளியேறியதாலேயே அவர் இவ்வாறு மயங்கி வீழ்ந்துள்ளதாக பெண்ணின் கணவரிடம் பேயோட்டி தெரிவித்ததோடு அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.

பின்னர் மறுநாள் (14) அதிகாலை 3 மணியளவில் அப் பெண் சுய நினைவுக்கு வந்ததும் தனக்கு சற்று நோய் அதிகமாக உள்ளதாக அவரது கணவரிடம் தெரிவிக்கவே அவர் அநுராதபுரம் வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

எனினும் அவரை பரிசோதனை செய்த வெளி நோயாளர் பிரிவிலுள்ள வைத்தியர் அப்பெண் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பூஜை நடத்தப்பட்ட இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கிருந்த 60 வயதான பேயோட்டும் பெண்ணையும் மேலும் இருவரையும் கைது செய்துள்ளனர்.



மேலும் அங்கிருந்த பூஜை தட்டுகள், கத்தி உள்ளடங்கலான சில பொருட்களையும் மீட்டுள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் பொறுப்பதிகாரி எச்.எம்.என்.ஜயபத்மவின் ஆலோசனைக்கமைய குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.குமாரசேன உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- See more at: hw.metronews.lk/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக