செவ்வாய், 15 மார்ச், 2016

பன்னீர்,நத்தம்,பழனி வீட்டுக்காவலில்? அம்மாவையும் சசியையும் மிஞ்சிய "மக்கள் சேவையாம்"

தினமலர்.com அ.தி.மு.க.,வில், அதிகார மையமாக செயல்பட்ட, மூத்த அமைச்சர்கள் மூவர், இன்று வீட்டிற்குள் முடக்கப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., 2011ல் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, அவ்வப்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. பலமுறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோதும், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் மட்டும் மாற்றப்படவே இல்லை.தலைமை மீது அவர்கள் காட்டிய விசுவாசம் காரணமாக, ஒரு கட்டத்தில், கட்சி மற்றும் ஆட்சியை நிர்வகிக்கும் பொறுப்பு முழுவதுமாக, இவர்கள் ஐவர் கைகளுக்கு செல்ல, அவர்கள், 'ஐவரணி' என, அழைக்கப்பட்டனர். இந்த குழுவின் தலைவராக பன்னீர்செல்வம் இருந்தார்.


இந்நிலையில், 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு வாங்கும் பணி, கட்சியில் துவங்கியது.'சீட்' பெற விரும்பியவர்கள், ஐவரணியை முற்றுகையிட்டனர். அவர்களை, அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் அனுப்பினர். அவருடன் இருந்தவர்கள், 'சீட்' பெற நினைத்தவர்களிடம், பெரும் தொகை வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, கட்சி தலைமைக்கு புகார்கள் பறந்தன. மேலும், ஒவ்வொருவரும் எவ்வளவு சொத்துக்கள் சேர்த்துள்ளனர் என்ற விவரங்களும், உரிய ஆதாரங்களுடன் கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டன.

அதிர்ச்சி அடைந்த தலைமை, ஐவரணி குறித்து விசாரிக்க, உளவுத் துறைக்கு உத்தரவிட்டது. அவர்கள் அளித்த அறிக்கைகளில் அதிர்ச்சிகரமான தகவல்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து, ஐவரணியில் பன்னீர்செல்வம், நத்தம், பழனியப்பன் ஆகிய மூவரும் ஓரங்கட்டப்பட்டனர்.
அவர்களின் வீடுகளில், ரகசிய சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக, அவர்களிடம் இருந்த அமைச்சர் பதவியை பறித்தால், அது பிற கட்சிகளின் விமர்சனத்திற்குள்ளாகும் என்பதால், தற்போதைக்கு அவர்களின் பதவி தப்பியுள்ளது.

மூவர் தவிர, மீதமிருந்த வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன், புதிதாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலராக, பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட, எம்.எம்.பாபுவிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டு, ஏற்கனவே மாவட்ட செயலராக இருந்த விருகை ரவியே நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, செந்தில் பாலாஜிக்குப் பின், கரூர் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்ட விஜய்பாஸ்கரும் விரட்டப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில், பன்னீர்செல்வத்துக்கு சமமாக செல்வாக்கு பெற்றிருந்த எம்.எல்.ஏ., தங்கதமிழ் செல்வன், பன்னீர்செல்வத்துக்கு ஆகாதவர் என்பதாலேயே, கட்சிப் பதவிகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தார். இப்போது, பன்னீர்செல்வம் ஒதுக்கப்படும் சூழல்
ஏற்பட்டுள்ளதால், தங்கதமிழ் செல்வன், தேனி மாவட்ட ஜெ., பேரவை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். இப்படி தமிழகம் முழுவதும், 'பன்னீர் செல்வம் அண்ட் கோ'
வினரால் நியமிக்கப்பட்ட, அனைவரது பதவிகளும் ஆட்டம் கண்டுள்ளன. இன்னும் பலரது பதவிகள், வரிசையாக பறிக்கப்படும் என தெரிகிறது.

இப்படி அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன் உள்ளிட்டவர்கள், இன்று வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். தங்களின் சொந்த தொகுதியில் நடக்கும் விழாக்களில் பங்கேற்கக்கூட, அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
'கட்சி தலைமையின் அனுமதியின்றி, எங்கும் செல்லக்கூடாது' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதா கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது, அவரது தோழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவரது குடும்பத்தினர், ஆட்சியிலும்; கட்சியிலும் சகல செல்வாக்கோடு வலம் வந்தனர்.

அதை பயன்படுத்தி, அவர்கள் சொத்துக்களையும் வாங்கி குவித்தனர். இதனால், ஒரு கட்டத்தில், முதல்வருக்கே கெட்ட பெயர் கூட ஏற்பட்டது. இதை தாமதமாக தெரிந்து கொண்ட ஜெயலலிதா, அனைவரையும் ஒரே நாளில், கட்சியில் இருந்து ஓரம் கட்டினார். காலம் கடந்தது. மன்னிப்பு கோரிய தோழியை, மீண்டும் போயஸ் கார்டனுக்குள் அனுமதித்தார்.

அதை தொடர்ந்து தான், கட்சிப் பணியிலும்; ஆட்சிப் பணியிலும், ஐவரணிக்கு, முதல்வர் முக்கியத்துவம் கொடுத்தார். அவர்களும், தோழியின் உறவினர்கள் போல் செயல்படத் துவங்கியதும், அவர்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.அ.தி.மு.க.,வை பொறுத்தவரை ஒரே அதிகார மையம் என்றால், அது ஜெயலலிதாதான் என்பதை மீண்டும் அவர், நிரூபித்துள்ளார்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.நமது சிறப்பு நிருபர்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக