வெள்ளி, 18 மார்ச், 2016

டாஸ்மாக் அமைச்சர் நத்தம் ஸ்டோரி (4000 கோடிக்கு கணக்கு காட்டலியாம் பங்கும் கொடுக்கலியாம்)

savukkuonline.com :தமிழக அமைச்சரவையில் செல்வம் கொழிக்கும் இரண்டு துறைகளை வைத்திருந்தவர் என்றால் அது நத்தம் விஸ்வநாதன்தான்.    டாஸ்மாக்கை கவனிக்கும் கலால் துறை மற்றும் மின் துறை.   இரண்டு துறைகளிலும் பணம் கோடிக்கணக்கில் புழங்கும்.
மிகவும் செல்வாக்காக வலம் வந்த நத்தம் விஸ்வநாதன் சமீப காலமாக ஓரங்கட்டப்பட்டு முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு உள்ளார். ஏன் என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
மத்திய பிரதேசத்தில் சூரிய ஒளி மின் திட்டத்தை அமைக்க டெண்டர் விடப்பட்டது.  அந்த டெண்டரில் பங்கெடுத்த அதானி நிறுவனம், ஒரு யூனிட் 6 ரூபாய் 4 பைசா விலையில் சூரிய மின்சாரம் வழங்குவதாக கூறியிருந்தது.    ஆனால், மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரம் 5 ரூபாய் 5 பைசாவுக்கு வழங்க முன்வந்ததும், அதானி நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மொரீஷியஸ் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது.

????????????????????????????????????
அதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் தமிழக அரசு அதானி நிறுவனத்திடம்  ஒரு யூனிட் 7 ரூபாய் 1 பைசா விலையில் 25 ஆண்டுகளுக்கு வாங்க டெண்டர் விடாமலே நேரடியாக ஒப்பந்தம் செய்தது.  இது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தன.
இந்நிலையில், அதானி நிறுவனம் கார்டனுக்கு 300 கோடியை கொடுத்தனுப்பியுள்ளது.  இந்த தொகை நத்தம் விஸ்வநாதன் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.  இத்தொகையை முழுமையாக சேர்க்காமல், வெறும் 180 கோடியை மட்டும் நத்தம் விஸ்வநாதன் வழங்கியுள்ளார்.   பேசியபடி பணம் கிடைக்காத காரணத்தால், கார்டன் தரப்பு நேரடியாக அதானி நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளது.    எந்த தேதியில் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விபரத்தை அதானி நிறுவனம் கையெழுத்தில்லாத ஒரு கடிதத்தில் கார்டன் தரப்புக்கு அளித்துள்ளது.   இதற்குப் பிறகே நத்தம் விஸ்வநாதன் பணத்தை முழுமையாக ஒப்படைக்காமல் பாதித் தொகையை ஆட்டையை போட்டுவிட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
கடுமையான கோபமடைந்த கார்டன் தரப்பு, உடனடியாக நத்தம் விஸ்வநாதன் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டது.  அந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள், கார்டன் தரப்பையே அதிர வைத்துள்ளது.
அதிமுக அரசில் உள்ள அமைச்சர்கள் வழக்கமாக தங்கள் பதவிக்காலம் முடிவதற்குள் கணிசமான ஒரு தொகையை சேர்ப்பது வழக்கமே.   அந்தத் தொகை 200 முதல் 300 கோடிகள் இருக்கும்.    நத்தம் விஸ்வநாதன் சேர்த்துள்ள தொகை தோராயமாக 4000 கோடி என்ற தகவல், மேலிடத்தின் கோபத்தை அதிகரித்துள்ளது.
நத்தம் விஸ்வநாதனின் உதவியாளராக அறியப்படுபவர் கோபி என்பவர்.  இவர்தான் நத்தம் சார்பாக அனைத்து விதமான வசூலிலும் ஈடுபடுவார்.  டாஸ்மாக் நிறுவனத்தில் கோபி வைத்ததுதான் சட்டம்.   இந்த கோபியின் பின்னணி என்ன என்பதையறிந்த கார்டன் வட்டாரம் அதிர்ந்து போயுள்ளது.   திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் பெரிய தலை என்றால் அது மாவட்ட செயலாளர் பெரியசாமிதான்.  இந்த பெரியசாமியின் சொந்த அக்கா மகன்தான் கோபி.    இந்த கோபியும் அவருடைய உறவினருமான கண்ணன் என்பவரும் அத்தனை வசூலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக்கில் சப்ளை செய்யப்படும் பெரும்பாலான உயர் வகை மது வகைகள் அனைத்தும் நத்தத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.   வழக்கமாக டாஸ்மாக்கில் வரும் வசூலில் கார்டனுக்கு செலுத்தப்படும் கப்பத்தில் இந்த உயர்வகை மதுவகைகளில் வரும் வசூல் சேர்த்தி இல்லை.   உயர்வகை மதுவகைகளில் ஒரு கேஸுக்கு 400 வரை வசூலிக்கப்படுகிறது.  இந்த வசூலில் நத்தம் விஸ்வநாதனுக்கு பெரிதும் உதவுவது எம்ஜிஎம் மது கம்பெனி  அதிபர் எம்.ஜி.முத்து.
இந்தியா முழுவதுமே ரியல் எஸ்டேட் தொழில் ஒரு தேக்கநிலையை சந்தித்து வருகிறது.   குறிப்பாக தமிழகத்தில் இது மிகவும் மந்தமான நிலையில் உள்ளது.  கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் விற்கவில்லை.  புதிய திட்டங்களுக்கு முதலீடு இல்லை.  ரியல் எஸ்டேட்டில் ஜாம்பவான்களான பல நிறுவனங்கள் தண்ணீர் குடித்துக் கொண்டு உள்ளன.   ஆனால் இதில் சென்னையைச் சேர்ந்த காஸா க்ராண்ட் நிறுவனம் மட்டும் விதிவிலக்கு.     இந்நிறுவனத்தின் 15க்கும் மேற்பட்ட அடுக்குமாடி மற்றும் சொகுசு வீடு திட்டங்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன.   பல லட்ச ரூபாய் செலவில் ஆங்கில நாளிதழ்களில் முழுப்பக்க வண்ண விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது காஸா க்ராண்ட் நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் நத்தம் விஸ்வநாதனின் முதலீடு 850 கோடி.      இந்த முதலீடுகளை கவனித்துக் கொள்வது நத்தத்தின் மகன் அமர்.   காஸா கிராண்ட் நிறுவனம், கிழக்குக் கடற்கரை சாலையில் கட்டி வரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு “அமரேந்திரா” என்று பெயர் சூட்டி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் ஒரு விலை உயர்ந்த ஹோட்டலை நத்தம் விஸ்வநாதன் வாங்கியுள்ளார்.    இதில் நத்தத்தின் முதலீடு 386 கோடி.    இந்த ஹோட்டல் வாங்கியது மற்றும் அதன் நிர்வாகம் அனைத்தையும் நத்தத்தின் மகன் அமர் கவனித்துக் கொள்கிறார்.  சமீபத்தில், வரி ஒழுங்காக கட்டவில்லை என்று அமெரிக்க நிர்வாகம் இந்த ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
லண்டனை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஓக்லி ப்ராப்பர்டி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில்  நத்தம் 400 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஒரு மின்திட்டம் கூட செயல்படாமல் போனதற்கு முக்கிய காரணம் நத்தம் விஸ்வநாதன் என்பது கார்டன் தரப்பில் இப்போது கூறப்படும் தகவல்.
உடன்குடி மற்றும் வடசென்னை மின் திட்டத்துக்கான டெண்டரில் சீன நிறுவனம் பங்கு பெற்றது.   சீன நிறுவனத்தின் அதிகாரிகள் இது தொடர்பாக நத்தம் விஸ்வநாதனை சந்தித்து பேசியபோது, நத்தம் 400 கோடி  கேட்டுள்ளார்.    டெண்டரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குறைந்த தொகைக்கு டெண்டர் கேட்டிருந்த சீன நிறுவனம், தங்களால் அதெல்லாம் தர முடியாது என்று தெரிவித்து விட்டது.
இதையடுத்து நத்தம் விஸ்வநாதன் பிஎச்இஎல் நிறுவனத்தின் துணை காண்ட்ராக்டர்களிடம் பேசி, ஒரு பெரும் தொகையை வசூல் செய்துள்ளார்.    இந்த காண்ட்ராக்ட் எப்படியும் பிஎச்இஎல் நிறுவனத்துக்குதான் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்து, அவர்களிடம் முன்னதாகவே தொகையை பெற்றுள்ளார் நத்தம்.
இந்த பேரத்தில் தலைமைச் செயலாளரும், முன்னாள் மின்  வாரியத்தின் தலைவருமான ஞானதேசிகனின் சகலை ராஜன் என்பவரும் நத்தத்தோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார்.
முன்தொகையை பெற்று விட்டதால் எப்படியாவது பிஎச்இஎல் நிறுவனத்துக்கு டெண்டரை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தில், டெண்டரில் பல்வேறு குளறுபடிகளை செய்ததால், சீன நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது.   இதன் காரணமாக வட சென்னை, உடன்குடி ஆகிய இரு மின் திட்டங்களும் நீதிமன்ற வழக்குகளில் சிக்கின.   இந்த குளறுபடிகளால், அதிமுக அரசு ஒரு யூனிட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யவில்லை என்ற அவப்பெயர் கிடைத்தது. ”இதற்கெல்லாம் எல்லோரும் அம்மாவை குற்றம் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் இதற்கு நத்தம் விஸ்வநாதனே காரணம்” என்று கார்டன் தர்ப்பு நிர்வாகி நம்மிடம் தெரிவித்தார்.
நத்தம் விஸ்வநாதன் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்துக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் நத்தம் விஸ்வநாதன் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக அரசில் செல்வாக்கான தலைவராக வலம் வந்து கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதனின் இந்த வீழ்ச்சி, அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக