ஞாயிறு, 20 மார்ச், 2016

நத்தம் விசுவநாதன் 3000 கோடியை முழுங்கினார்.....ஓஸ்ராம் பல்புக்களை ஐந்து மடங்கு அதிக விலையில்.....

விகடன்.com அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவைத் தவிர நிரந்தர உறுப்பினர் யாரும் இல்லை. போயஸ் கார்டனுக்குள் சசிகலாவைவிட கூடுதல் செல்வாக்கு பெற்றவர் எவரும் இல்லை. இந்த இரண்டு விஷயங்களையும் உணர்ந்து கொள்ளாதவர்களுக்கு அந்தக் கட்சியிலும் இடமில்லை. கார்டனுக்குள் நுழைய அனுமதியும் இல்லை. 1991-ல் இருந்து 2016 வரை மட்டுமல்ல... எதிர்காலத்திலும் இதுதான் நிலை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கண்ணப்பனில் ஆரம்பித்து, பொன்னையன், செங்கோட்டையன், ஜெயக்குமார் என்று தொன்றுதொட்டு வரும் இந்த அ.தி.மு.க பாரம்பர்யம், இன்று பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் வரை தொடர்கிறது. கட்சிக்குள் இப்படி என்றால், கார்டனுக்குள் ம.நடராசன், சுதாகரன், திவாகரன், தினகரன், ராவணன் என்று உதாரணங்கள் ஏராளம். கவிழ்கிறோம் கவிழ்கிறோம்  கும்புடு போட்டே கவிழ்கிறோம்....சுருட்டுறோம் சுருட்டுறோம்  மொத்தமா சுருட்டுறோம்


இந்த உதாரணங்களை ஐவரணியினர் உணராதவர்கள் அல்ல. ஆனாலும்கூட தவிர்க்க முடியாத சில நேரங்களில் ஜெயலலிதா கொடுத்த சில சலுகைகளில் மயங்கி, இனி நாம் தான் கட்சி... நம்மிடம்தான் ஆட்சி... என்று தலைத்திருகித் திரிந்ததால்தான் இன்று நால்வர் அணிக்கு இந்த நிலை. இந்த நிலைக்கு முக்கியமான காரணம் நத்தம் விஸ்வநாதனின் ஹைவோல்டேஜ் வேலைகள்தான் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு புரியும்.
இனி... நத்தம் நசுங்கிய கதையை பார்ப்போம்.

என்ன செய்தார் நத்தம்?

உடன்குடி, எண்ணூர், உப்பூர் என்று தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட லோக்கல் திட்டங்களில் தன் கட்டுப்பாட்டுக்குள் அரங்கேற்றிக் கொண்டிருந்தார் நத்தம். உடன்குடி அனல்மின் திட்டத்தில், டெண்டரில் பங்கேற்ற சீன நிறுவனத்துக்கு திட்டத்தைக் கொடுக்காமல், அதை தன் மகன் அமர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு கொடுத்தார். அதையும் சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா பரப்பன அக்ரஹரா சிறைக்கு சென்ற தினத்தில் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வேலைகளை அவசர அவரசமாக முடுக்கிவிட்டிருந்தார். இவற்றை ஜெயலலிதா கண்டும் காணாததுபோல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட திட்டங்களில் கொட்டும் பணத்தை வைத்து ஜெயலலிதாவைச் சுற்றி இருக்கும் முன்னாள் அதிகாரிகள் வட்டத்தையும் வாயடைக்க வைத்திருந்தார். அதனால், அப்போதெல்லாம் விவகாரம் வில்லங்கமாகவில்லை.

ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தில் போய் தனது வில்லங்கங்களை அரங்கேற்ற முயன்று, தனக்கான ஆப்பை தானே தேடிக் கொண்டார். மத்திய அரசு ‘பிரகாஷ் பாத்’ என்றொரு திட்டத்தை தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டம்தான் ‘பிரகாஷ் பாத்’. தமிழில் சொல்வதானால் 'வெளிச்சத்திற்கான பாதை'. மோடியே ஒரு பல்பை அகற்றி, அந்த இடத்தில் எல்.இ.டியை தனது கையால் பொருத்தி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி மாநில அரசு ஒவ்வொன்றும் மத்திய அரசிடம் இருந்து எல்.இ.டி பல்புகளை வாங்கி,  தங்கள் மாநிலத்தில் பொருத்த வேண்டும். மார்கெட்டில் 490 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்கும் எல்.இ.டி பல்புகளை மத்திய அரசு, மானியவிலையில் 130 ரூபாய்க்கு மாநில அரசுக்கு கொடுக்கும். அத்துடன் அதை பராமரிக்கும் வேலையையும் மத்திய அரசே பார்த்துக் கொள்ளும்.

ஆனால், இந்தத் திட்டத்தை மத்திய அரசு சொல்கிறபடி செய்தால், நத்தம் விஸ்வநாதனுக்கு பாக்கெட் நிரம்பாதே. எந்தக் கமிஷனும் கிடைக்காதே. அங்கே விலையைக் கொடுக்க வேண்டியது... பல்பை வாங்க வேண்டியது... பொருத்த வேண்டியது என்பதோடு கதை முடிந்தது. ஆனால், இதையே வெளியில் வேறு நிறுவனங்களிடம், அதுவும் தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களில், தன் மகன் அமர் தொடர்புடைய நிறுவனங்களில் வாங்கினால்... அவருக்கு லம்ப்பாக கமிஷன் கிடைக்கும். அதனால், அதற்கொரு திட்டத்தை தயாரித்தார். அதன்படி எல்.இ.டி பல்புகளை ஓஸ்ராம் என்ற நிறுவனத்தில் வாங்கினார். விலை என்னவென்றால், மத்திய அரசு கொடுக்கும் விலையோடு ஒப்பிட்டால் 5 மடங்கு அதிக விலை. இப்படி 35 லட்சம் எல்.இ.டி பல்புகளை நத்தம் விஸ்வநாதன் வாங்கும் வேலையைக் கச்சிதமாக முடித்தார். இதில் 3 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
வெறுத்துப்போன மத்திய அரசின் இ.இ.எஸ்.எல்
மத்திய அரசு இந்த எல்.இ.டி பல்புகளை பொருத்தும் வேலையை அதன் சார்பு மின்சக்தி நிறுவனமான இ.இ.எஸ்.எல் நிறுவனத்திடம்தான் ஒப்படைத்திருந்தது. அந்த நிறுவனம் பல முறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதி எழுதி ஒய்ந்துவிட்டது. அந்த நேரத்தில்தான், தனியாக தமிழகம் ஒரு டெண்டர் விட்டு,  அவர்கள் வேறு இடத்தில் வாங்கிய விபரம் மத்திய அரசுக்கு தெரியவந்தது. உடனே, களத்தில் இறங்கிய இ.இ.எஸ்.எல் நிறுவனம், என்னதான் நடக்கிறது தமிழகத்தில் என்பதை அறிய,  மத்திய அரசின் உதவியை நாடியது. அங்குள்ள ஒட்டுமொத்த விசாரணை அமைப்புகளும் களத்தில் இறங்கின.

விசாரணையில், ஏகப்பட்ட விஷயங்கள் அகப்பட்டன. நத்தம் விஸ்வநாதனுக்கு விரித்த வலையில் நால்வர் அணியும் சிக்கிக் கொண்டது. ஒட்டுமொத்தமாக ரிப்போர்ட் எடுத்த மத்திய அரசு, நேரடியாக ஜெயலலிதாவிடமே நிலையை விளக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால்... நாங்கள் களத்தில் இறங்க வேண்டி வரும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது. இதையடுத்து, நால்வர் அணியின் விவகாரங்களை தோண்ட ஆரம்பித்தார் ஜெயலலிதா.

விவகாரங்கள் தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருந்ததில் அப்செட் ஆனவர், தன்னுடைய நிறுவனங்களைப் பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் டாக்டர் வெங்கடேஷ் சிவக்குமாரை களத்தில் இறக்கினார். அவர்கள் இருவர் தலைமையிலான அணிதான்,  தற்போது நால்வர் அணியை தனியாக வைத்து, அவர்களிடம் இருக்கும் கோடிகளை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. வேலை இன்னும் முடியவில்லை. அதனால்தான், கூட்டணி பேரம், வேட்பாளர் விருப்ப மனு, வேட்பாளர் நேர்காணல், தொகுதிப் பங்கீடு என்று மற்ற கட்சிகள் பிஸியாக இருக்கும் நேரத்தில், அ.தி.மு.க நால்வர் அணியை வைத்து ரகசிய ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.

நத்தம் விஸ்வநாதனும், ஓஸ்ராம் நிறுவனமும்

ஓஸ்ராம் என்ற நிறுவனம் ஜெர்மனி நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இந்தியாவுக்கான இதன் அலுவலகம் டெல்லியில் உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் பல்புகள் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இ.சி.இ என்ற நிறுவனத்தை வாங்க முயன்றபோது,  அதற்கான ஏற்பாடுகளை பின்னணியில் இருந்து செய்து கொடுத்தவர் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்தான். அப்போது இருந்தே நத்தம் விஸ்வநாதன் இந்த நிறுவனத்தோடு நல்ல தொடர்பில் உள்ளார். அதுபோல் நத்தம் விஸ்வநாதனின் மகன், ஜெர்மனியில் உள்ள ஓஸ்ராம் நிறுவன புராஜெக்ட்களில் வேலை பார்த்தவர். அதனால், இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
மத்திய அரசின் அதிருப்தி...

இ.இ.எஸ்.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சவுரப் குமார்,  தமிழக அரசின் நடைமுறை பற்றி பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது, "விசாகப்பட்டினத்தில் 94 ஆயிரம் தெருவிளக்குகளை, 70 கோடி ரூபாய் செலவில் எல்.ஈ.டி விளக்குகளாக மாற்றினோம். அதன்மூலம் அவர்களுக்கு பாரமரிப்பு செலவு, மின் கட்டணம் ஆகியவை ஆண்டுக்கு 31 கோடியில் இருந்து 10 கோடியாக குறைந்துள்ளது. அவர்கள் ஆண்டுக்கு 18 கோடி ரூபாயை,  7 ஆண்டுகளுக்கு எங்களுக்கு செலுத்துகிறார்கள்.

இதுபற்றி, சென்னை மாநகராட்சி மட்டுமின்றி தமிழக அரசுக்கும் கடிதம் எழுதினோம். அவர்கள் முடிவுக்காக காத்திருந்தோம். ஆனால், அதற்கிடையில் சென்னை மாநகராட்சி வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்துவிட்டதாக அறிந்தோம். ஒப்பந்த புள்ளியில் உள்ள விவரம் தெரியாமல் அது குறித்து விமர்சிக்க முடியாது. எங்களை பொருத்த வரை எல்.ஈ.டி விளக்குகளுக்கு ஒரு வாட்டுக்கு 85 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளோம். 250 வாட்ஸ் சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்ட இடத்தில்,  110 வாட்ஸ் எல்.ஈ.டி விளக்குள் பொருத்தப்படும். நாங்கள் நிர்ணயிக்கும் விலை என்பது பராமரிப்பு செலவையும், 7 ஆண்டுக்கான மாற்றித்தரும் உத்தரவாதத்தையும் உள்ளடக்கியது. இப்படி விளக்குகளை மாற்றுவதின் மூலம் 50 சதவீதம் மின்சாரம் மிச்சமாகும். பராமரிப்பு செலவும் குறையும்" என்றார்.

இந்தியாவில் எல்.டி.பல்புகள்

இந்தியாவை பொறுத்தமட்டில் ஆந்திராவில் 2.8 லட்சம், ராஜஸ்தானில் 1.6 லட்சம், டெல்லியில் 1.2 லட்சம் திரிபுராவில் 34 ஆயிரம், உத்திரப்பிரதேசத்தில் 17 ஆயிரத்து 220 எல்.ஈ.டி விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. தெற்கு டெல்லி, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஜெய்பூர் உட்பட பல்வேறு மாநகராட்சிகளில் எல்.ஈ.டி தெருவிளக்குகளை பொருத்தி இ.இ.எஸ்.எல் பாராமரித்து வருகிறது. தெரு விளக்குகளை பராமரிக்கும் பணியிலும், பழுதடைந்த விளக்குகளை கண்டறிவதிலும் செல்போனில் பயன்படுத்தப்படும் செயற்கைகோள் தொழில்நுட்பங்களான ஜி.எஸ்.எம், ஜி.பி.ஆர்.எஸ் பயன்படுத்தப்படுகிறது.

மின்திருட்டு, விளக்குகள் எரியாமல் இருப்பது, மின் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்கப்படும். குறைந்த மின்சாரம் பயன்படுத்தப்படும். ஆந்திரா, ராஜஸ்தான், திரிபுரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் 6 லட்சத்திற்கும் அதிகமான எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதப் பணிகள் முடிந்துவிட்டன. இதற்கு இ.இ.எஸ்.எல் நிறுவனமே முதலீடு செய்கிறது. எல்.ஈ.டி விளக்குகளை பொருத்துவதால் மாநில அரசுக்கு சேமிப்பாகும் தொகையில் இருந்து, தவணை முறையில் அந்த நிறுவனம் முதலீட்டை திரும்பப் பெறுகிறது. ஜோ.ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக