புதன், 16 மார்ச், 2016

தேமுதிக அலுவலத்துக்கு பூட்டு ? அரசியலே வேண்டாம் டெபாசிட் துட்டை தந்திடுங்க...( ஆளுக்கு 3 or 4 கோடிகள்)

விகடன்.com :சீட்டுக்கு பணம் கேட்கப்பட்டதா? கேப்டன் அலுவலகத்திற்கு பூட்டு!
தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று ஓப்பனாக அறிவித்து அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். கொஞ்சமாக அதில் ஒரு மாற்றம் போல்,  'என்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தும் கட்சிகளை வரவேற்கிறேன்' என்றார். விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் பல ரசவாதங்களை ஏற்படுத்தி வைத்துள்ளது. பின்வாசல் வழி:
 தேமுதிகவின் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலரே கேப்டனின் இந்த முடிவால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், '' தேமுதிக அலுவலகத்துக்கு பின் வாசல் வழியாக வந்து பின் வாசல்  வழியாகவே விஜயகாந்த் போகிறார்'' என்ற குற்றச்சாட்டையும் ஒரு தரப்பு முன்வைக்கிறது.
மெயின் கேட் என்னாயிற்று? என்ற கேள்விக்கு, ''அங்குதான் கனமான சங்கிலிப் பூட்டுப் போட்டு விட்டார்களே'' என்ற பதிலை தருகின்றனர். 
''கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன், தேமுதிகவில் என்ன பஞ்சாயத்து?'' என்று பல மட்டங்களில் விசாரிக்கத் தொடங்கினோம்...
மாற்றம் ஏன்?

முதலில் கிடைத்தது நேர்காணலில் நடந்த விஷயங்கள்.
"கேப்டனைப் பொறுத்தவரையில் நேர்காணலின் போது, பொதுவாகக் கேட்ட கேள்வி,  'நாம் யாருடன் கூட்டணி வைக்கலாம்?' என்பதே... திமுகவுடன் போகலாம் என்று வேட்பாளர்களில் சிலர் சொல்ல, 'அங்கே பெரியவரைத்தவிர யாரையும் நம்ப முடியாது... உள்ளே வரவெச்சு கிடா வெட்டிருவாங்க. இரண்டாவது விஷயம் என்னன்னா, 2ஜி கேஸ், மாறன் பிரதர்ஸ் கேஸ்னு அங்கே எல்லாமே ஸ்ட்ராங்காக ஓடிக்கிட்டிருக்கு. ஜூன், ஜூலையில் கேசு முடிஞ்சுடும். நாம திமுக கூட போனோம்னா அந்த கேசுங்களை ஸ்பீடு பண்ணவும் வாய்ப்பிருக்கு, தேவையில்லாம நாமளே போய் உள்ளே மாட்டிக்கிட்ட கதையாகிடும். மூணாவது என்னன்னா, நாம கேட்ட துணை முதல்வர், ஐந்து மேயர் மற்ற போக்குவரத்துகள்(?!) எதற்குமே அவங்க சம்மதிக்கலை. நாம கூட இல்லைன்னா, அந்தம்மா மறுபடியும் ஈசியா சி.எம்.ஆகிடும்கற வரைக்கும் அவங்களுக்கு நல்லாவேத் தெரியுது. ஆனா அதை ஒத்துக்கறதுல ஈகோ பார்க்கறாங்க. அதனால திமுக நம்மளோடு வர்றதுக்கோ, நாம அவங்ககிட்டே போறதுக்கோ வாய்ப்பு ரொம்பவும் குறைவு.  அதேபோல் நாம கூட்டணிக்காக அந்தம்மாக்கிட்டே போவதுங்கற விஷயத்தை நினைச்சுப் பார்க்கவே முடியலை. அதில் யாருக்குமே உடன்பாடில்லை.

வைகோ, ஜி.ஆர்., முத்தரசன், திருமாவோட  மக்கள் நலக் கூட்டணிக்கு காங்கிரசும் , பிஜேபியும் வராது. இவங்க எல்லோருக்குமாக சேர்த்தே மொத்தமா பத்து பர்சன்ட் ஓட்டு இல்லே. நாம இவங்களோடு போய்ச் சேர்ந்தால் மொத்தம் இருபது பர்சன்ட் தேறும். அப்பவும் அதிமுக ஈசியா ஆட்சிக்கு வந்திடும். பிஜேபி கூட போனா, ரிசல்ட்டை சொல்லவே வேணாம். இதுதான் இருக்கிற நிலைமை. இப்ப சொல்லுங்க நாம எப்படிப் போட்டியிடலாம்? நாம தனியாக நிற்கிறோம்னு அறிவித்து விட்டால், திமுக, அதிமுக வுக்கு போக விரும்பாத அத்தனை கட்சிகளும் வேறு வழியில்லாமல் நம்முடைய தலைமையை ஏற்கத்தான் ஓடிவரும். இப்போது சொல்லுங்கள் நான் கூட்டணியில் போகவா,  தனியாக நிற்கவா? ' -இப்படித்தான் கேப்டன் நேர்காணல் செய்தார்... " என்கின்றனர்.

பூட்டுக்குப் பின்னணி

இது போக இன்னொரு பாணி நேர்காணல்தான், தேமுதிக அலுவலகத்துக்கு பூட்டு என்று பரவும் தகவலுக்கான பின்னணி. அது குறித்து விசாரித்ததில்,  " நேர்காணலில் கேப்டன் கேட்ட முக்கியமான கேள்வி, 'உங்களால் இந்த தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய முடியும்?' என்பதும் அடங்கும். 'தலைவரே, நான் மூணு 'சி' வரைக்கும் சமாளிப்பேன் ' என்ற பலரிடம், அப்படியென்றால், 'முதலில் அதைக் கொடு' என்று கேப்டன் கேட்டு வாங்கிக் கொண்டு விட்டார். இப்படி பெட்டி, பெட்டியாகக் கொடுத்தவர்கள்தான் இப்போது, எந்த வழியும் தெரியாமல் கொடுத்த பணத்தை எப்படி வாங்குவது என்று முழிபிதுங்கி நிற்கிறார்கள். கேப்டனோ, 'உங்களுக்கு சீட் உறுதி. அப்புறம் ஏன் குழப்பம்? போய் தொகுதியில வேலையை ஆரம்பியுங்க...' என்று மிக சாதாரணமாக அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு சிலர் கேப்டனிடமே, 'எங்களுக்கு எந்த சீட்டும் வேண்டாம், கொடுத்ததை திருப்பிக் கொடுத்து விடுங்கள்' என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். தேமுதிகவின் தலைமை நிலையமான கோயம்பேடு அலுவலகத்துக்கே அவர்கள் நேரில் வந்து பிரச்னை செய்கிறார்கள். அதனால்தான் கேப்டன் முன்பக்க வழியாக வருவதைத் தவிர்த்து பின்பக்கமாகவே வந்து, போகிறார். முன்பக்க கேட் வாசலில் பெரிய சங்கிலிப்பூட்டும் போட்டு விட்டனர்" என்று நீண்ட விளக்கம் அளிக்கின்றனர்.

அலர்ஜியும், வதந்தியும்

" கேப்டனுக்கு ஆபீஸ் வரும்போது டிராபிக் இருந்து விட்டால் அலர்ஜியாகி விடும். அதனால், பின்பக்கமாக நெரிசலே இல்லாத ரூட்டில் உள்ளே வந்து விட்டு,  போகும்போது முன்பக்கமாகப் போய்விடுவார். எப்போதா ஒருமுறைதான் அவர் முன் கேட் வழியாக வந்த ஞாபகம் இருக்கிறது. வெளியாட்கள் உள்ளே வந்து விடக் கூடாதே என்றும், கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்த வருகிற தலைவர்களை மடக்கி அடிக்கடி மைக்கை நீட்டுகிற மீடியாக்காரர்களை தடுக்கவும்தான் முன்பக்க 'கேட்' டில் பூட்டு போட்டுள்ளனர். அது புதிதாய் பார்க்கிறவர்களுக்கு அதிசயமாக தெரிகிறது. எங்களுக்கு அது புது விஷயம் அல்ல. மேலும், கேப்டன் யாரிடமும் சீட் தருவதாக ஒரு ரூபாய் கூட மோசடியாக வாங்கியது கிடையாது. இது அவருடைய மரியாதையைக் கெடுக்க திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி" என்கின்றனர். ஆனால், அவர்களே, "தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட கட்சியினர், கேப்டனின் இந்த தனித்துப் போட்டி முடிவால் தலைமை நிலையம்  வருவதையே நிறுத்திக் கொண்டு விட்டனர்... அது மட்டும்தான் உண்மை" என்கின்றனர்...

முதல்வர் நாற்காலி

கேப்டனின் 'முதல்வர் நாற்காலி' தலைமையை ஏற்றுக் கொண்டு புதிய கூட்டணியை அமைக்க, மக்கள் நலக் கூட்டணி முதற்கொண்டு பல கட்சிகள் கேப்டன் தரப்பு பிரதிநிதிகளை  ரகசியமாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன என்ற தகவலும் வலுவாய் வரத்தொடங்கி உள்ளன.  "எதுவாக இருந்தாலும் வெளியிலேயே பேசி முடிவு செய்து கொண்டு விடுங்கள்... தேமுதிக அலுவலகத்துக்கு  கூட்டணிக் கட்சியினர் வருவதென்றால்  அது, கூட்டணி அக்ரிமெண்ட்டில் கையெழுத்தைப் போட்டுவிட்டு, அப்படியே பிரஸ் மீட் கொடுப்பதற்காகத்தான் இருக்க வேண்டும்" என்பது விஜயகாந்தின் கட்டளை என்பதால், எல்லாவற்றுக்கும் கணக்கு-வழக்கு பார்க்கிற கட்சியினர் கூட தினமும் காஸ்ட்லி ஹோட்டல்களிலும், பண்ணை வீடுகளிலும் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்களாம்.

.. சீக்கிரம் பேசி முடிங்கப்பா...!

-ந.பா.சேதுராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக