ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

மோடி Gang : ஹிட்லரின் நாஜிகளைபோலவே தேசபக்தி...தேசியக்கொடி...உணர்ச்சி...நெருப்பு பேச்சுகள்


ஓவியம்: புனித் கவுர் பர்ணாலாtamil.thehindu.com:ஓவியம்: புனித் கவுர் பர்ணாலா ஊடக-தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு அத்தியாயம் நிகழ்ந்திருக்கிறது. நாட்டு நடப்பு, இதழியல் போன்றவற்றில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய நிகழ்வு இது.
இந்த நிகழ்வைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு பின்னணியை முதலில் பார்ப்போம். பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் ஒரு தேசத்தின் நான்காவது தூணாக (Fourth estate) கருதப்படுகின்றன. ஒரு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அந்த நாட்டின் மக்களுக்கு அறிவிப்பவை இந்த ஊடகங்கள்தான். இது மாபெரும் ஜனநாயகக் கடமை. ஆனால், இந்தக் கடமையின் முக்கியத்துவத்தை ஊடகத்தினர் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பது பெரும் கேள்வியே. உண்மையைக் காட்ட வேண்டியது மட்டுமே ஊடகங்களின் பணி. தீர்ப்பு எழுதுவது அல்ல.
அதற்கு நீதிமன்றம் இருக்கிறது. ஆகவே, நடுநிலை என்பது ஊடகத்தின் உயிர்நாடி. ஆனால், சமீப காலமாக ஊடக விவாதங்கள், அந்த நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் (அர்னாப் கோஸ்வாமி போன்றவர்கள்) எந்த அளவுக்குக் கூச்சலை முன்னெடுத்து நடுநிலையைப் படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
சமீபத்தில் ஜே.என்.யூ.வின் கன்னையா குமார் பேசியதாக ஒரு வீடியோவை சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. அந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு கன்னையாவை தேசத்துரோகி என்று உச்சபட்சக் குரலில் குற்றம் சாட்டின. இதில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் முன்னிலையில் நின்றார். எந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு ‘தேசத்துரோகி’ என்று கன்னையா குமார் மீது குற்றம் சாட்டப்பட்டதோ அந்த வீடியோ போலியான வீடியோ என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் அதற்குள், தேசத்துரோகி என்ற முத்திரை சுமத்தப்பட்டு கன்னையா குமார் தாக்கப்பட்டார். அவரது நண்பர் காலீதின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. முக்கியமாக, காலீதின் சகோதரியைப் பாலியல் வல்லுறவு செய்துவிடுவோம் என்று ‘தேசபக்தர்கள்’ சிலர் மிரட்டல் விடுத்தனர். இந்த விவகாரத்தில் நடுநிலையாக நடந்துகொண்ட ஊடகங் கள்மீதும் ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத், ரவீஷ், சித்தார்த் வரதராஜன் போன்றோர்மீதும் ‘தேசத்துரோகிகள்’ என்ற முத்திரையைக் குத்திவிட்டார்கள் இணைய உலகின் லட்சக்கணக்கான ‘தேசபக்தர்கள்’!
இவ்வளவு எதிர்மறை சக்தியாக ஊடகங்கள் உருவாகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். ஊடகங்கள் எவ்வளவு ஆக்கபூர்வமான சக்தி என்பதை வரலாறுக்கு எடுத்துக் காட்டியது நம் சுதந்திரப் போராட்டம். அன்று சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட பத்திரிகைகளை முடக்கியது ஆங்கிலேய அரசு. பாரதியார் தொடங்கிய பத்திரிகைகளெல்லாம் தொடர்ந்து தடைசெய்யப்பட்டு, அவர் தமிழகத்தை விட்டுத் துரத்தப்பட்டு பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்த வரலாற்றை நாம் அறிவோம். சோற்றுக்கே திண்டாடிய நிலையிலும் பத்திரிகை தொடங்குவதைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தார். தன் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பத்திரிகை தொடங்குவதற்காக ‘சொத்தை விற்றேனும்’ பணம் கொண்டுவரச் சொன்னார். காந்தி, தனது ‘யங் இந்தியா’ (1919-1932) பத்திரிகை மூலமாகவும், அது முடக்கப்பட்ட பின் ‘ஹரிஜன்’ (1933-1948) பத்திரிகை மூலமாகவும் சுதந்திரப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை தொடர்பான தன் செயல்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்றார். அம்பேத்கரும் அப்படித்தான். சாதியக் கொடுமைக்கு எதிரான அவரது போராட்டத்தில், ‘மூக் நாயக்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, தனது குரலை அந்தப் பத்திரிகையில் கடுமையாக வெளிப்படுத்தினார். இப்படி, முன்னோடி பத்திரிகையாளர்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
தற்காலத்திலும் திறமையான ஊடகவியலாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், நேர்மையான ஊடகவியலாளர்கள் குறைவு என்பது வருந்தத்தக்க செய்திதான். ஊடகத்தின் போக்கில் எதிர்மறைத் தன்மை ஊடுருவியிருக்கிறது. இந்த நிலையில் ஊடகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய சுயவிமர்சனத்தைச் செய்துகொள்வதும், ஆத்ம பரிசோதனையில் ஈடுபடுவதும் அவசியமல்லவா! அப்படித்தான் செய்திருக்கிறார் என்.டி.டி.வி-யின் ரவீஷ் குமார். அவர் வேறு யாரையும் நோக்கிக் கைநீட்டவில்லை. தன்னைத் தானே குற்றம் சாட்டிக்கொள்கிறார்! அபூர்வமல்லவா இது!
ஊடகங்கள் அடைந்த தோல்வியை சுய தோல்வியின் ஒரு வடிவமாகவும் கருதி என்.டி.டி.வி.யில் ரவீஷ் குமார் வழக்கமான 'பிரைம் டைம்' நிகழ்ச்சியில் ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் சுருக்கமாக அவருடைய பேச்சு வருகிறது.
ரவீஷ் குமாரின் உரையை அடுத்துத் திரையில் இருள் பரவுகிறது. எந்தக் காட்சிகளும் இல்லாமல் 41 நிமிடங்களுக்குக் கருப்புத் திரைதான், பின்னணியில் வெவ்வெறு குரல்கள், ஊடகங்களில் சமீப காலமாக இடப்பட்ட கூக்குரல்கள், கூச்சல்கள், செய்தியாளர்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்று ஒரே சத்தம். இறுதியில், சுதந்திரம் அடைந்தபோது நேரு ஆற்றிய உரையின் சிறு துணுக்கும் ஒலிபரப்பப்படுகிறது. இப்படியாக 41 நிமிடமும் அசத்தியிருக்கிறார்கள்.
‘காண்பது நம்மை ஏமாற்றக்கூடும்’ என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் ஒரு வாசகம் இருக்கிறது. அதுபோலவே, காட்சியை நீக்கி ஒலியைக் கேட்கும்போது நமக்குப் பல உண்மைகள் புலப்படுகின்றன. நாம் எந்த அளவுக்குக் காட்சிகளால் வழிநடத்தப்படுகிறோம்! கூடவே, அப்படிப்பட்ட காட்சிகளுடன் கூச்சல் சேர்ந்துகொள்ளும்போது பார்வையாளர்களான நம் அனைவருக்கும் எப்பேர்ப்பட்ட ஆவேச மனநிலை வந்துவிடுகிறது! ஊடகங்கள் உருவாக்குவதை, ஊடகங்கள் சொல்வதை நம்பி நாமும் தலையாட்ட ஆரம்பிக்கிறோம். செயல்திட்டம் ஊடகங்களுடையதாக இருக்க, நாமெல்லாம் பொம்மலாட்ட பொம்மைகளாகவும் ஆகியிருக்கிறோம் என்பதையெல்லாம் ரவீஷ் குமார் இந்த நிகழ்ச்சியின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.
‘இந்த நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்தமாக ஐந்து ரூபாய்கூட செலவாகியிருக்காது. நாட்டில் தற்போது ஊடகங்களால் உருவாகும் கூச்சலைக் கேட்டு ஏற்பட்ட குற்றவுணர்ச்சியின் மூலம் இந்த யோசனை எனக்கு உருவானது. மதியம் 1 மணிக்கு உருவான இந்த யோசனையை அன்று இரவே செயல்வடிவத்துக்குக் கொண்டு வந்துவிட்டோம்’ என்கிறார் ரவீஷ். பிஹாரில் பிற்படுத்தப்பட்ட பிரதேசத்திலிருந்து டெல்லி வந்த ரவீஷ், தொலைக்காட்சிகளின் வழக்கமான கூச்சல் போக்கைப் பின்பற்றாமல் அறிவுபூர்வமாக விஷயங்களைக் கையாளக்கூடியவர். தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செய்துவரும் புதுமைகளால் ஊடகங்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு மத்தியிலும் பெரும் செல்வாக்கு பெற்ற ரவீஷ், அதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை வழங்கியிருக்கிறார்.
ஊடகத்தில் இதையும் செய்யலாம் என்று ரவீஷ் எல்லோருக்கும் முன்னுதாரணம் காட்டியிருக்கிறார். மற்ற ஊடகவியலாளர்களும் இதைப் பின்பற்றுவார்களா?
இந்தியில் ரவீஷ் குமார் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது:
“உங்கள் அனைவருக்குமே தெரியும், நமது தொலைக்காட்சி நோயுற்றிருக்கிறது. ஒட்டுமொத்த தொலைக்காட்சி உலகத்துக்குமே காசநோய் வந்திருக்கிறது. அடுத்தவர்களை நோயாளிகள் என்று அழைத்துவிட்டு என்னை மருத்துவர் என்று நான் அழைத்துக்கொள்ளவில்லை. நானும் நோயாளிதான்.
முதலில் நாங்கள் நோயுற்றோம், இப்போது நீங்கள் எல்லோரும் நோயாளிகளாகிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களை அடித்து நொறுக்கப்போவதாகவும், உயிரோடு கொளுத்தப்போவதாகவும் குறைந்தபட்சம் உங்களில் ஒருவராவது தினமும் கடிதம் அனுப்புகிறீர்கள்.
இந்தக் கடிதங்களில் ஊறியிருக்கும் விஷம் உண்மையில் எங்களிடமிருந்து தோன்றியதுதானே?
நான் மருத்துவர் இல்லை. நானும் நோயாளிதான். எனது தொலைக்காட்சியும் நோயுற்றிருக்கிறது.
விவாதத்தின் பேரில், ஒவ்வொரு நாளும் உருவாக்கப்படும் இரைச்சலும் கூச்சலும் உங்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருகின்றனவா அல்லது இருட்டை நோக்கி உங்களைத் தள்ளுகின்றனவா என்று நீங்களே திகைத்துப்போயிருப்பீர்கள்!
ஒரு விஷயத்துக்கு யார் பொறுப்பு என்பதை விவாதத்தின் மூலம் தீர்மானிக்க விரும்பினோம், ஆனால் பொறுப்பாக்குதல் என்ற பேரில் இப்போது ஒவ்வொருவரையும் நோக்கிக் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறோம். மற்ற எல்லோரையும் குறிவைக்கிறோம். பொதுப்பிரச்சினைகளில் தெளிவு ஏற்படுத்துவதற்காக விவாதங்களை நாங்கள் தொடங்கினோம். ஆனால், இந்த விவாதங்களெல்லாம் பொதுமக்களின் குரலை முற்றிலும் அழித்தொழிக்க முயன்று கொண்டிருக்கின்றன. மக்களிடையே நிலவும் பலதரப்பட்ட கருத்துகளைத் தொலைக்காட்சி விவாதங்கள் கொன்றுகொண்டிருக்கின்றன. ஒரே ஒரு குரலை, ஒரே ஒரு கருத்தை மட்டுமே நாங்கள் திணிக்க முயன்றுகொண்டிருக்கிறோம். தங்கள் கருத்துச் சுதந்திரத்துக்கென்று எல்லையே விதித்துக்கொள்ளாத தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், உங்கள் சுதந்திரத்தின் எல்லையை உங்களுக்குப் பதிலாகத் தீர்மானிக்க முயல்கிறார்கள்.
சில சமயங்களில் நாங்கள் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டே ஆக வேண்டும்: நீங்கள் எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீகள், உங்களுக்கு நாங்கள் எதைக் காட்டிக்கொண்டிருக்கிறோம்? நாங்கள் உங்களுக்குக் காட்டுவதையே நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதாக நீங்கள் எங்களுக்குச் சொல்வீர்கள், நீங்கள் அதிகம் பார்ப்பதைத்தான் நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம் என்று நாங்கள் சொல்வோம். இந்த விளையாட்டில் முதலாம் இடத்தில் இருப்போரும் உண்டு, என்னைப் போல பத்தாவது இடத்தில், இருப்போரும் உண்டு. ஏதோ ஒருவர் உச்சியிலும், ஏதோ ஒருவர் தோல்வியின் படுகுழியிலும் இருப்பார்கள்.
டி.ஆர்.பி.தான் நமது இலக்கு என்றால், நீங்கள் எல்லோரும் ஏன் எங்கள் சக பயணிகளாக இருக்கிறீர்கள்? உங்கள் இலக்கும் டி.ஆர்.பி.தானா? ஆகவே, தொலைக்காட்சி செய்திகளின் இருண்ட உலகத்துக்குள் உங்களை நாங்கள் அழைத்துச்செல்ல விரும்புகிறோம். அங்கே இரைச்சலை நீங்கள் கேட்பீர்கள், அதைப் புரிந்துகொள்ளவும் செய்வீர்கள். எங்களைப் போன்ற செய்தி வழங்குவோர் தினமும் உருவாக்கும் நம்பிக்கை, பயம் ஆகியவற்றை இப்போது அனுபவித்துப்பாருங்கள். இந்த ஓலங்களை நீங்கள் அடையாளம் காணும் விதமாக, அவற்றை நீங்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக, இப்போது இருட்டை நோக்கி உங்களை அழைத்துச்செல்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக