திங்கள், 29 பிப்ரவரி, 2016

கனிமொழி; facebook கில் கலைஞர் மீதான மோசமான கமெண்ட்டுகளை நீக்கவேணாம் என்று கேட்டுகொண்டார்

சென்னை: தனது முகநுாலில் வந்த கீழ்த்தரமான விமர்சனங்களை நீக்காமல் அப்படியே விட்டுவிடுமாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்ததாக கனிமொழி கூறினார்.
ஆட்சி மாற்றத்திற்கு சமூக வலைத்தளங்கள் பங்களிப்பு என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி,  சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி, கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “தமிழக மக்கள் இன்று சுயமரியாதையோடு வாழ பெரியாரும் திராவிட இயக்கமும்தான் காரணம். ஆனால் திராவிட கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்துவிட்டது என்று சமூக வலைத் தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன. இது தி.மு.க வை அழிக்க நினைப்பவர்கள் செய்யும் பிரச்சாரம். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. கூகுள் செய்து பார்த்தாலே இது தெரிந்து விடும்.


ஆனால் இன்று அதிமுக ஆட்சியில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்றைக்கு தமிழகம் பீகாரை விட மோசமான மாநிலமாகிவிட்டது. இதுபோன்ற உண்மைகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

மழை வந்தாலும், வெயில் வந்தாலும் தி.மு.க மீதுதான் பழி சுமத்தப்படுகின்றது. அதிமுக செய்யும் தவறுகளில் நம்மையும் இழுத்து விடுகிறார்கள். அதில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். இட ஒதுக்கீட்டை  தி.மு.க கொண்டு வந்தது. ஒடுக்கப்பட்டவர்களும் இன்று உயர் பதவியில் இருக்க காரணம் திமுகதான் என கடந்த கால நிகழ்வுகளை வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டும். பெண்கள் வாக்குகளை குறி வைத்துதான் மதுவிலக்கு கொள்கையை தி.மு.க அறிவித்துள்ளது என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். பெண்களுக்கு சமமாக ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் வாக்குகளை விட்டு விடலாமா?
இன்று குடும்பங்கள் சீரழியும் நிலை இந்த மதுவால் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. அதனால்தான் கலைஞர் மதுவிலக்கை அறிவித்துள்ளார். மதுவிலக்கை அமல்படுத்தாததற்கு   காரணம் தமிழகத்திற்கு நிதிவருவாய் குறைந்துவிடும் என்பதல்ல. மதுபான நிறுவனமான மிடாசுக்கு வருமானம் இல்லாமல் போய் விடும் என்பதற்காக.

ஜெயலலிதா நல்லவர், அவரைச் சுற்றியுள்ளவர்கள்தான் கெட்டவர்கள் என்றும்,  'அம்மா' கற்பூரம் போன்றவர் என்றும் பேசுகிறார்கள். ஜெயலலிதா நனைந்து போன கற்பூரம். அதிகாரம் அனைத்தும் ஜெயலலிதா கையில்தான் உள்ளது. அமைச்சர்கள் கெட்டவர்கள், சசிகலா கெட்டவர், ஆனால் ஜெயலலிதா மட்டும் நல்லவர் என்ற பிரச்சாரத்தை உடைத்து மக்களுக்கு உண்மையை புரிய வைக்க வேண்டும்.

தி.மு.க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னை மாற்றி கட்டமைத்து வந்துள்ளது. முதலில் நாடகங்கள், பின்னர் திரைப்படங்கள், பத்திரிக்கைகள் மூலமாக மக்களிடம் தொடர்பு கொண்டோம். தற்போது இணையதளம் மூலமாக நமது பணியை செய்து வருகிறோம்.
தலைவர் முகநூலில் பக்கம் தொடங்கிய பொது பலபேர் அதில் பதிவுகள் செய்தார்கள். சிலர் தகாத வார்த்தைகளை கீழ்த்தரமான பதிவுகளை செய்தார்கள். அப்போது அந்த பதிவுகளை நீக்கி விடலாமா என்று அவரிடம் கேட்டபோது அதனை முழுமையாக மறுத்து விட்டார். 'விமர்சனங்கள் வந்தால் நீக்கவேண்டாம். அது அப்படியே இருக்கட்டும்' என்று கூறிய பண்புடையவர் கருணாநிதி" என்றார்.

நிகழ்ச்சியில் பல மாவட்டங்களில் இருந்து வலைதள பயனாளிகள் கலந்து கொண்டனர். கனிமொழி பேசிய பின்னர் சமூக வலைதளங்களில் தி.மு.க எவ்வாறு செயல்பட  வேண்டும் என்று கலந்துரையாடல் நடைபெற்றது. வெளி நாடுகளில் வேலை செய்யும் தி.மு.க தொண்டர்களிடம் ஸ்கைப் மூலமாக கனிமொழி பேசினார்.

- எஸ். கே பிரேம் குமார்
படங்கள்; சர்வின்
(மாணவப் பத்திரிக்கையாளர்)  விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக