சனி, 6 பிப்ரவரி, 2016

அதிமுகவும் திமுகவும் ஒன்று என்பவர்கள் அதிமுகவின் கள்ள காதலர்கள்.....

subavee.com :தமிழக அரசியல் அரங்கில், தி.மு.க.வை எதிர்ப்பதற்கு, இப்போது காரணம்?
ஒரு புதிய உத்தி புறப்பட்டிருக்கிறது. தி.மு.க.வையோ, கலைஞரையோ எதிர்க்கும்போது நேரடியாக எதிர்க்கின்றனர். அ.தி.மு.க.வையோ , ஜெயலலிதாவையோ எதிர்க்கும்போது, இரண்டு திராவிடக் கட்சிகளுமே இப்படித்தான் என்று, தி.மு.க.வையும் சேர்த்தே தாக்குகின்றனர். அதன்மூலம், அ.தி.மு.க.வின் தவறுகளை நியாயப்படுத்துகின்றனர்.தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் ஒன்றுதான் என்று திரும்பத் திரும்பப் பல கட்சிகளும், சில தமிழ்த் தேசியக் குழுக்களும் கூறுகின்றன. அவை இரண்டும் ஒன்றல்ல என்பதை இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அறிவார்கள். அரசியல் அறிந்த அனைவரும் அறிவார்கள். ஏன், இந்தக் குற்றச்சாற்றைக் கூறும் பலரே அறிவார்கள். எனினும் இந்தப் பல்லவியைத் தொடர்ந்து அவர்கள் பாடுவதற்கு என்ன


அவர்களின் நோக்கம், தி.மு.க.வை எதிர்ப்பது மட்டும்தான். ஆனால் அப்படிச் செய்தால் அது ஒரு பக்கச் சார்பு ஆகிவிடும். நடுநிலை வேடத்துக்கு அது பொருந்தி வராது. எனவே இரண்டையும் தாக்குவது போல ஒரு தோற்றத்தைக் காட்டிக்கொண்டு, தி.மு.க.வைத் தாக்கி அழிப்பதே அவர்களின் முழுமையான நோக்கம். அவர்கள் அனைவரும் ஒப்புக்கு அ.தி.மு.க.வைத் தாக்குகின்றனர். உண்மையில் தி.மு.க.வை மட்டுமே அழிக்க நினைக்கின்றனர். 

பார்ப்பனர்கள். பார்ப்பன ஊடகங்கள், பார்ப்பன அடிவருடிகள் ஆகியோர் இந்த வேலையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்களுக்குத் தி.மு.க.வின் மீது அப்படி என்ன கோபம்? தி.மு.க. என்பது கடவுள் மறுப்புக் கட்சியோ, பார்ப்பன எதிர்ப்புக் கட்சியோ இல்லை. தி.மு.க.வில், தலைவர் கலைஞர்,  இனமானப் பேராசிரியர் உள்படப் பகுத்தறிவாளர்கள் பலர் உள்ளனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் பெரும் அளவில் இன்று உள்ளனர். அதே போல, பார்ப்பன எதிர்ப்புச்  செய்திகள் தி.மு.க. மேடைகளில் பெரிதாக இடம்பெறுவதுமில்லை. எனினும் பார்ப்பனர்கள் தி.மு.க.வைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். 

தி.மு.க. பார்ப்பனர் எதிர்ப்புக் கட்சியில்லை. ஆனால், பார்ப்பனர்களால் எதிர்க்கப்படும் கட்சியாக உள்ளது. என்ன காரணம்?

பார்ப்பனர்களைக் கடுமையாக எதிர்க்கும் திராவிடர் கழகம், பெரியாரிய அமைப்புகளைக் கூட அவர்கள் இந்த அளவிற்கு எதிர்ப்பதில்லை. தி.மு.க.வைத்தான் குறிவைத்துத் தாக்குகின்றனர். எண்ணிப்பார்த்தால், அதற்கான  இரண்டு காரணங்களை நம்மால் கண்டறிய முடியும்.

தி.க. உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை. போட்டியிட்டாலும், அவை வெகு மக்கள் கட்சிகள் இல்லை என்பதால், வெற்றி பெற வாய்ப்பில்லை. ஆட்சிக்கு வரக்கூடிய அளவிற்கு மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள ஒரே திராவிட இயக்கக் கட்சி, தி.மு.க.தான் என்பதால் அதனை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். 

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஆட்சியை இழக்கப் போவது, அவர்களின் தலைவியாகிய ஜெயலலிதாதான் என்பதாலும் தி.மு.க.வை எதிர்க்கின்றனர். ராஜாஜிக்குப் பிறகு, பல ஆண்டுகள் காத்திருந்தபின், அவர்கள் சாதியிலிருந்து ஒரு முதல்வரை அவர்கள் பெற்றுள்ளனர். இவரை விட்டால், அந்தச் சாதியிலிருந்து இன்னொருவர் யாரும் முதல்வர் பதவிக்கு வர இப்போது வாய்ப்பில்லை. எனவே அவர்களின் 'இனப்பாசம்', தி.மு.க.விற்கு எதிராக மக்களைத் திரட்டுகிறது. 

தங்கள் இனத்திலிருந்து ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது இயற்கை. அதே மாதிரி, தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்கட்டும் என்று ஏன் தமிழர்கள் நினைக்கவில்லை. அப்படி எவரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், இரண்டும் ஒன்று என்று மீண்டும் மீண்டும் சொல்கின்றனர். இந்த இரண்டு கட்சிகளும் வேண்டாம், மூன்றாவது அணியைத் தேர்ந்தெடுங்கள் என்று நமக்குப் பரிந்துரை செய்கின்றனர். 

அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். மூன்றாவது அணி. நான்காவது அணி, நாற்பதாவது அணி என்பது எல்லாம் ஒரு பேச்சுக்குத்தான். இறுதியில் மோதப்போவது இரண்டு அணிகள் மட்டுமே என்பதை நன்கு அறிந்தவர்கள் அவர்கள்! இரண்டு அணிகளையும் ஒரே இடத்தில் நிறுத்தினாலும், அந்த அணிக்கு விழப்போகிற ஒரு வாக்கு கூடச் சிதறாது. 'இரண்டையும் ஒழிக்க வேண்டும்' என்று உரத்துப் பேசுகின்றவர்கள் கூட, தேர்தல் நாளில், காலையில் வாக்குச் சாவடிக்குச் சென்று  வரிசையில் நின்று, அ.தி..மு.க.விற்கு வாக்களித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.

அவர்களின் பேச்சை நடுநிலை என்று நம்பி ஏமாறும் நம்மவர்கள்தாம் வேறு ஏதேனும் ஓர் அணிக்கு வாக்களித்துவிட்டு வருவார்கள். அப்படி வேறு அணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஏறத்தாழ செல்லாத வாக்குகளே என்பதை நாம் உணர வேண்டும்.  அதனால் அ.தி.மு.க. விற்கு மறைமுகமான பலன் ஏற்படும். இந்தக் குழப்பங்கள் இல்லையென்றால், தி.மு.க.வின் மீது விமர்சனம், அதிருப்தி ஆகியன இருந்தாலும், இருப்பதில் மேலானது என்று கருதித் தி.மு.க.விற்கு வாக்களிக்கின்றவர்களே அவர்கள்! அவர்களைத் திசை திருப்புவதே, இரண்டும் ஒன்று என்று சொல்வதின் நோக்கம். இரண்டையும் ஒன்றாகக் காட்டி, தி.மு.க.விற்கு வரக்கூடிய வாக்குகளைப் பிரிப்பதே அவர்களின் உத்தி.

யாருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று கூறும் சில குறுங்குழுக்களின் நோக்கமும் அதுதான். யாருக்கும் வாக்களிக்காமல் வேறு என்ன செய்வது? தமிழ்த் தேசியப் புரட்சியில் ஈடுபடலாம் என்கின்றனர் சிலர். தமிழ்த் தேசத்தை உருவாக்கத் தேவையான திட்டமோ, பெரும் படையோ அவர்களிடம் உள்ளதா? நாம் இந்தத் தெரு முனையில் நின்று பேசினால், அவர்கள் அந்தத் தெரு முனையில் நின்று பேசுகின்றனர். அவ்வளவுதான். வேறு எந்தத் திட்டமும் அவர்களிடம் இல்லை. திராவிட இயக்கத்திற்கு எதிரான, பார்ப்பன ஆதரவுக்கு குழுக்களின் முகமூடிகளே,  தேர்தல் எதிர்ப்பு, நடுநிலை என்பதெல்லாம்! 

தி.மு.க.வை விமர்சனமே செய்யக்கூடாது என்று நாம் கூறவில்லை. எல்லாக் கட்சிகளும் விமர்சனகளுக்கு உட்பட்டவையே. தி.மு.க.வின் குறைகளை எடுத்துக் காட்டுவதில் நமக்கு வருத்தம் ஏதுமில்லை. ஆனால், தி.மு.க.வைத் தனியாக விமர்சனம் செய்யுங்கள். அ.தி.மு.க.வுடன் சமப்படுத்தி விமர்சனம் செய்வதில் உள்ள ஏமாற்று வேலையைப் புரிந்து கொள்ளுங்கள்  என்பதே நம் வேண்டுகோள். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்றில்லை, ஒன்றில்லை, ஒன்று இல்லவே இல்லை.

இரண்டும் ஒன்றில்லை என்பதற்கு என்ன சான்று என்று கேட்கலாம். ஒரு கட்சியின் ஆட்சி இரண்டு வகைகளில் செயல்படும். ஒன்று மக்கள் நலம் சார்ந்ததாகவும்,இன்னொன்று கொள்கை உரம் சார்ந்ததாகவும் இருக்கும். இரு வகைகளிலும், இரண்டு கட்சிகளின் ஆட்சிகளுக்கும் இடையில் பார தூரமான வேறுபாடுகள் உள்ளன. அவற்றை அடுத்த இதழில் ஒரு பெரும் பட்டியலாகவே மக்கள் முன் வைக்கிறோம்.

இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராசர் சொன்ன போதே நாடு ஏற்கவில்லை. இவர்கள் சொல்லியா ஏற்கப் போகிறது? இருப்பினும் நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. சிந்தாமல், சிதறாமல் ஒவ்வொரு வாக்கையும் தி.மு.க. கூட்டணிக்குக் கொண்டு வந்து சேர்த்தாக வேண்டும்!  துருப்பிடித்துப் போன ஜெயலலிதாவின் ஆட்சியிலிருந்து மக்களைக் காப்பாற்றியாக வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக