சனி, 27 பிப்ரவரி, 2016

விஜயகாந்த் கிங்கும் இல்லை... கிங்மேக்கரும் இல்லை. வாக்குவிகிதங்கள் கூறும் கணக்குகள் -காலிடப்பா....

2006 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8% வாக்குகள் பெற்றிருந்த தேமுதிக,2009 தேர்தலில் 10% வாக்குகளாக உயர்ந்தது. அதன் பின்னர் 2011 இல் அதிமுகவுடன் கூட்டு வைத்து 3% மாக குறைந்த ஓட்டு விகிதம் கடந்த மக்களவை தேர்தலில் 3.6 % மாக இருந்தது. - போலியாக ஒருவரை பார்த்து பயமுறுத்துவதற்கு தமிழில் ‘பூச்சாண்டி’ காட்டுகிறான் என்பர். ஒருவேளை, 2016 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தின் நடவடிக்கைகளும் அப்படி பொருள் கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் மாநில கட்சியான தேமுதிகவின் தலைவர். வரும் தேர்தலுக்காக, கூட்டணி அமைக்கும் நாடகங்களில் திமுகவும், காங்கிரசும் தங்கள் கூட்டணியை அறிவித்து கொண்டுள்ளன. இப்போது மூன்று அணிகள் இத்தேர்தலில் போட்டிக்கு தயாராக உள்ளன. திமுகவும் காங்கிரசும் இணைந்த அணி, அதிமுக, அடுத்து மற்ற மாநில கட்சிகள் இணைந்த மூன்றாவது அணி.

2014 இல் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் தனித்துவிட்டு போனதால் பாரதீய ஜனதா இப்போதைக்கு குழப்பநிலையில் உள்ளது. பாரதீய ஜனதாவும், திமுகவும், மூன்றாவது அணியினரும் விஜயகாந்தின் தேமுதிகவை தத்தமது கூட்டணியில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சூழலில், தான் எந்த கட்சியில் கூட்டு சேரப் போகிறேன் என வெளிப்படையாக அறிவிக்காமல் காய்களை நகர்த்தி கொண்டிருக்கிறார் விஜயகாந்த். தேமுதிக தலைவர் விஜயகாந்த் எங்கு  செல்கிறாரோ, அந்த திசையை நோக்கி தான் தேர்தலில் வெற்றி காற்று வீசும் என பலரும் நம்புகிறார்கள். இதனை தொடர்ந்து தான் விஜயகாந்த் “ நான் ஏன் கிங் மேக்கராக இல்லாமல் கிங்காக இருக்க கூடாது ?” என தனது தொண்டர்களை பார்த்து கேட்டார். தவிர, ஓட்டு விகிதத்தை கணக்கிலெடுத்து பார்த்தால் கேப்டன் விஜயகாந்த் “ பூச்சாண்டி” காட்டுகிறார் என்பது புலனாகும்.

கடந்த 2005 ஆம்  ஆண்டு தேமுதிக உருவாக்கப்பட்டது. 2006 சட்டசபை தேர்தலில் அது தமிழகம் முழுவதும் உள்ள 232  தொகுதிகளில் எந்த கூட்டணியிலும் இல்லாமல் போட்டியிட்டது. 100 இல் 8  வாக்காளர்கள் அப்போது தேமுதிகவை தேர்ந்தெடுத்தனர். கருணாநிதி தலைமையிலான திமுக அந்த தேர்தலில் வெற்றி பெற்று, அதிகாரத்தை கைப்பற்றியது. தொடர்ந்து 2009 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக 234 சட்டசபை தொகுதிகளிலும், அதாவது 39 பாராளுமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட போது 100 இல் 10 வாக்காளர்கள் அவரது கட்சிக்கு வாக்களித்திருந்தனர். அதிலிருந்து, இந்த இடைப்பட்ட காலத்தில், 100 வாக்காளர்களில் தேமுதிகவை தேர்ந்தெடுப்பவர்கள் 8 லிருந்து 10 ஆக அதிகரித்தது.
இந்த நேரத்தில் தான், ஆளுங்கட்சியை  ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்ற நோக்கில், விஜயகாந்த், 2011 இல்  ஜெயலலிதாவின் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தார்.
அதனடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, தேமுதிக, தான் 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 232 தொகுதிகளிலிருந்து குறைந்து, 41 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து  இந்த தேர்தலை சந்தித்த போது தேமுதிகவுக்கு 41 தொகுதிகளிலும் 100 இல் 45 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அதிமுக அந்த தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழக முதல்வரானார்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான கேள்வி ஒன்றுள்ளது. விஜயகாந்திற்கு  41 தொகுதிகளிலும் கிடைத்த 45% ஓட்டுகளில் தேமுதிகவின் ஓட்டு விகிதம் எவ்வளவு ? அதிமுக ஆதரவு வாக்குகளால்  கூட்டணியின் காரணமாக தேமுதிகவிற்கு கிடைத்த ஓட்டு விகிதம் எவ்வளவு ? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது.
கடந்த 2006 இல் நடைபெற்ற தேர்தலில் தேமுதிக போட்டியிட்ட, கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும், அதிமுகவும் போட்டியிட்டது. தேமுதிகாவா , அதிமுகவா என்ற வாய்ப்பை அந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு அளித்த போது, கணிசமான வாக்காளர்கள் அதிமுகவையே தேர்வு செய்தனர். ஆனால் அந்த வாக்குகள் அதிமுகவால் ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கான வெற்றியை ஈட்டி தரமுடியவில்லை. 2011 இல் அதிமுக வெற்றி பெற்றதுடன் கணிசமான ஓட்டு விகிதமும் அதிகரித்துள்ளது. அதன் பொருள், 2006 ஐ விட அதிக வாக்காளர்கள் 2011 இல் அதிமுகவை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் மொத்த வாக்குகளும் அதிமுகவின் வாக்குகள் என கூறமுடியாவிட்டாலும், 2006 அதிமுகவிற்கு வாக்களித்த  வாக்காளர்கள் அனைவரும் 2011 இலும் வாக்களித்தனர் என்ற முடிவுக்கு வர முடியும்.
இப்படிப்பட்ட சூழலில். அதிமுகவுக்கு 2006 இல் கிடைத்த ஓட்டுவிகிதத்தை கொண்டு, 2011 இல் தேமுதிக போட்டியிட்ட 41 தொகுதிகளில் கிடைத்த ஓட்டுவிகிதத்தை கழித்தால், வெறும் 3% வாக்குகளே வருகின்றன. இது நிச்சயமாக அறிவியல்பூர்வமான கணக்கீடு இல்லையெனினும், தேமுதிகவிற்கு தனியாக கிடைத்துள்ள வாக்குகளின் அளவை தோராயமான கணக்கில் சொல்ல முடியும். 2009 இல் தேமுதிகவிற்கு கிடைத்த 10 % வாக்குகளிலிருந்து 3% வாக்குகளாக 2011 இல் குறைந்திருப்பதையே இந்த கணக்குகள் காட்டுகின்றன.
 2011 இன் வெற்றிக்கு பின்னர், தேமுதிக- அதிமுக கூட்டணி உடைந்ததை தொடர்ந்து, 2014 பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக, பாரதீய ஜனதாவுடனும் மற்ற மாநில கட்சிகளான மதிமுக, பாமகவுடனும் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தது. அந்த கூட்டணியிலேயே தேமுதிக அதிக இடங்களில் போட்டியிட்டது. அவ்வகையில் 84 சட்டசபைகளை உள்ளடக்கிய 14 பாராளுமன்ற தொகுதிகளிலும், பாரதீய ஜனதா 54 இலும், பாமக 48 இலும், மதிமுக 42  சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதிக இடங்களில் போட்டியிட்ட தேமுதிக தான் அந்த கூட்டணியின் முகம் என்று கூறலாம்.  ஆனால் தேர்தல் முடிவில் அந்த கூட்டணியிலேயே குறைந்த ஓட்டு விகிதத்தில் வாக்குகளை பெற்றது தேமுதிக தான். அந்த கட்சி போட்டியிட்ட 14 தொகுதிகளிலும், அதாவது 84சட்டசபை தொகுதிகளும்  14.5 % வாக்குகளே பெற்றது. ஆனால் பாரதீய ஜனதா தான் போட்டியிட்ட 54 தொகுதிகளிலும் 24.1 % வாக்குகளும், பாமக, தான் போட்டியிட்ட 48  தொகுதிகளில் 21.2% வாக்குகளும் மதிமுக , போட்டியிட்ட 42 தொகுதிகளில் 20% வாக்குகளும் பெற்றிருந்தது. இந்த தேர்தலில் அதிமுக மிக அதிக அளவிலான ஓட்டு சதவீதத்தை பெற்றதுடன், பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. அதிமுக வேட்பாளர்கள், பாரதீய ஜனதா வேட்பாளர்களை எதிர்கொண்ட தொகுதிகளில், இருவருக்குமிடையே உள்ள வாக்கு வித்தியாசம் 40% ஆக இருந்தது. ஆனால், அதிமுக தேமுதிக வேட்பாளர்களை எதிர்கொண்ட தொகுதியில், இருவருக்குமிடையே உள்ள வாக்கு வித்தியாசம் 48%  என்ற அதிக அளவிலான வித்தியாசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது அதிமுக வேட்பாளர்கள், பாரதீய ஜனதா வேட்பாளர்களை வென்ற வாக்கு வித்தியாசத்தை காட்டிலும், தேமுதிக வேட்பாளர்களை அதிக வாக்குவித்தியாசத்தில் தோற்கடித்தனர் என்பதையே காட்டுகிறது. அதன் மற்ற இரு கூட்டணி கட்சிகளாக இருந்த மதிமுக, பாமகவின் வாக்கு வித்தியாச அளவுகள் கூட 45% மாக இருந்தன. இதனடிப்படையில் பார்த்தால், அந்த கூட்டணிக்கு தலைமையேற்ற கட்சி  என கருதப்பட்ட தேமுதிக மிக மோசமான தோல்வியை தழுவியது என கூறலாம். மேலும் தேமுதிகவை மட்டும் தனியாக அதன் ஒட்டுமொத்த ஒட்டுவிகிதத்தை பார்த்தால் வெறும் 3.6 % உள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் வாக்காளர் மத்தியில் தேமுதிகவிற்கு இருக்கும் செல்வாக்கு என்பது மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு என்றே கூற முடியும்.
சிலர் இந்த கணக்கீடுகளின் கடினத்தன்மையை பற்றி கேள்வி கேட்கலாம். ஆனால் இது  தவறான கணக்கீடு இல்லை என்று என்னால் கூற முடியும். பல அரசியல் விமர்சகர்களும், ஆய்வாளர்களும் பல சூழல்களில் , கூட்டணி காரணிகளை கணக்கிலெடுக்காமல் வாக்கு சதவீத கணக்குகளை முன்வைப்பது வழக்கம். அதனடிப்படையில் தான் தேமுதிகவிற்கு இரட்டை இழக்க விகிதத்தில் மாநிலம் முழுவது வாக்கு வங்கி இருப்பதாக கூறுகிறார்கள்.இந்த ஆய்வு, ஒரு தனிகட்சியாக தேமுதிக, 10% வாக்குகளிலிருந்து, 3% - 5% வாக்குகளாக  2011 இலிருந்து குறைந்துள்ளதை புரிய உதவும். கடந்த கால ஓட்டு விகிதம் எதிர்கால விகிதத்தை தீர்மானிக்காது என கூற முடியாது. ஆனால் இப்போதைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங்காக மாற விரும்புவதை மறந்துவிட வேண்டியது தான். இந்த நிலைமை அவரை கிங்மேக்கராக கூட உருவாக்காது என்பதையே காட்டுகிறது.
(மும்பையை சேர்ந்த சக்கரவர்த்தி, அரசியல் பொருளாதார வல்லுனராக ஐடிஎப்ஸி இன்ஸ்டிட்யூட்டில் பணிபுரிகிறார். இதில் எழுதப்பட்ட கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள்)
- See more at: .thenewsminute.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக