ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

நடிகர் விஜய் திமுகவுக்கு ஆதரவு......சந்திரசேகருக்கு எம்.பி பதவி?

சென்னை: அதிமுக ஆட்சியில் தன் படங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை மனதில் கொண்டு, வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக செயல்பட நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிக்கு அடுத்தபடியாக தமிழில் தனக்கென அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருப்பது நடிகர் விஜய் தான். எனவே, அவர் தனது ரசிகர் மன்றங்களைப் பயன்படுத்தி அரசியலில் பிரவேசிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், கடந்த 2011 சட்டசபைத் தேர்தலின் போது அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் செயல்பட்டார். அவரது தந்தையும் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜய் ரசிகர்களும் அதிமுகவுக்கு ஆதரவாகவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்

பிரச்சினையில் சிக்கிய தலைவா... ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் அதிமுகவின் செயல்பாடுகள் விஜய் தரப்பிற்கு எதிராகவே அமைந்தன. அவரது தலைவா, துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் பிரச்சினையில் சிக்கிய போது, விஜய்க்கு ஆதரவாக அதிமுக உதவிக்கரம் நீட்டவில்லை.
முதல்வரைச் சந்திக்கச் சென்ற விஜயின் அப்பாவும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் அப்பாயின்மெண்ட் கிடைக்கவில்லை. இதனால் விஜய் தரப்பிற்கு அதிமுக அரசு மீது அதிருப்தி ஏற்பட்டது.
தெறிக்க விடலாமா...? அதன் எதிரொலியாகவே விஜயின் புலி படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றிருந்ததாக நம்பப்படுகிறது. விஜயின் புதிய படமான தெறியிலும் அரசுக்கு எதிராக தெறிக்க வைக்கும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, விஜயின் ஆதரவைப் பெற அனைத்துக் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
விஜய் தரப்பு இம்முறை திமுகவிற்கு ஆதரவாகச் செயல்படத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக திமுக தரப்பையும் அவர்கள் சந்தித்து பேசியிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சார பீரங்கி... அதிமுக அரசை டார் டாரென கிழிக்கும் வகையில், திமுக சார்பாக விஜய் பிரச்சார பீரங்கியாக தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் செயல்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, தேர்தலுக்கு முன்கூட்டியே தனது தெறி படத்தை வெளியிடும் முயற்சிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்
அப்பாவுக்கு எம்.பி. பதவி... திமுகவிற்கு ஆதரவாகச் செயல்பட தன் தரப்பில் இருந்து சில நிபந்தனைகளையும் விஜய் தரப்பு முன்வைத்துள்ளதாம். அதாவது திமுக சார்பில் சந்திரசேகருக்கு எம்.பி பதவி வழங்க வேண்டும் என்பது தான் அது.
இது குறித்து திமுக மேலிடம் ஆலோசித்து வருகிறதாம். தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கதவுகளையும் திறந்து வைத்துள்ள திமுக, விஜயை இழக்க சம்மதிக்காது என்பது தான் அரசியல் நிபுணர்களின் கருத்து.
தேமுதிக... விஜய் மட்டுமின்றி விஜயகாந்தின் தேமுதிகவையும் தங்களது கூட்டணிக்குள் கொண்டு வரும் திட்டமும் திமுகவிடம் இருக்கிறது. இதில் எது கைகூடும், இல்லை இரண்டுமே கைகூடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக