ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

பெங்களூரு நாட்கள்...சந்தேகமே இல்லை சுவாரசியமான நாட்கள்தான்

படங்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று மூளைக்குள் சென்று அறிவை சுழலவிடுவது. மற்றொன்று இதயத்திற்குள் சென்று உணர்வுகளை சுழலவிடுவது. இவற்றில் முன்னதைவிட பின்னதில் இயக்குனர் ’பொம்மரிலு’ பாஸ்கர் கைதேர்ந்தவர். இவர் இயக்கிய பொம்மரிலு, ஆரஞ்ச், பெங்களூர் டேஸ்(மலையாளம்) உள்ளிட்ட படங்கள், அந்த வரிசையில் பல ரசிகர்களின் இதயத்திற்கு நெருக்கமான படங்கள். அந்த வகையில் மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்றுவிட்ட பெங்களூர் டேஸ் திரைப்படம், வசூலில் மட்டுமல்லாமல் தமிழிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கொஞ்சம் எக்ஸ்ட்ரா டார்கெட்டுடன் ரிலீஸாகியிருக்கிறது.

 ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூன்று பேரும் நண்பர்களாக வளர்ந்த உறவினர்கள். எல்லோரையும் போலவே சிறு வயதில் பல கனவுகளைக் காண்கிறார்கள். அதில் முதலாவது பெங்களூரில் செட்டில் ஆவது. ஆனால் காலத்தின் எண்ணம் வேறு ஒன்றாக இருக்கிறது. சொந்த ஊரில் விவசாயம், அம்மா கையால் சாப்பாடு என இருக்க விரும்பும் பாபி சிம்ஹா, பெற்றவர்களின் கனவை உண்மையாக்க ஐடி-யில் சேர்ந்து பெங்களூர் செல்கிறார். ’உலகத்தில் பெண்களுக்கான இடம் அதிகம் இருந்தாலும், முதலாளி வர்க்கத்தில் பெண்கள் அதிக அளவில் இல்லை. நான் ஒரு கம்பெனி ஆரம்பித்து முழுக்க பெண்களுக்கே வேலை கொடுப்பேன்’ என பேசும் ஸ்ரீதிவ்யா அம்மா பேச்சைக் கேட்டு திருமணம் செய்துகொண்டு பெங்களூர் சென்றுவிடுகிறார்.

பிடித்த வேலையை செய்துகொண்டு ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்யா, இரண்டு நண்பர்களும் இருக்கும் பெங்களூருக்கே சென்றுவிடுகிறார். ஸ்ரீதிவ்யாவின் வாழ்க்கையில் கணவனாக வரும் ராணா டகுபதியைப் போலவே, பாபி, ஆர்யா வாழ்க்கையிலும் ராய் லட்சுமி, பார்வதி என இருவர் வருகிறார்கள். அழகான இந்த நட்பு புறாக்களின் கூட்டிற்குள் வந்த மூன்று புறாக்களால் அவர்கள் கூடு மேலும் அழகானதா? இல்லை வரண்டு போனதா? என்பது தான் பெங்களூர் நாட்கள் படத்தின் கதை.

சூப்பர் ஹீரோ லெவல் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லாமல் தினமும் நாம் கடந்து செல்லக்கூடிய, பார்த்து முகம் மலர நகரும் கதாபாத்திரங்களே படத்தில் இருக்கின்றன. கலாச்சார காவலனாக வரும் பாபி சிம்ஹா, கலாச்சாரம் உடையிலோ, உடலிலோ இல்லை. மனதில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் தருணம் நமக்குள் ஏதோ ஒரு ஓய்வை தருகிறது. கணவனின் குற்ற உணர்வை போக்க ஸ்ரீதிவ்யா செய்யும் செயலாலும், அதற்கு பின் ராணாவின் அணுகுமுறையும் என ரிலாக்ஸாக அமர்ந்து மனம் விட்டு பேசிவிடுவதில் தான் எத்தனை பிரச்சனைகளின் வேர் அறுக்கப்பட்டுவிடுகிறது என்ற உண்மை புரிகிறது. பெற்றவர்களின் விவாகரத்தால் கைவிடப்பட்டு, சமுதாயத்தால் தள்ளிவைக்கப்பட்ட ஒருவன் எப்படி வளர்கிறான் என்பதையும், அதே ஒரு தனிமனிதன் நினைத்தால் சாதிக்க முடியாதது இல்லை என்பதையும் சென்சிடீவான ஆர்யாவின் கதாபாத்திரத்தில் சொல்லி ஒரு நம்பிக்கையும் ஏற்படுகிறது.

நடிகர் தேர்வில் மலையாள படத்தை விட அதிகம் ஸ்கோர் செய்வது பார்வதி மட்டும் தான். ஏனென்றால் மலையாளத்திலும் அவர் தான் நடித்திருந்தார். ’நான் நாளைக்கு ஊருக்கு கெளம்பறேன். என்னை வீட்டில் விடு’ எனும்போது அடக்கிவிட்ட அழுகையும், ஆர்யா போக வேண்டாம் என்றதும் ‘போகல’ என அழுகைக்கு நடுவே உதிர்க்கும் சொற்களும் அவர் இன்னும் பெரிய இடத்திற்கு செல்வார் என்பதை சொல்கின்றன.

மிக முக்கியமான கதாபாத்திரம் பிரகாஷ் ராஜ். ’இறப்பதற்கு ஒரே நாள் தான் இருக்கிறது. என்ன செய்யப் போகிறீர்காள்’ என மருத்துவர் கேட்டால் என்ன செய்வாரோ அதை செய்திருக்கிறார். மருத்துவமனையில் வெடித்து அழும் ஒரே காட்சியில் படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் நமது மனதையும் வெடிக்கவைக்கிறார்.

6 மணிநேரம் பயணம் செய்து மூன்று நாட்கள் தங்கி சுற்றிப்பார்க்க வேண்டிய பெங்களூரை இரண்டு மணிநேரத்தில் அழகான வெள்ளித்திரையில் வைத்து பரிசளித்த ‘பொம்மரிலு’ பாஸ்கர் அடுத்த படத்தை தமிழிலும், மலையாளத்திலும் ஒரே சமயத்தில் எடுத்து முடிக்கும் நம்பிக்கையை பெங்களூர் நாட்கள் திரைப்படத்தின் வெற்றி கொடுக்கும்

பெங்களூர் நாட்கள் - ஓர் இனிய பயணம்! nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக