செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

ஜெயலலிதாவைப் பார்த்து பயப்படுகிறீர்களா? ஸ்டாலின் 'மீட்' டில் அதிரடி கேள்விகள்!

சென்னையின் நட்சத்திர ஹோட்டலில் வைத்து கடந்த 12-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின். சந்திப்பு முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் இந்த சந்திப்பு ஊடகவியலாளர்கள் மத்தியிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிதாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை நெருக்கடியான சூழலிலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில் புறமுதுகிடாத விரல் விட்டு எண்ணக் கூடிய தலைவர்களில் முக்கியமானவர் திமுக தலைவர் கருணாநிதி. 'நமக்கு நாமே' பயணம் மூலம் கருணாநிதியின் மகனும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் 'மக்கள் நேசன்' என்ற அடையாளத்தைப் பெற ஒரு சுற்று போய் வந்து விட்டார். அதேபோல் 'மீடியா நேசன்' என்ற எல்லைக்குள் வந்துவிடவும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சிதான் இது என்கின்றனர், இந்த 'மீட்' டில் கலந்து கொண்டவர்கள்.


விஷூவல் மீடியாவில் நன்கு அனுபவம் கொண்ட பார்த்திபன் மற்றும் சில ஊடகவியலாளர்கள்தான் இந்த சந்திப்புக்கான சூழலை உருவாக்கிக் கொடுத்தவர்கள்.

மிக இயல்பாக சிற்றுண்டி அருந்தியபடியே ஸ்டாலின் அன்றைய மீட்டில் செய்தியாளர்களை எதிர்கொண்டார். பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்கு, தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட ஊடகம் சார்ந்த அம்சங்களை விவாதிக்கவே அந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

அரசியல், கூட்டணி போன்றவை குறித்து பேச வேண்டாமே என்பது போல் இந்த 'மீட்'டின் தன்மை குறித்து சொல்லியிருந்தாலும் தொடக்கம் முதலே செய்தியாளர்கள் ஸ்டாலினை அரசியல், கூட்டணி கேள்விகளால் விரட்ட ஆரம்பித்து விட்டனர்.

'இமயம்' ஜீவசகாப்தன், "மது விலக்கை ரத்து செய்வதாக சொல்கிறீர்கள். ஆனால், மத்திய அரசு கொடுக்கும் மானியம் மாநிலத்தை வழிநடத்த போதவில்லை என்றுதானே, மதுக்கடையையே கொண்டு வந்தீர்கள்? இப்போது மாநிலத்தை வழி நடத்த மாற்று வழியை கண்டுபிடித்து விட்டீர்களா?" என்று தொடங்கி வைக்க... ஒரு சில நொடிகள் அப்படியே அமைதியான ஸ்டாலின், "உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது. மாற்று ஏற்பாடு கைகளில் இருக்கிறது என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.

பத்திரிகையாளர்கள் மாலன், ஏழுமலை வெங்கடேசன், ஏ.என்.ஐ.மணி  கொஞ்சமும் இடைவெளி விடாமல் ஸ்டாலினை  ஒரு வட்டமாக்கி கேள்விகளால் நெருக்கிக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களை தாண்டியும் சிலரின் கேள்விகள் அந்த வட்டத்தின் உள்ளே வந்து இறங்க, அதையும் உன்னிப்பாக கவனித்து கொஞ்சமும்  சலிக்காமல் 'ரிப்ளை' செய்தபடி இருந்தார் மு.க.ஸ்டாலின்.

ஏழுமலை வெங்கடேசனின் கேள்விகள் ஸ்டாலினை சூடுபடுத்தி விடுமோ என்று அவர் உதவியாளர்கள் சிக்னல் காட்ட, அதையும்  'மிஸ்' பண்ணாமல் கவனித்த ஸ்டாலின் 'விடுங்க கேட்கட்டும்' என்றார்.

"நமக்கு நாமே பயணத்தின் வெற்றியைப் பார்த்து அந்தம்மாவே நடுங்க ஆரம்பித்து விட்டார் என்கிறீர்கள்... அந்தம்மாவே என்று நீட்டி முழங்குவதில் அவர்மீது நீங்கள் வைத்திருக்கும் 'பிரமாண்டம்' என்கிற பிரமிப்புதானே தெரிகிறது? மிகவும் வலுவான ஒரு எதிரியாக அவரை பார்ப்பது போன்ற தோற்றத்தை  கொடுக்கிறதே?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிளக்ஸ் ஃபோர்டுகளை வைத்து பொதுமக்களை கதற விடமாட்டோம், அடுத்தவர் வீட்டு சுவற்றில்  தேர்தல் படங்கள் வரைய மாட்டோம் என்று ஒரு உறுதியை கொடுத்து மற்ற அரசியல் கட்சிகளுக்கு  நீங்கள் ஒரு முன் மாதிரியாக இருக்கலாமே?

உங்கள் கட்சியில் வட்டம், பகுதிகளின் 'அட்ராசிட்டி' குறித்து   "தலைமையில் சொல்வோம்" என்றாலும் அவர்கள் பயப்படுவதில்லை.  அ.தி.மு.க.வினரோ, 'அம்மா' கிட்டே சொல்வோம் என்றாலே நடுநடுங்கிப் போகின்றனர். அந்த நடுக்கம் உங்கள் கட்சியில் வரும்நாள் எப்போது?"

இப்படி கேள்விகளால், ஏழுமலைவெங்கடேசன் காய்ச்சிக் கொண்டே போனாலும் ஸ்டாலின் அசரவில்லை. எல்லாவற்றையும் சமாளித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் தலைவர் மோகனின் கேள்வி அந்த கலந்துரையாடலின் நோக்கத்தை விட்டு நகரவில்லை.  "பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக இருக்கிறது. அதற்கான அரசாணை இருந்தும், உரிய பலன் கிடைப்பதில்லை.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் நலனுக்காக 'பிரஸ் அகாடமி' உள்ளது. பிரஸ் லா குறித்த முழுமையான தெளிவை அம்மாநில செய்தியாளர்கள் பெறுவது போல் இங்கே பெற முடியாத நிலை இருக்கிறது, இதை மாற்ற நீங்கள் உத்தரவாதம் அளிக்க வேணடும்.

உங்கள் ஆட்சிக் காலத்தில் 'மீடியா நலநிதி' என்று ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. அது குறித்து எங்களுக்கு இதுவரையில் ஒன்றும் தெரியவில்லை. வழக்கறிஞர்களுக்கு உள்ளது போல  மீடியாவினருக்கும் சேமநல நிதிக்கான உறுதியை கொடுப்பீர்களா?

அரசு விளம்பரங்களைப் பெற்றுத்தரும் ஏஜெண்டுகளுக்கு அரசு 15 சதவீதம் கமிஷன் கொடுக்கிறது. அந்த கமிஷனில் 2 சதவீதத்தை  மீடியாவினருக்கு ஒதுக்கினால் கூட போதுமே,  அரசுப்பணம் கூட தேவையில்லையே?

அதேபோல் செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவது,  அவர்களுக்கான அரசின் முறைப்படுத்தப்பட்ட சலுகைகளை பெற்றுத்தருவது போன்றவைகளை தீர்மானிக்கும் கமிட்டி, உறுப்பினர் தேர்வை வரையறைப்படுத்த வேண்டும்" என்று மோகன், 'நான் ஸ்டாப்'பாக கோரிக்கைகளை அடுக்க, அதை ஸ்டாலினின் உதவியாளர்கள் குறித்துக் கொண்டனர்.

ஸ்டாலினிடம் ஜாலியாக 'கலாய்' வாங்க கலந்தாய்வில் ஒருவர்  கிடைத்தார். அவர் கலைஞர் தொலைக்காட்சியின் தம்பிராஜா.

"நீங்க" என்று தம்பிராஜா ஆரம்பித்ததுமே, குறுக்கிட்ட மு.க.ஸ்டாலின், "யோவ் முதல்ல நீ உட்காருய்யா... நீ வேறயா... நான் தான் உன்னை தயார் பண்ணி பேச வைத்திருக்கிறேன் என்று சொல்வதற்கா?" என்று சொல்ல, அந்த இடத்தில் கொஞ்சம் மிச்சம் இருந்த சூடு குறையத் தொடங்கியிருந்தது.

மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, பெரும்பாலான லீடர்கள் பொது இடத்தில் எவ்வளவு சீண்டல் கேள்விகள் என்றாலும் தங்களின் நிலையை உணர்ந்து பொறுப்புடன் பேச ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல முன்னேற்றம்தான்... இந்த முன்னேற்றம் மாற்றத்தைக் கொண்டு வருமா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்...

ந.பா.சேதுராமன் விகடன்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக