திங்கள், 22 பிப்ரவரி, 2016

வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியது யார் ? கழுவமுடியாத பாவக்கறை...

ரோகித் வெமுலாரோகித் வெமுலா – ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவன். அம்பேத்கர் மாணவர் சங்கம் என்ற அமைப்பின் முன்னோடி. சனவரி 17-ஆம் தேதியன்று சக மாணவன் ஒருவனது அறையில் வெமுலா தற்கொலை செய்து கொண்டான். சக மாணவர்கள் யாரும் அவனது முகத்தைக் கூடக் காண விடாமல், வெமுலாவின் உடலை ஒரு அநாதைப் பிணம் போல அப்புறப்படுத்தியது பல்கலைக்கழக நிர்வாகம். வெமுலாவின் தாயை மட்டும் அழைத்து வந்த போலீசு, அவர்களுடைய குடும்ப வழக்கத்தின்படி உடலைப் புதைப்பதற்குப் பதிலாக, அவசர அவசரமாக எரியூட்டியது.
இது தற்கொலைதானா என்று சந்தேகிப்பதற்கான எல்லா முகாந்திரங்களும் இந்த நடவடிக்கைகளில் உள்ளன. இது தற்கொலைதான் என்று நம்புவதற்கான ஆதாரம் ஒன்று உண்டெனில், அது வெமுலாவின் கடிதம். அக்கடிதம் வெளிப்படுத்தும் உணர்ச்சி உண்மையானது.
போலிகளைத் தயாரிக்கும் கிரிமினல்தனத்தில் பெரும் திறமை பெற்றவர்கள்தான் என்ற போதிலும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் சூழ்ச்சித்திறனுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது அக்கடிதத்தில் வெமுலா வெளிப்படுத்தும் உணர்ச்சி.
பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிரான போராளி ரோகித் வெமுலா
வெமுலா, கல்லுடைக்கும் சாதியைச் சேர்ந்த தந்தைக்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் பிறந்து, தந்தை கைவிட்டு ஓடியதால், ஏழைத்தாயால் வளர்க்கப்பட்ட பிள்ளை. மார்க்சின் மீதும், அம்பேத்கரின் மீதும் பற்றும், பார்ப்பன இந்துவெறியின் மீது கடும் வெறுப்பும் கொண்ட ஒரு மாணவன். அம்பேத்கர் மாணவர் சங்கம், யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்ததும், முசாபர்நகர் கலவரம் குறித்த ஆர்.எஸ்.எஸ். வெறியர்களை அம்பலப்படுத்தும் ஆவணப்படத்தைத் திரையிட்டதும் ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழக்தில் இயங்கி வரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினருக்கும், பார்ப்பன வெறி பிடித்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் விடுத்த சவாலாக அமைந்தன.
இதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர்களுக்கான கலாச்சார விழாவின் போது மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வெமுலா தலைமையிலான மாணவர்கள் எழுப்பியதன் காரணமாக ஏ.பி.வி.பி.யின் தூண்டுதலின் பேரில் கலாச்சார விழாவையே ரத்து செய்தார் துணை வேந்தர். பெரும்பான்மை இந்து மாணவர்கள் மாட்டுக்கறிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அனைத்து மாணவர்களின் பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்றது பல்கலைக்கழக நிர்வாகம். பொதுக்குழுவில் பெரும்பான்மை மாணவர்கள் மாட்டுக்கறி உணவை ஆதரித்தால், அன்றாடம் உணவு விடுதியிலேயே மாட்டுக்கறி வழங்க நீங்கள் தயார் என்றால் பொதுக்குழுவைக் கூட்டுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் வெமுலா உள்ளிட்ட மாணவர்கள். பீதியடைந்த நிர்வாகம் பொதுக்குழு யோசனையையே தலை முழுகியது.
அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் குறி வைக்கப்படுவதற்கு காரணமான சில சம்பவங்கள் இவை. நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் நவீன அக்கிரகாரங்கள், முற்று முழுதாக காவிக்கொடியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் இன்றைய சூழலில், ஒரு தலித் மாணவன் இந்துத்துவத்தை எதிர்த்து சவால் விடுவதை பார்ப்பன பாசிஸ்டுகள் சகித்துக் கொள்வார்களா?
ரோகித் வெமுலா தற்கொலை - போராட்டம்
ரோகித் வெமுலாவின் தற்கொலையைக் கண்டித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள்.
வெமுலாவின் மாதாந்திர கல்வி உதவித்தொகை, ஜுலை மாதம் முதற்கொண்டே நிறுத்தப்பட்டது. தனது பராமரிப்புக்கும் தனது தாயின் பராமரிப்புக்கும் இந்த உதவித்தொகையை மட்டுமே சார்ந்திருந்த வெமுலா பட்டினிக்கும் கடனுக்கும் தள்ளப்பட்டான். பின்னர் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் தன்னைத் தாக்கிக் காயப்படுத்தியதாகவும், அதன் காரணமாக, தான் குடல் வால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேர்ந்தது என்றும் ஒரு ஏ.பி.வி.பி. பொய்யன் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தான். அவனுடைய உடலில் அடிபட்ட கொடுங்காயம் எதுவும் இல்லையென்றும், அடிபடுவதற்கும் குடல்வாலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் மருத்துவர் சான்றளித்தார்.
இருப்பினும், டிசம்பர் 16-ஆம் தேதி வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காரணம், “ஐதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக, சாதிய பயங்கரவாதிகளின் கூடாரமாகிவிட்டது” என்று மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு எழுதிய கடிதங்கள். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் (மனு)ஸ்மிருதி இரானியின் நடவடிக்கை.
“அவர்கள் விடுதியில் தங்கக்கூடாது, சாப்பிடக்கூடாது, வகுப்புக்கு வருவதைத் தவிர பல்கலைக்கழகத்தின் வேறு எந்த இடத்திலும் புழங்கக்கூடாது” என்று வெமுலா உள்ளிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது ஊர் விலக்கம் செய்வது என்ற தீண்டாமை நடவடிக்கையை அப்படியே ஒத்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர் கோபால் குரு. உதவித்தொகை நிறுத்தப்பட்டு, ஒண்டுவதற்கு இடமும் இல்லாமல் வெளியேற்றப்பட்ட வெமுலாவும் நண்பர்களும் பல்கலைக் கழக வளாகத்தின் வெட்டவெளியில் உறங்கினார்கள். அந்த மாணவர்கள் இரண்டு வாரங்களாகத் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய போதிலும், அவர்களை ஒரு ஆசிரியர் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. “நாம் நாய்களைப் போல வீதியில் கிடக்கிறோம். யாரும் நம்மை லட்சியம் செய்யவில்லை என்று ரோகித் வருந்துவான்” என்று நினைவு கூர்கிறார்கள் நண்பர்கள்.
செந்தில்குமார்
ஆதிக்க சாதிவெறி பிடித்த பேராசிரியர்களின் புறக்கணிப்பாலும் அவமதிப்பாலும் தற்கொலை செய்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சித் துறை மாணவர் செந்தில்குமார். (கோப்புப் படம்)
எதிரிகளின் தாக்குதலைக் காட்டிலும் கொடியது இந்த ஆதரவற்ற நிலை. ஆறு மாதங்களாக சோற்றுக்கு வழியில்லாமல் தவித்து, பிறகு தங்குவதற்கு இடமின்றி வீதியில் வீசியெறியப்பட்ட பின்னரும் விடாப்பிடியாகப் போராடிய வெமுலாவால் இந்தப் புறக்கணிப்பை சகித்துக் கொள்ள இயலவில்லை. தாங்கள் பல ஆண்டுகாலம் வளைய வந்த பல்கலைக்கழகத்தில், அநாதைகளைப் போல தெருவோரமாக தாங்கள் படுத்துக் கிடக்கையில், அந்தக் காட்சியால் எந்தவித சலனத்திற்கும் ஆளாகாமல், பேசிச் சிரித்தபடிக் கடந்து செல்லும் சக மாணவர்களைப் பார்த்த வெமுலாவின் மனம் நிலைகுலைந்ததில் வியப்பென்ன? வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியவர்கள் எதிரிகள் அல்லர்.
இதே ஐதராபாத் பல்கலைக் கழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ரெட்டி சாதி மாணவனால் காதலித்து ஏமாற்றப்பட்டு கருத்தரித்த ஒரு தலித் பெண் தற்கொலை செய்து கொண்டாள். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அந்த மாணவியின் உடல் விடுதியின் வாயிலில் கிடத்தப்பட்டிருந்த அதே நேரத்தில், விடுதிக்கு உள்ளே வேறொரு மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்திருக்கின்றன.
தற்போது வெமுலா மீது நடவடிக்கை எடுத்த துணை வேந்தர் அப்பாராவின் இடத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீவத்சவா, 2008-இல் செந்தில் குமார் என்ற தமிழக தலித் மாணவனின் தற்கொலைக்குக் காரணமான குற்றவாளி. பன்றி மேய்க்கும் சாதியில் பிறந்தவரான செந்தில் குமார் கணிதத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர். குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி. சாதிவெறி பிடித்த பேராசிரியர்களின் புறக்கணிப்பும், அவமதிப்பும் அவரைத் தற்கொலைக்குத் தள்ளின. அன்றும் செந்தில் குமாரின் உடலைப் பார்ப்பதற்குக்கூட ஒரு பேராசிரியரும் வரவில்லை, மனித உரிமை செயற்பாட்டாளர் பாலகோபால், தலித் தலைவர் போஜா தாரகம் ஆகிய இருவர் மட்டுமே வந்தனர் என்று நினைவு கூர்கிறார்கள் மாணவர்கள்.
rohit_4பல்கலைக்கழக ஆசிரியர் குடியிருப்பின் குழாய்த் தண்ணீரை எல்லா சாதியினரும் பயன்படுத்துவதால், அது தீட்டான தண்ணீர் என்று கூறி தனது வீட்டில் தனியே கிணறு தோண்டிக்கொள்ள ஒரு பேராசிரியப் பார்ப்பனருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியளித்திருக்கிறது என்று சொன்னால் அந்தப் பல்கலைக் கழகத்தின் யோக்கியதை வேறெப்படி இருக்க முடியும்?
டில்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியரும், “ஒதுக்கீட்டின் குழந்தைகள்” என்ற நூலின் ஆசிரியருமான என்.சுகுமாரன், ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு தலித் மாணவன் அனுபவிக்கும் கொடுமையை ஒரு சித்திரமாகத் தருகிறார். “பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து விடுதியில் இடம் கிடைக்காத தலித் மாணவர்கள் ஏராளம். வெளியில் அறை எடுத்து தங்க அவர்களுக்கு வசதி இருக்காது. சட்டவிரோதமாக விடுதி அறைகளில் அவர்கள் தம் நண்பர்களுடன் தங்கியிருப்பார்கள். அறையில் சோறு மட்டும் வைத்துக் கொள்வார்கள். உணவு விடுதியில் எல்லா மாணவர்களும் சாப்பிட்டு விட்டு கிளம்பும்வரை காத்திருப்பார்கள். சமையல் பாத்திரங்களில் குழம்பு, பொறியல் ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்று அவர்கள் துழாவும் அதே நேரத்தில், நாய்களும் பூனைகளும் எச்சில் தட்டுகளை நக்கிக் கொண்டிருப்பதை நான் என் கண்ணால் கண்டிருக்கிறேன்” என்கிறார் பேரா. சுகுமாரன்.
2008 முதல் இன்று வரை அந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டும் 11 தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சாதி ஆதிக்கமும் தலித் மாணவர்களின் தற்கொலையும் ஐதராபாத் பல்கலைக் கழகத்தின் பழகிப்போன எதார்த்தங்களாகி யிருக்கின்றன. “ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தலித் மாணவர்களைப் புறக்கணிக்கிறார்கள். அதேநேரத்தில், ஆதிக்க சாதி மாணவர்களோ தாங்கள்தான் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர்கள் என்று கருதுகிறார்கள் என்கிறார் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஹரகோபால். டில்லி எய்ம்ஸ் முதல் சென்னை ஐ.ஐ.டி. வரையில் எல்லா உயர் கல்வி நிறுவனங்களின் நிலையும் இதுதான்.
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்துக்கு எதிராக ஸ்மிருதி இரானி தாக்குதல் தொடுத்த போதும், அம்மாணவர்களுக்கு ஆதரவான குரல் எதுவும் உள்ளேயிருந்து எழுந்துவிடவில்லை. வெளியிலிருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்களும் போராட்டமும் வலுப்பெற வலுப்பெறத்தான் ஐ.ஐ.டி. பார்ப்பனக் கும்பல் அஞ்சியது, பின் வாங்கியது. போராட்டம் நாடு முழுவதும் பரவியதன் விளைவாக, மோடி அரசு பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.
உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பார்ப்பன ஆதிக்கம், அந்த ஆதிக்கத்துக்கு எதிரான குரல்களை நசுக்குவதன் மூலம் அவற்றை இந்துத்துவக் கூடாரங்களாக்கும் மோடி அரசின் நடவடிக்கைகள், தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை உயர்கல்வியிலிருந்து முற்று முழுதாகவே வெளியேற்றவிருக்கும் காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தனியார் உயர்கல்விக் கொள்ளையின் அமலாக்கம் – இவை தனித்தனிப் பிரச்சினைகளுமில்லை, இவற்றுக்குத் தனித்தனி தீர்வுகளும் இல்லை.
ஆனால் இவை ஒவ்வொன்றும் எண்ணற்ற வெமுலாக்களை மரணத்துக்குத் தள்ள வல்லவை. எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளின் தற்கொலை இதனை உணர்த்த வில்லையா என்ன?
– அஜித்  வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக