திங்கள், 8 பிப்ரவரி, 2016

சொந்த தொகுதிகளில் போட்டியிட அமைச்சர்கள் தயக்கம்

தொகுதி மக்களை எட்டிப் பார்க்காதது உட்பட, பல பிரச்னைகள் சூழ்ந்து நிற்பதால், தமிழக அமைச்சர்கள் பலர், இம்முறை சொந்தத் தொகுதியில் போட்டியிடும் விஷயத்தில் கலக்கம் அடைந்துள்ளனர். மக்கள் கவிழ்த்து விடலாம் என்ற அச்சத்தில், தொகுதி மாறவும் விரும்புகின்றனர். இருப்பினும், அதை எப்படி கட்சித் தலைமையிடம் சொல்வது என, புரியாமல் தவிக்கின்றனர்.
தமிழக அமைச்சரவையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 28 அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும், வரும் தேர்தலில் எப்படியாவது, 'சீட்' பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர்.  எந்த அமைச்சருங்க தொகுதிக்கு என்ன செஞ்சாங்கன்னு அவிங்களுக்கும் தெரியாது....தலைமைக்கும் தெரியாது....பொத்தாம் பொதுவா கிரைண்டர் ,மிக்க்ஷி கொடுத்தோம்ன்னு சொல்லுவாங்க...ஆடு ,மாடு கொடுத்தோம்ன்னு சொல்லுவாங்க.....
அதேநேரத்தில், 2011 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால், தொகுதி பக்கம் எட்டிப் பார்க்காதது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது, தொகுதியில் தங்களுக்கு எதிராகச் செயல்படும் சொந்தக் கட்சியில் உள்ள எதிர்கோஷ்டியினரின் ஏட்டிக்குப் போட்டியான செயல்பாடுகள் உட்பட, பல காரணங்களால், தோல்வியை தழுவ நேரிடுமோ என, அஞ்சுகின்றனர்.

அதனால், இம்முறை தொகுதி மாறி போட்டியிட விரும்புகின்றனர். ஆனால், அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, ஒருவர் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை, கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். அதை மீறி எதுவும் செய்ய முடியாது. அப்படி செய்தால், சீட் கிடைக்காமல் போக நேரிடலாம். எனவே, தங்களது விருப்பத்தை எப்படி கட்சித் தலைமையிடம் சொல்பது என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.
சில அமைச்சர்கள் தங்களின் இந்தக் கலக்கம் மற்றும் பிரச்னை பற்றி, அ.தி.மு.க.,வில் முக்கிய விவகாரங்களை கவனிக்கும் ஐவர் அணியிடம் கூறியுள்ளனர். அவர்களோ,

'உங்களை போன்ற மனநிலையில் தான் நாங்களும் உள்ளோம். என்ன செய்வது, விதி விட்ட வழி' என, பதில் கூறி விட்டதாகத் தெரிகிறது.

தொகுதி மாற திட்டமிட்டுள்ள அமைச்சர்கள் சிலர்:
* சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், 2015ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முதல்வர் ஜெயலலிதா. கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில், ஆர்.கே.நகரும் ஒன்று என்பதால், அங்கு மீண்டும் போட்டியிடுவது உசிதமல்ல என முடிவெடுத்து, இம்முறை, தொகுதி மாற முடிவு செய்துள்ளார். அவர், தேனி மாவட்டம், போடி நாயக்கனுாரில் போட்டியிடலாம் என, தெரிகிறது.
* போடிநாயக்கனுாரில் ஜெயலலிதா போட்டியிட்டால், அந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.,வான, நிதி அமைச்சர் பன்னீர் செல்வம், வேறு தொகுதிக்கு மாற வேண்டும். அதனால், எந்தத் தொகுதி பன்னீருக்கு சாதகமானது என, அவரின் ஆதரவாளர்கள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.
* வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் வெற்றி பெற்ற, ஒரத்தநாடு தொகுதியை, முதல்வரின் தோழி சசிகலா கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அப்படி, சசிகலாவுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால், தஞ்சாவூர் அல்லது பேராவூரணி தொகுதிக்கு மாற வைத்திலிங்கம் திட்டமிட்டு உள்ளார்.வைத்திலிங்கத்துக்கும், பன்னீர் செல்வத்துக்கும் காரணங்கள் இப்படி இருந்தாலும், தொகுதி மக்கள் மத்தியில், அவர்கள் கடும் அதிருப்தியை சம்பாதித்து உள்ளதால், எப்படியும் தொகுதி மாற வேண்டும் என்ற முடிவில் தான் உள்ளனர்.
* உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் வெற்றி பெற்ற, பாப்பிரெட்டிபட்டி தொகுதியில், லோக்சபா தேர்தலில், பா.ம.க., சார்பில் போட்டியிட்ட அன்புமணி, அ.தி.மு.க., வேட்பாளரை விட, 24 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றார்.வரும் சட்டசபை தேர்தலில், அன்புமணி மனைவி சவுமியா, பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அதனால், தர்மபுரி தொகுதிக்கு மாற, பழனியப்பன் திட்டமிட்டுள்ளார்.
Advertisement
* அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அவர் சார்ந்த சமூகத்தினருக்கு ஆதரவாக மட்டும்,செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே, அவர் மீது மற்ற சமூகத்தினர் கோபமாக உள்ளனர். அதனால், எதிர்ப்பு ஓட்டுகளால் வீழ்வதைத் தவிர்க்க, இவரும் தொகுதி மாற திட்டமிட்டுள்ளார்.
* கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜுக்கு, அவரது கட்சியினரே விரோதமாக உள்ளனர். இதனால் தான், உள்கட்சி விவகாரம் வெடிகுண்டு வீச்சு வரை சென்று, அமைச்சரை கடும் சிக்கலுக்கு ஆழ்த்தி உள்ளது. அதனால், மதுரையில் இருந்து திருமங்கலம் போகலாமா என, ஆழ்ந்த சிந்தனையில் உள்ளனர்.
* மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால், நாகப்பட்டினம் தொகுதியில், 5,753 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான், கடந்த முறை வெற்றி பெற்றார். தற்போது, இந்தத் தொகுதியில், தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை உள்ளதாக, கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளதால், நன்னிலம் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளார்.
* சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், அரசு நலத்திட்ட உதவிகள், முறையாக வந்து சேரவில்லை என்ற, குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக, அத்தொகுதி எம்.எல்.ஏ.,வான, அமைச்சர் வளர்மதி, தன் வீடு உள்ள விருகம்பாக்கம் தொகுதியில் பார்வையை செலுத்தி உள்ளார்.
* புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.,வான, அமைச்சர் விஜயபாஸ்கர் மீது, முத்தரையர் சமூகத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர். அவரை தோற்கடிக்க வேண்டும் என, கங்கணம் கட்டி செயல்படுவதால், எங்கு நிற்பது என புரியாமல் தவித்து வருகிறார். காரணம், விராலிமலையை சுற்றியுள்ள எந்தத் தொகுதிக்கு சென்றாலும், அவரை இதே பிரச்னை துரத்தும்.
* கடும் மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதியில், நிவாரணப் பணிகள், மறு கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாகச் செய்யப்படாததால், அமைச்சர் சின்னையா மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அவர் செங்கல்பட்டு தொகுதிக்கு செல்லலாமா அல்லது பல்லாவரத்திற்கு மாறலாமா என, ஆலோசித்து வருகிறார்.இதேபோன்ற மனநிலையில் தான், மற்ற பல அமைச்சர்களும் உள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக