திங்கள், 22 பிப்ரவரி, 2016

கச்ச தீவு திருவிழா.....தமிழ் சிங்கள மலையாள பக்தர்கள் சுமார் 7 ஆயிரம்....


கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நேற்றுடன் முடிந்தது. இதில் இரு
நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அந்தோணியார் ஆலய திருவிழா இந்தியா- இலங்கை இடையே நடுக்கடலில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல பதிவு செய்திருந்த பக்தர்கள் அனைவரும் நேற்று முன்தினம் விசைப்படகுகள் மூலம் கச்சத்தீவுக்கு சென்றனர். இதேபோல் இலங்கையில் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் பிளாஸ்டிக் படகுகள் மூலம் கச்சத்தீவுக்கு வந்து இருந்தனர். விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மாலை கொடி ஏற்றப்பட்டது. பின்னர், சிலுவைப்பாதை திருப்பலி பூஜையும், தேர்பவனியும் நடைபெற்றது.


கடலில் பவனி

இதைத்தொடர்ந்து விழாவில் முதல் முறையாக அந்தோணியாரின் கடல் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. தேர் பவனிக்கு பின்பு அந்தோணியாரின் சொரூபம் இலங்கை கடற்படை கப்பலில் வைக்கப்பட்டு கடலில் பவனியாக எடுத்து வரப்பட்டது.

இதற்கு முன் இல்லாதவகையில் இந்த ஆண்டு முதல் முறையாக நடந்த கடல் பவனியை இருநாட்டு மக்களும் கடற்கரையில் கூடி நின்று மகிழ்ச்சியுடன் வழிபட்டனர். கடல் பவனிக்கு பின்பு அந்தோணியாரின் சொரூபம் மீண்டும் ஆலயத்தில் வைக்கப்பட்டது.

திருவிழா நிறைவு

விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறப்பு திருப்பலி பிரார்த்தனை தொடங்கியது. அதனைத்தொடர்ந்து இருநாட்டு மீனவர்களும் எந்த பிரச்சினையும் இல்லாமல் மீன் பிடிக்கவும், கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்வளங்கள் அதிகரிக்கவும், இருநாட்டு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் ஆயர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்துடன் அந்தோணியார் ஆலய கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைந்தது. இதன்பின் இருநாடுகளைச் சேர்ந்தவர்களும் படகுகள் மூலம் சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.   dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக