பெங்களூரு
- கர்நாடகா மாநிலம், பெங்களூருரில் தான்சானியா மாணவி தாக்குதல் தொடர்பாக
இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா
தெரிவித்துள்ளார். பெங்களூருரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற
விபத்து ஒன்றில் 35 வயது பெண் ஒருவர் இறந்தார். இதையடுத்து இறந்து போன
பெண்ணின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து அந்த வழியாக வந்த
கார் ஒன்றை மறித்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் அந்த காரில்
இருந்த தான்சானிய நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவரை கீழே இழுத்து
அடித்து உதைத்தனர்.
மேலும், அவரது
ஆடைகளையும் களைந்து நிர்வாணப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் அந்த மாணவி
அங்கு வந்த பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்றபோது, அவரைத் துரத்தி சென்ற அந்த
கும்பல், அவரை கீழே இழுத்துப் போட்டு அடித்துள்ளது. அந்த மாணவி
பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை வர்த்தக மேலாண்மை (பிபிஎம்)
படித்து வருகிறார். இந்த கொடூர தாக்குதல் போலீசாரின் கண்முன்னே
நிகழ்ந்தது.இந்த சம்பவம் குறித்து முதலில் புகாரினை ஏற்க மறுத்த போலீசார்,
பின்னர் விஷயம் பெரிதாகவே வழக்குப் பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து, இது
தொடர்பாக விசாரிக்க காவல் துணை கண்காணிப்பாளர் ஜகதீஷ் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளது. தான்சானியாவைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்த வெட்கக்கேடான
விஷயம் குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக மத்திய வெளியுறவுத் துறை
அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த
சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான்சானியா தூதர்
ஜான் கிஜஜி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இந்திய அரசுக்கு கடிதம்
எழுதியுள்ளதாகவும், போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து,
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக
முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா
தெரிவிக்கையில்.,
இந்த சம்பவம்
அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. உரிய விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு
உத்தரவிட்டுள்ளேன். மேலும் இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கு
அறிக்கை அனுப்பி இருக்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். நிச்சயம் இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வழி
செய்வோம் என்று கூறினார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக
உரிய விளக்கம் மற்றும் அறிக்கை தாக்கல் செய்ய சித்தராமையாவுக்கு காங்கிரஸ்
துணைத் தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினபூமி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக