ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

விசாரணை’ படமும் விஷ்ணுப்ரியா மரணமும்...!

விகடன்.com :போலீஸ் சிஸ்டம்’ எத்தனை கொடூரமாக இருக்கிறது..?  மூர்க்கத்தனமான அந்த சிஸ்டத்தோடு அரசியல் அதிகார மையம் கைகோர்த்த பிறகு வெளிப்படும்  அரக்கத்தனம் எத்தகையது ..? எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் அந்த சிஸ்டத்தினுள் சிக்கிக்கொண்டால்  என்னவெல்லாம் நடக்கும்...?  ஒரு முறை  விசாரணை படத்துக்கு சென்று வந்தீர்களானால்  அதிர்ந்துபோவீர்கள். நம் ஒவ்வொருவருக்கும்  தெரிந்த அல்லது படித்த ஏதேனும் காவல்நிலைய  சம்பவத்தை இந்த படம் நமக்குள் நிச்சயம் கடத்தும். கேள்வி எழுப்பும், சிந்திக்கத் தூண்டும்,  அரசியலின் ஆழம் உணர்த்தும். அதிகாரத்தின் கோர முகம் காட்டும். படத்தில் சமுத்திரக்கனி சுட்டுக் கொல்லப்படுவதும்,  நிஜத்தில் விஷ்ணுப்ரியா தூக்கில் தொங்கியதும் நிழலுக்கும் நிஜத்துக்குமான பிணைப்பைச் சொல்கிறது. இந்த போலீஸ் சிஸ்டத்தில் போலீஸே சிக்கினால் கூட  மீளமுடியாது  என்பதே நிதர்சனம்!

கோகுல்ராஜ் கொலை,  யுவராஜ் தலைமறைவு, டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை... இந்த மூன்று சம்பவங்களுமே  தமிழகத்தை அதிரச்செய்த சம்பவங்கள். இதில்  கோகுல்ராஜுக்காக நடந்த போராட்டத்தையும், யுவராஜுக்காக நடந்த சாதிய கூப்பாடுகளையும், விஷ்ணுப்ரியா குடும்பத்தின் கண்ணீரையும் மட்டுமே ஊடகங்களால் மக்களுக்கு கொண்டுபோய்ச் சேர்க்க முடிந்தது. அதிகப்படியாக அந்தச் சம்பவத்தில் இருக்கும் சந்தேகங்களை எழுப்ப முடிந்ததே தவிர,  போலீஸ் சிஸ்டத்தை மீறி எந்த அமைப்பும் எதுவும் செய்ய முடியாமல் போனது.
விசாரணை படத்தில் க்ளைமாக்சில் ஒரு போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு , ’இந்தப் பக்கம் அவர் கல்யாண போட்டோவையும் அந்தப் பக்கம் அவர் மனைவி அழும் போட்டோவையும் போட்டுட்டா எல்லாத்தையும் மறந்துடுவாங்க. ’போலீஸுக்கு பாதுகாப்பு இல்லை’னு அதைத்தான் மீடியாவும் கவர் பண்ணுவாங்க’னு  என ஒரு போலீஸ்காரர் சொல்வது நூற்றுக்கு நூறு இங்கு  நிதர்சனம்.

கோகுல்ராஜ் கொலைவழக்கை விசாரித்துவந்த  திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா  திடீரென்று தூக்கில் தொங்கினார். (அது தற்கொலைதானா என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை ). என்ன காரணம் என்று தெரியாமல் எல்லோரும் முழித்துக்கொண்டிருந்த நேரத்தில்,  விஷ்ணுப்ரியாவின் தோழியான கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி கொடுத்த  பேட்டி எல்லோரையும் உலுக்கியது.  
“கோகுல்ராஜ் கொலைவழக்கில்  சம்பந்தமே இல்லாத மூன்று பேர் மீது குண்டாஸ் போடச்சொல்லி எங்கள் மேலதிகாரி டார்ச்சர் செய்தார். இந்த வழக்குக்கும் அந்த மூணு பேருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. இதைச் செய்றதுக்காகவா  நான் போலீஸ் வேலைக்கு வந்தேன். எனக்கு என்ன பண்றதுனே தெரியல..?’னு புலம்பிட்டே  இருந்தா,  திடீர்னு எஸ்.பி லைன்ல வர்றார்னு போனை கட்பண்ணிட்டா அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுனு தெரியலை. தூக்குல தொங்கிட்டானு சொல்றாங்க. அவ தற்கொலை பண்ணிக்கிற  அளவுக்கு கோழை கிடையாது. எல்லாத்துக்கும் எஸ்.பிதான் காரணம்.  இதச் சொல்றதால எனக்கு வேலை கூட போகலாம் அதை பத்தி கவலை இல்லை" என்று பகிரங்கமாக போட்டு உடைத்தார்.

அதன் பிறகுதான் அந்த மேலதிகாரி மீது எல்லோர் பார்வையும் திரும்பியது. விஷ்ணுப்ரியாவின் உடலை மீட்க யாரையும் அனுமதிக்காமல் தனக்கு நெருக்கமான ஒரு போலீஸ் அதிகாரியோடு அவர் மட்டும்  உள்ளே சென்றதையும், விஷ்ணுப்ரியாவின்  செல்ஃபோன், டேப்லெட், மரண வாக்குமூலம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அவரே கைப்பற்றிச் சென்றுவிட்டார் என்றும் தகவல் வந்தது. அதுமட்டுமல்லாது விஷ்ணுப்ரியாவின் பெற்றோரிடத்தில் கடைசிவரை அவருடைய செல்ஃபோன்களை ஒப்படைக்காததும் மரண வாக்குமூலத்தில் ஒவ்வொரு பக்கமாக வெளிவந்ததும் அந்த மேலதிகாரி மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவரோ எதற்கும் சளைக்கவில்லை.

விஷ்ணுப்ரியாவின் மாமா ஆனந்தன்,  “போலீஸ்காரங்க கதவை உடைச்சி உள்ளே போன மாதிரியெல்லாம் தெரியலை. ஸ்க்ரூவை கழட்டி செட் பண்ண மாதிரி இருக்கு. அவ தொங்குன இடத்துக்கு நேரா ஒரு கயிறு இருக்கு. அந்த இடைஞ்சல்ல போய் எப்படி தொங்குனா..? இது தற்கொலையே கிடையாது..."  என்று பல சந்தேகங்களை அடுக்கினார். அதற்கும் எந்தப் பதிலும் இல்லை. அப்போதான் சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து,  போலீஸ் துறைக்கே நெருக்கடியாக இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கவும்  அரசு உஷாரானது. ஆனால், ‘இது ஒன்றும் அவ்வளவு சிக்கலான வழக்கு கிடையாது’ என்று முதல்வர் ஜெயலலிதாவே அறிவித்து வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அதிலிருந்துதான் ஆட்டம் ஆரம்பித்தது. குற்றம் சுமத்தப்பட்ட அந்த அதிகாரியின் நண்பர் எனப்படுபவரே விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலான குழு ஊடகங்களை  திசை திருப்புவதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியது. முதலில் காதல் விவகாரம் என்று கசியவிட்டார்கள். மதுரையில் இருந்து மாளவியா என்ற வழக்கறிஞரை அழைத்துவந்து விசாரித்தார்கள். விசாரணை முடிந்து வந்த மாளவியா, ’நானும் விஷ்ணுப்ரியாவும் லவ் பண்ணோம்னு ஒத்துக்கச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்க’ என அதிரடியாக பேட்டி கொடுக்கவும்,  போலீஸ் குட்டு வெளிவந்தது. அடுத்ததாக கோயில் பூசாரி விஜயராகவனை வளைத்துப் பார்த்தார்கள். அதுவும் பல்லிளித்துவிட்டது.
இந்த இடைப்பட்ட பரபரப்பில் கீழக்கரை டி.எஸ்.பி  மகேஸ்வரி சுத்தமாக ஆஃப் செய்யப்பட்டுவிட்டார். ஊடகங்களுக்கும் அடுத்தடுத்த பரபரப்புச் செய்திகள் கிடைத்தும் விஷ்ணுபிரியாவை மறந்துவிட்டார்கள். ஆக, இறுதிவரை அந்த அதிகாரியை விசாரிக்கவும் இல்லை.. அவர் மீது நடவடிக்கையும் இல்லை. அதன் பின்னணியும் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது!

விசாரணை படத்தில் சொல்வது போல இன்றைக்கு விஷ்ணுப்ரியாவின் வழக்கு ஒருத்தர் மூலம் முடிக்கப்பட்டிருந்தால், நாளை அவருடைய வழக்கு இன்னொருவரை வைத்து முடிக்கப்படும். இதுதான் இன்று நம் போலீஸ் சிஸ்டம்.
வாழ்க... வளர்க..!
-எம்.புண்ணியமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக