திங்கள், 15 பிப்ரவரி, 2016

நடிகை பிராணிதா கார் விபத்தில் உயிர் தப்பினார்

ஐதராபாத், தெலுங்கானாவில் நடந்த கார் விபத்தில் நடிகை பிரணிதா உயிர் தப்பினார். அவருடன் சென்ற 2 பேர் காயம் அடைந்தனர்.
முன்னணி கதாநாயகி கார்த்தி ஜோடியாக ‘சகுனி’ படத்தில் நடித்தவர் பிரணிதா. ‘மாசு’ படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பிரணிதாவுக்கு 23 வயது ஆகிறது. அவரது சொந்த ஊர் பெங்களூரு.
பிரணிதா நேற்று தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் துணிக்கடை திறப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும், காரில் ஐதராபாத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடைய தனி உதவியாளர், டிரைவர் மற்றும் 2 பேரும் அதே காரில் சென்றனர்.

விபத்து நல்கொண்டா மாவட்டம் மோதே போலீஸ் நிலையம் அருகே ஒரு வளைவில் கார் சென்றபோது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர், காரை லேசாக திருப்பினார். அப்போது கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பிரணிதா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கார் டிரைவருக்கும், மற்றொருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அருகில் சாலைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சிலர், ஆம்புலன்சை வரவழைத்து, காயமடைந்த 2 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நடிகை பிரணிதாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று மோதே போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் ராம் ஆஞ்சநேயலு தெரிவித்தார்.
டுவிட்டரில் பிரணிதா இந்த விபத்து பற்றி நடிகை பிரணிதா, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் எழுதி இருப்பதாவது:–
நான் நலமாக இருக்கிறேன். கவலைப்பட எதுவும் இல்லை. என் உதவியாளர் காயம் அடைந்துள்ளார். ஆனாலும், நாங்கள் எல்லோரும் பத்திரமாகவே இருக்கிறோம். உரிய நேரத்தில் ஆம்புலன்சை வரவழைத்த சாலைப் பணியாளர்களுக்கு பெரிய நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர். மறைந்த என்.டி.ராமராவ் பேரனும், நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர் கடந்த 2009–ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்து விட்டு காரில் திரும்பியபோது இதே இடத்தில்தான் விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  dailythanthi.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக