திங்கள், 8 பிப்ரவரி, 2016

தமிழிசையின் வீட்டு திருமணம் கலைஞர், இளங்கோவன்,ஜெயலலிதா......சகலருக்கும் அழைப்பு

சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திடீரென காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது. மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்கத்தான் சத்தியமூர்த்திபவனுக்கு தாம் வந்ததாக தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்ததால் பரபரப்பு ஓய்ந்தது. மேலும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க தமிழிசை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றாக கூடுவது என்பது எப்போதாவதுதான் அரிதாக நடைபெறும். அதுவும் ஒரு கட்சியின் அலுவலகத்துக்கு மற்றொரு கட்சித் தலைவர் செல்வதெல்லாம் 'தேர்தலின்' போது மட்டுமே சகஜமாக நடைபெறும். அதுவும் மிகக் கடுமையான விமர்சித்து கொள்ளும் தலைவர்களின் சந்திப்புகள் பரபரப்பைத்தான் ஏற்படுத்தும். அண்மையில் கரகாட்டம் ஆடும் பெண்ணைப் போல இருக்கிறார் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என கிண்டலடித்திருந்தார் இளங்கோவன். இதற்கு தமிழிசையும் பதிலடி கொடுத்திருந்தார்
சத்தியமூர்த்தி பவனில் தமிழிசை இந்நிலையில் இன்று திடீரென காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு பாஜக கொடியுடன் ஒரு கார் நுழைய ஏகத்துக்கும் பரபரப்பாகிவிட்டது. அதுவும் வந்திறங்கியது தமிழிசை சவுந்தரராஜன் என்றதும் கதர்சட்டைக்காரர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை
மகன் திருமணம்.. அவரை கோபண்ணா உள்ளிட்டோர் வரவேற்று இளங்கோவன் அறைக்கு அழைத்து சென்றனர். அப்போதுதான் மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க தமிழிசை வந்திருக்கிறார் என்பதை காங்கிரஸ் கட்சியினர் தெரிந்து கொண்டனர்.
தமிழிசை சவுந்தரராஜன் மகன் டாக்டர் எஸ்.சுகநாதனுக்கும், கோயம்புத்தூரை டாக்டர் எஸ்.திவ்யாவுக்கும் சென்னையில் பிப்ரவரி 17-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணம் நடைபெறும் இடமும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம்தான்.
கருணாநிதியையும் சந்திக்கிறார்... இதேபோல் திமுக தலைவர் கருணாநிதியை தமிழிசை சந்தித்து பேச இருப்பதாக காலையில் தகவல் பரவியது. திமுக- பாஜக இடையே கூட்டணி அமையும் எனக் கூறப்பட்டு வருவதால் இச்சந்திப்பு செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்பின்னர்தான் மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க தமிழிசை சவுந்தரராஜன் கோபாலபுரம் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இருந்தபோதும் இச்சந்திப்பில் கூட்டணி தொடர்பாக இருவரும் விவாதிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக